Published:Updated:

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ : எதிர்க்கும் திமுக சொல்லும் காரணம் என்ன?!

ஒரே நாடு..ஒரே தேர்தல்!

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்காக அரசைக் கலைத்தால் தேர்தலுக்காகச் செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம்.

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ : எதிர்க்கும் திமுக சொல்லும் காரணம் என்ன?!

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்காக அரசைக் கலைத்தால் தேர்தலுக்காகச் செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம்.

Published:Updated:
ஒரே நாடு..ஒரே தேர்தல்!

நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. `அடிக்கடி தேர்தல் நடத்துவதால் அதிக செலவாகிறது. மேலும், அரசு நிர்வாகம் மற்றும் மக்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்பவை இத்திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு கூறும் காரணங்களாக இருக்கிறது. `ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, மத்திய சட்டத் துறையின் நாடாளுமன்றக் குழு, மத்திய சட்ட ஆணையத்தை அறிவுறுத்தி உள்ளது.

ஒரே நாடு தேர்தல்
ஒரே நாடு தேர்தல்

இத்திட்டத்துக்குப் பல மாநிலங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இத்திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணியைத் தொடரும் அ.தி.மு.க இதற்கு ஆதரவு தெரித்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை ஜனவரி 16-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, மத்திய சட்ட ஆணையம் கட்சித் தலைமைகளுக்குக் கடிதம் அனுப்பியது.

இந்தநிலையில், தி.மு.க இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

அந்த கடிதத்தில், "1951 முதல் 1967ம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. பின்னர், சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதேநேரம், அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தைச் சுட்டிக்காட்டியும் ஆளுநரும் ஆட்சியைக் கலைக்கலாம். ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காகக் கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வில்சன் எம்.பி
வில்சன் எம்.பி

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதைக் காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது என்பது மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. இந்த திட்டத்துக்காக அரசைக் கலைத்தால் தேர்தலுக்காகச் செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம். எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தொலைதூர வாக்கு பதிவு எனப்படும் ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான கருத்துக்கேற்ப கூட்டத்திலும் தி.மு.க தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க ஜனவரி 31-ம் தேதி வரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு தி.மு.கவை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.