Published:Updated:

ஒமைக்ரான் பாதிப்பு: `தமிழகத்தில் ஒன்றரை லட்சம் படுக்கைகள் தயார்!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்
News
மா.சுப்பிரமணியன்

``ஓமைக்ரான் பாதிப்புகள் அதிகமாகும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் படுக்கைகள் தயாராக இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனும் தயார்நிலையில் இருக்கிறது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் பணிகள் முடிவுற்ற நிலையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் பார்வையிட்டனர். மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்புகள், மாணவர்களின் வகுப்பறை, உணவுக்கூடம், தங்கும் விடுதி, ஆய்வகங்களை ஆய்வு செய்தனர். அடுத்த மாதம் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைப்பதற்காக பிரதமர் தமிழகம் வர வாய்ப்பிருப்பதால், அவர் வந்து இறங்கக்கூடிய ஹெலிகாப்டர் தளங்களையும், அவர் செல்லக்கூடிய பாதைகளையும் ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்த அமைச்சர்கள்
ஆய்வு செய்த அமைச்சர்கள்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். தற்போது வரை தமிழகத்தில் 69 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயிலும் அளவுக்கு கட்டமைப்புகள் தயாராக இருக்கின்றன. இந்தியா முழுவதும் எட்டு மருத்துவருக்கு ஒரு மருத்துவர், தமிழகத்தில் பயின்ற அல்லது தமிழக மருத்துவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்போது 1,450 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்வார்கள்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து அவர் பேசுகையில், ``பன்னாட்டு விமான நிலையங்களுக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டபோது வெளிநாட்டிலிருந்து வந்த 98 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதாகச் சந்தேகப்பட்டு, 98 பேரின் மாதிரிகள் ஒன்றிய அரசின் சோதனைக் கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றில் 13 மாதிரிகளுக்கான முடிவுகள் நமக்கு கிடைக்கப்பெற்று, அதில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு அவரும் சிகிச்சையில் தற்போது நலமாக இருக்கிறார்.

அமைச்சர்கள் ஆலோசனை
அமைச்சர்கள் ஆலோசனை

90 நாடுகளில் ஒமைக்ரான் பரவல் இருக்கிறது. பெரிய அளவில் பதற்றப்படவேண்டியதில்லை. ஆனால், இது வேகமாகப் பரவும் தொற்று என்பதால் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்ட நாடுகளில் இந்தத் தொற்று வேகமாகப் பரவவில்லை. முழுமையாக தடுப்பூசி போடப்படாத நாடுகளில் மட்டும்தான் இந்தத் தொற்று வேகமாகப் பரவுகிறது. இருப்பினும் முகக்கவசம் அணிவது, இரண்டு தடுப்பூசிகளைப் போடுவதால் மட்டுமே இந்த நோய்ப் பரவலுக்கான சங்கிலியை உடைக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நமது நாட்டின் தடுப்பு மருந்துகளான கோவாக்ஸின், கோவி ஷீல்டு பெரிய அளவில் உதவுகின்றன. தமிழகம் முழுவதும் 90 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்காகக் காத்திருக்கிறார்கள். விரைவில் அவர்களுக்கான தடுப்பூசிகள் போடப்படும். ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகமாகும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் தயாராக இருக்கின்றன.

அமைச்சர்கள் ஆய்வு
அமைச்சர்கள் ஆய்வு

இந்த மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனும் நம்மிடம் தயார் நிலையில் இருக்கிறது. கடந்த ஆட்சியில் 220 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்ச்சிஜன் கையிருப்பு இருந்தது. ஆனால், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஏழு மாதங்களில் 1,400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு இருக்கும் அளவுக்குக் கொள்கலன்களையும், உற்பத்தி நிலையங்களையும் அதிகப்படுத்தியிருக்கிறோம்” என்றார்.