Published:Updated:

உமர் அப்துல்லாவின் வைரல் புகைப்படம் இந்தியச் சமூகத்துக்குச் சொல்லும் செய்தி என்ன?

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

கண்ணாடி இல்லாத எம்.ஜி.ஆர், மஞ்சள் துண்டு இல்லாத கலைஞரைப் பார்க்கையில், தமிழக மக்கள் எவ்வாறு உணர்வார்களோ... அதற்குச் சமமானதொரு விஷயமே, ஷேவ் செய்யாத உமர் அப்துல்லாவின் புகைப்படம் உருவாக்கியிருக்கும் தாக்கம்.

கடந்த ஆறு மாதங்களாக வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டித்து வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரேதேசங்கள், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சிறுகச் சிறுக விடுதலைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தற்போதுதான் அங்கு இணைய சேவை பெயரளவில் உயிர்பெற்று வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, தற்போது 2ஜி சேவை மட்டுமே அங்கு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அரசு அனுமதித்த இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இன்றைய சூழலில், அடிப்படைத் தேவைகளுக்கான விஷயங்களே ஒரு சராசரி காஷ்மீரிக்கு ஆடம்பரமாக, அசாத்தியமான ஒன்றாக விளங்குகிறது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை எடுத்த மத்திய அரசு, ஏற்கெனவே ராணுவமயமான அந்த மாநிலத்தில் மேலும் படைகளைக் குவித்தது. அமர்நாத் பயணிகளைப் பாதியிலே வெளியேறுமாறு உத்தரவிட்டது. அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் தடுப்புக் காவலில் சிறை வைத்தது. தடுப்புக் காவலில் இருந்த பல்வேறு தலைவர்கள், கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முப்தி, பாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் இன்றளவும் விடுவிக்கப்படவில்லை. உமர் அப்துல்லா, ஸ்ரீநகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையான ஹரி நிவாஸில் தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் வெளியுலகத் தொடர்பு முற்றிலுமாக அறுந்துபோனது. பாரூக் அப்துல்லாவை சந்திக்க அவரது கட்சியின் மூத்த தலைவர்களே உச்ச நீதிமன்றம் வரை மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி, கட்டுப்பாடுகளுடன்தான் சந்திக்க முடிந்தது. ஆகஸ்ட் 5-ம் தேதி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. சற்று நீண்டு வளர்ந்த தாடியுடன் உமர் அப்துல்லா சிரித்துக் கொண்டிருக்கும் அந்தப் புகைப்படம், இந்திய அளவில் பேசுபொருளானது.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

தமிழகத்திலிருந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி, சீதாராம் யெச்சூரி எனப் பல அரசியல் தலைவர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் உமர் அப்துல்லாவின் புகைப்படத்தை அவர்களின் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி, கடந்த ஆறு மாதங்களாக தடுப்புக் காவலில் தலைவர்கள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அவர்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். இந்தியாவின் ஜனநாயகம் தேய்ந்துகொண்டு செல்வதை இந்தப் புகைப்படம் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் விவாதங்கள் எழுப்பப்பட்டன.

கண்ணாடி இல்லாத எம்.ஜி.ஆர், மஞ்சள் துண்டு இல்லாத கலைஞரைப் பார்க்கையில், தமிழக மக்கள் எவ்வாறு உணர்வார்களோ... அதற்குச் சமமானதொரு விஷயமே, ஷேவ் செய்யாத உமர் அப்துல்லாவின் புகைப்படம் உருவாக்கியிருக்கும் தாக்கம். தன்னைப் பராமரித்துக்கொள்ளக்கூட அவர் அரசால் அனுமதிக்கப்படவில்லை என்கிற எண்ணத்தையே அந்தப் புகைப்படம் மக்கள் மத்தியில் உணர்த்தியிருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்க்கும் அம்மாநில மக்களின் குரல்கள் வெளியுலகிற்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே, அங்கு இணையத்தடை போன்ற கட்டுப்பாடுகள் காலவரையின்று விதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதை மீறியும் சில சர்வதேச ஊடகங்கள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பான செய்திகள், காணொளிகளைப் பதிவுசெய்திருக்கின்றன.

நீதித்துறை
நீதித்துறை
காஷ்மீர் டு கன்னியாகுமரி... ஆபரேஷன் ‘பிளாக்‌ஷீப்’ - தலைமறைவான குடும்பங்கள்! - வலை வீசும் என்.ஐ.ஏ

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் கருத்தை முடக்குவதில், அரசுக்குப் போட்டியாக நீதித்துறை செயல்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஹேபியஸ் கார்பஸ் வழக்குப் போட்டு ஜம்மு - காஷ்மிரில் தலைவர்களைச் சந்திக்கச் சென்றவர்கள் திரும்பிவந்து ஊடகங்களிடம் பேசக்கூடாது என்கிற தேவையற்ற கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றமும் விதித்துள்ளது. டெல்லிக்கு சிகிச்சை பெற வந்த காஷ்மீர் எம்.எல்.ஏ யூசுப் தாரிகாமி ஊடகத்திடம் பேசக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை விதித்ததும் உச்ச நீதிமன்றமே! தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்கள் பரோலில் வருகிறபோது மட்டுமே இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். காஷ்மீர் தொடர்பான மனித உரிமை வழக்குகளைக்கூட உச்சநீதிமன்றம் கையாண்ட விதத்தைப் பல முன்னாள் நீதிபதிகளுமே கடுமையாக விமர்சித்திருந்தனர். காஷ்மீர் தலைவர்கள் அவ்வாறு என்ன தவறு செய்துவிட்டனர் என்கிற கேள்வி, அதிகாரத்தின் செவிகளை எட்டியதாகத் தெரியவில்லை.

உமர் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து, அவரை ஹரி நிவாஸில் அவரது சகோதரி சந்தித்தார். அப்போதே, தன் சகோதரர் தாடியுடன் இருப்பதாகவும், தான் விடுதலை செய்யப்படும் வரை அவர் முகச்சவரம் செய்வதில்லை என்று அறிவித்திருப்பதாகவும் கூறியிருந்தார். அக்டோபர் மாதம் முதல்முறை வெளியான உமர் அப்துல்லாவின் புகைப்படத்தில், அவர் ஓரளவு வளர்ந்த தாடியுடன் இருந்தது, அப்போதே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த புகைப்படமும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் இருக்கும் சில பத்திரிகையாளர்களும்கூட, உமர் அப்துல்லாவின் புகைப்படம், அவ்வளவு கடுமையான தடுப்புக் காவலைத் தாண்டி எவ்வாறு வெளிவந்தது என்ற கேள்வியையே முன்வைக்கின்றனர். அந்த அளவிற்கு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் என்பது யதார்த்தமாக்கப்பட்டிருக்கிறது.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

இந்த நிலையில், இந்தப் புகைப்படம் குறித்துப் பேசிய காஷ்மீர் மாநில பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் அல்தாஃப் தாகூர், "இது எடிட் செய்யப்பட்ட புகைப்படமே தவிர, உண்மையான புகைப்படம் கிடையாது. அவர் தடுப்புக் காவலில் இருக்கிறார். அவருக்கு அங்கு சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தற்போதுதான் அமைதி நிலவுகிறது. மத்திய அரசின் முயற்சிகளால் காஷ்மீர் இப்போதுதான் வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைக்கிறது. அதைக் கெடுத்து, மக்களிடம் அமைதியின்மையைப் பரப்பவே போலியாக இந்தப் புகைப்படம் பரப்பப்பட்டுள்ளது" என்கிறார்.

அதேசமயம், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் (National Conference) கட்சியின் மாகாண செய்தித்தொடர்பாளர் இம்ரான் நபி தார் பேசுகையில், "எங்கள் தலைவர் அங்கு சிரித்துக்கொண்டிருப்பது, பா.ஜ.க-வின் அடக்குமுறையை எதிர்த்து அவர் உறுதியோடு களத்தில் நிற்கிறார் என்பதற்கு அடையாளம். தனிப்பட்ட முறையில் எனக்கு அது பெரும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவர் நிறைய தாடியோடு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி அவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் பிரச்னை இன்று சர்வதேச பிரச்னையாகப் பரிணமித்திருக்கிறது. உலகத் தலைவர்கள் காஷ்மீர் குறித்துப் பேசுகிறார்கள். பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றங்களில் ஜம்மு - காஷ்மீர் பற்றி விவாதிக்கப்படுகிறது, தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. இன்று, உலகின் ஜனநாயக நாடுகள் தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு, காஷ்மீர் நடவடிக்கையும், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி தொடர்பாக எழுந்த எதிர்வினைகளுமே காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஜனநாயக நாடுகள் தரவரிசை
ஜனநாயக நாடுகள் தரவரிசை
`உண்மையில் இது உமர் அப்துல்லா தானா?!' - வைரல் போட்டோவால் கலங்கிய மம்தா

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரிலிருந்து வருகிற சிறு பொறிகூட எரிதழலாக உருப்பெரும். தற்போது வெளியாகியிருக்கும் உமர் அப்துல்லாவின் புகைப்படம் அவ்வாறானதே! காஷ்மீரை முற்றிலுமாக மறந்துவிட்டே இந்தியப் பொதுச் சமூகத்தின், எதிர்க்கட்சிகளின் மறதியைக் களைத்து, மனசாட்சியைச் சற்றே எழுப்ப முற்படும் ஒரு சின்ன துருப்புச்சீட்டே உமரின் புகைப்படம். காஷ்மீர் தொடர்பாக அங்கு சென்று வந்தவர்கள், மற்ற பகுதிகளில் வசிக்கும் காஷ்மீரிகளின் குரலை மட்டுமே வெளியுலகம் கேட்டுவருகிறது. உமர் அப்துல்லா போன்று பல லட்சம் காஷ்மீரிகளின் குரல்கள் பெரும்பான்மையின் ஒப்புதலோடு ஆறு மாதங்களாக முடக்கப்படுள்ளதையே இந்த வைரல் புகைப்படம் உணர்த்துகிறது. இந்த வரலாற்றில் நாம் வெறும் மௌன சாட்சியங்களே!

அடுத்த கட்டுரைக்கு