Published:Updated:

`இஸ்ரோவில் மோடி காலடி எடுத்து வைத்த தருணம்..!’ - சர்ச்சையைக் கிளப்பிய குமாரசாமி

HD Kumaraswamy
HD Kumaraswamy

பிரதமர் மோடி இஸ்ரோவுக்குச் சென்றதன் விளைவாகவே சந்திரயான் 2 பின்னடைவைச் சந்தித்ததாக குமாரசாமி பேசியுள்ளார். 

நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.

ISRO
ISRO

ஆனால், நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. சந்திரயான் 2 நிலவில் இறங்குவதைப் பார்வையிட செப்டம்பர் 6-ம் தேதி இரவு பிரதமர் மோடி இஸ்ரோ மையத்துக்கு வந்திருந்தார்.

`எதிர்காலத் திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள்!’ - விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ சிவன் உரை

சந்திரயான் 2 பின்னடைவுக்கு பிரதமர் மோடியின் வருகைதான் காரணம் என நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Modi in ISRO
Modi in ISRO

``2008 - 09-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (காங்கிரஸ்) சந்திரயான் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதே ஆண்டில்தான் சந்திரயானுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகக் கடந்த 10 -12 வருடங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வந்தனர்.

அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் சந்திரயான் 2 திட்டத்துக்கு பின்னால் நான்தான் உள்ளேன்’ என்பதை இந்திய மக்களுக்குக் காட்டி ஒரு விளம்பரத்துக்காக மட்டுமே கடந்த செப்டம்பர் 6-ம் தேதி இரவு பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு வந்திருந்தார். அவர் இஸ்ரோவில் காலடி எடுத்து வைத்த தருணம்தான் விஞ்ஞானிகளுக்கு துர்திர்ஷ்டமாக அமைந்துவிட்டது என நான் நினைக்கிறேன்.

HD Kumaraswamy
HD Kumaraswamy

மோடி இஸ்ரோவுக்குச் சென்ற அன்றைய தினம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் மற்றும் சில மத்திய அமைச்சர்களும் அவருடன் சென்றனர். ஆனால், அவர்களுக்கு இஸ்ரோவில் எந்த வேலையும் இல்லை. அதனால் வர வேண்டாம் எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டார் மோடி. மத்திய அரசு எங்கள் மக்களை இப்படித்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது’ என்று பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு