Election bannerElection banner
Published:Updated:

விலகிய வீர முத்தரையர் சங்கம்; சமாதானம் பேசிய பா.ஜ.க - ஒரு சீட் கொடுக்கிறதா அ.தி.மு.க?

அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி - இரட்டை இலை
அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி - இரட்டை இலை

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகியதாக அறிவித்த நிலையில் நேற்று வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கிவிட்டன. இன்று மாலை அல்லது ஒரு நல்ல நேரத்தில் தி.மு.க-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படி அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கும்போது அ.தி.மு.க-வில் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் கூட்டணியிலிருந்து விலகின. மேலும், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து மூன்றாவது பெரிய கட்சியான தே.மு.தி.க-வும் தொகுதி உடன்படிக்கையில் இழுபறி நீடித்ததால் கூட்டணியைவிட்டு விலகுவதாக அறிவித்துள்ளது.

கே.கே.செல்வக்குமார்
கே.கே.செல்வக்குமார்

தே.மு.தி.க விலகிய நிலையில், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அந்தக் கட்சிக்கு மேலும் ஒரு சிக்கலாக அமைந்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

``30 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்குவோம்’’ - முத்தரையர் சங்கத்தின் கே.கே.செல்வக்குமார் அதிரடி!

``முக்குலத்தோர் வாக்குகள் குறைவாகக் கிடைக்கும் டெல்டா, தென் தமிழக மாவட்டங்களில், வலையர் சமூகத்தின் வாக்குகளைவைத்து சரிக்கட்டலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது அ.தி.மு.க தலைமை. அதனால்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலையர் வாழ்வுரிமை மாநாட்டிலெல்லாம் கலந்துகொண்டார். இப்படித் தங்களுக்கு முதல்வர் பழனிசாமி அளித்த முக்கியத்துவத்தை வைத்து இந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகள் வரை கேட்டுப் பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டு காத்திருந்திருக்கிறார் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.செல்வக்குமார். ஆனால், `தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஓர் இடம்கூடத் தர முடியாது. மற்ற சிறிய அமைப்புகளைப்போல அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தாருங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என அ.தி.மு.க தலைமை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனால், கோபமடைந்த செல்வக்குமார் அ.தி.மு.க-வுக்கு வீர முத்தரையர் சங்கம் அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்தார். ஏற்கெனவே முக்குலத்தோர், இஸ்லாமியர்கள் வாக்குகளை இழந்து தவித்துவரும் அ.தி.மு.க-வுக்கு தே.மு.தி.க விலகல் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. தற்போது வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் விலகலும் பல மாவட்டத் தேர்தல் முடிவுகளைக் கடுமையாக பாதிக்கும் என அ.தி.மு.க தலைமை கலக்கத்தில் இருக்கிறது” என்றார்.

கிஷன் ரெட்டி
கிஷன் ரெட்டி

மேலும் அவர் ``இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பா.ஜ.க நிர்வாகி காயத்ரி ரகுராம், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.செல்வக்குமாரை பா.ஜ.க தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டியிடம் அழைத்துச் சென்று சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பலனாக தற்போது செல்வக்குமாருடன் அ.தி.மு.க தலைமை மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. பெரும்பாலும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்துக்கு ஒரு தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு