Published:Updated:

`அமைதியாகவும் நேர்மையாகவும் போராடுகிறோம்!' -அஸ்ஸாமில் திரண்ட 1 லட்சம் மாணவர்கள் #CAA

இந்து மற்றும் இஸ்லாமியர்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாகக் குடியேறும் யாரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

மாணவர்கள்
மாணவர்கள் ( facebook )

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்தே அஸ்ஸாம் மாநிலத்தில் மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது.

தொடர்ந்து, நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்த நிலையில், அஸ்ஸாமில் நேற்று அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்தினர் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

அஸ்ஸாமிலுள்ள திப்ரூஹர் மற்றும் தின்சுகியா ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்தினர் பேரணியை அறிவித்தனர். இதேபோல தேஸ்பூர், டெர்கான் மற்றும் கோலாகாட் ஆகிய மாவட்டங்களிலும் பேரணிகள் நடைபெற்றன.

அஸ்ஸாமிலுள்ள பல்வேறு மக்களின் கோரிக்கைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக மாநில அரசு அறிவித்தபோதிலும் இந்தப் பேரணி நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

``இந்தியா அளிக்கும் குடியுரிமை எங்களுக்குத் தேவையில்லை!'' - பாகிஸ்தான் இந்து கவுன்சில்

இதுதொடர்பாக பேசிய அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லூரின்ஜோதி கோகாய், ``இந்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். நீண்டகாலமாக கோரிக்கைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அரசு கூறிவருகிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்தும் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இன்னும் நடத்தப்படவில்லை. இந்து மற்றும் இஸ்லாமியர்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாகக் குடியேறும் யாரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது அஸ்ஸாமிலேயே மிகப்பெரியப் பேரணியாகும்” என்று கூறியுள்ளார்.

அஸ்ஸாம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள்
மாணவர்கள்

தேஸ்பூரில் நடந்த பேரணியில் பேசிய அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்தின் ஆலோசகர் சமுஜ்ஜா குமார் பட்டாச்சார்யா, ``பா.ஜ.க-வினரின் நடவடிக்கைகளை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அஸ்ஸாம் மக்களின் மொழி, கலாசாரம், அடையாளம் ஆகியவற்றைக் காப்பதாக ஒருபக்கம் சொல்கிறார்கள். மற்றொரு பக்கம், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் வழியாக வங்காள தேசத்தினரைக் கொண்டுவருகிறார்கள்” என்று பேசினார்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் பேசிய அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் தீபங்கா குமார் நாத், ``குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அமைதியாகவும் நேர்மையான முறையிலும் சட்டபூர்வமாகவும் போராட வேண்டும்” என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.