பிரீமியம் ஸ்டோரி

2020-ம் ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஒரே நேஷன்... ஒரே ரேஷன்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையைச் சமீபத்தில் முன்மொழிந்த மத்திய அரசு தற்போது ‘ஒரே நேஷன்... ஒரே ரேஷன்’ எனவும் கூறியிருக்கிறது. இதன் பின்னணிதான் என்ன, அரசாங்கத்தின் நீண்டகால செயல்திட்டம் எதைநோக்கி இருக்கிறது என்கிற வினாக்கள் எழுகின்றன. இதுகுறித்து கொள்கைரீதியாக வேறுபாடுகொண்ட இருதரப்பின் கருத்தையும் கேட்டோம்.

மனுஷ்ய புத்திரன் (தி.மு.க) :

‘‘இந்தியாவுக்கே முன்னோடி யான ஒரு பொது விநியோகத் திட்டத்தைத் தமிழகம் நீண்டகாலமாகச் செயல்படுத்திக்கொண்டிருக் கிறது. 2007-ல் சுப்ரீம் கோர்ட் அமைத்த ஒரு குழு, இந்தியா முழுக்க ஆய்வுசெய்து, ‘மிகச் சிறப்பான பொது விநியோகத் திட்டம் தமிழ்நாட்டில்தான் செயல்படுகிறது’ என அறிக்கை வெளியிட்டார்கள். உணவு என்னும் அடிப்படைத் தேவை, எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்றும் உணவுக்காக மனிதன் இன்னொருவரிடம் அடிமையாகிவிடக் கூடாது என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டத் திட்டம் அது. இதுநாள்வரை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறது. இத்தகையச் சூழலில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நம்முடைய ரேஷன் முறையைச் சிதைத்தார்கள்.

‘கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 75 சதவிகித மக்களுக்குத்தான் ரேஷன், நகர்ப்புறம் வசிப்பவர்களில் 50 சதவிகித மக்களுக்குத்தான் ரேஷன்’ என விதிமுறைகள் கொண்டு வந்தார்கள். வீட்டில் ஏசி இருந்தால்கூட அவர்களுக்கு ரேஷன் கொடுக்கக்கூடாது எனச் சொல்கிறார்கள். இதுதவிர இன்னும் சிக்கலான நிறைய விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். இதில் முக்கிய பிரச்னை என்னவெனில், மத்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர்கள் கொடுப்பதைத் தாண்டி, தமிழக அரசு தன் மாநில நிதியிலிருந்து ரேஷன் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதுவே வருடத்துக்கு ஐயாயிரம் கோடி ரூபாய்.

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்

வட மாநிலங்களிலிருந்து கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இதில் பத்து லட்சம் பேர் குடும்ப அமைப்பில் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இச்சட்டத்தின்படி இவர்கள் அனைவருக்கும் ரேஷன் கொடுக்க வேண்டுமெனில், ஆகக்கூடிய கூடுதல் செலவை மத்திய அரசு கொடுக்குமா? இல்லையெனில் மாநிலத்துக்கு இது மிகப் பெரிய நிதிச்சுமையாக இருக்காதா? இது முதல் கேள்வி. இரண்டாவதாக, அவர் களுக்கு என்ன மாதிரியான உணவுப்பொருள் களைக் கொடுப்பீர்கள். பலதரப்பட்ட மக்கள் ஒரு மாநிலத்தில் இருக்கிற பட்சத்தில் பொது வான உணவுப்பொருள்களை எப்படிக் கொடுக்க இயலும்?

‘ஒரே தேசம் ஒரே தேர்தல், ஒரே நேஷன் ஒரே ரேஷன்’ என்பவையெல்லாம் முழுக்க மக்களுக்கு எதிரானதோ, கெடுதலோ இல்லை. ஆனால், மாநில அரசு என ஒன்று இருக்கக் கூடாது என்கிற பா.ஜ.க-வின் நீண்டகால திட்டத்தின் செயல்பாடுகள்தான் இவை யெல்லாம். கல்வி, உணவு, தேர்தல்முறை என எதுவுமே மாநில அரசின் கையில் இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். இன்று மத்திய அரசுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மாநில அரசுகள்தான். மாநில அரசின் திட்டங்கள் வழியாகத்தான் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு மக்களிடையே இருக்கிறது. அதைப் பலவீனப்படுத்தி நாடு முழுவதற்கும் ஒரே கட்சி என மாற்ற நினைக் கிறார்கள். ஆகவே மாநில அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்கிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ்-ஸின் செயல்திட்டம். கெடு வாய்ப்பாகத் தற்போதைய தமிழக மாநில அரசு அதற்குத் துணை போவதுதான் வேதனையாக இருக்கிறது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கே.டி.ராகவன் (பி.ஜே.பி):

‘‘ரேஷன் கார்டு வெச்சுருக் கோம். வேலை விஷயமா வேற ஊர்ல போயி செட்டில் ஆக வேண்டியிருந்தா அந்த ஊருக்கு, அந்த அட்ரஸ்ல ரேஷன் கார்டு வாங்க எவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு! எத்தனை அதிகாரிகளைப் பாக்கணும்? அதுக்கு எத்தனை முறை அலையணும்னு சாமான்ய மக்களுக்குத்தான் தெரியும். அது கிடைக்கிறவரை அவங்க அரிசியையும் பருப்பையும் அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கு. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைன்னு வந்தா குறிப்பாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த மாநிலத்துக்குப் போனாலும் எந்த மாவட்டத்துக்குப் போனாலும் எந்தத் தாலுகாவுக்குப் போனாலும் அவங்கக்கிட்ட இருக்கிற அதே ரேஷன் அட்டையே போதும். விளிம்பு நிலை மக்களின் நன்மையே இத்திட்டத்தின் முதல் நோக்கம்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

இரண்டாவது முக்கிய அம்சம்... இத்திட்டத்தின் வழியா போலி ரேஷன் அட்டைகளை ஒழிப்பதே. இந்தியாவில இப்போ மூணு கோடி போலி ரேஷன் அட்டைகள் இருக்கு. தமிழ்நாட்டில மட்டும் 10 லட்சம் போலி ரேஷன் அட்டைகள். ஒரு கார்டுக்கு 20 கிலோ அரிசி. ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்ன்னு வெச்சுப்போம். அரிசி மட்டுமல்லாம மத்தப் பொருள்களும் தர்றாங்க. அப்போ அரசாங்கத்துக்கு எவ்வளவு செலவு பாருங்க. அது மட்டுமல்லாம போலி ரேஷன் அட்டை களை வெச்சு வாங்கப்படுற இந்தப் பொருள்களெல்லாம் எங்கே, யாருடைய குடோனுக்குப் போகுது, அது கள்ளச் சந்தையில எப்படியெல்லாம் விற்கப்படுது? இதையெல்லாம் தடுக்கத்தான் மோடி அரசாங்கம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருது. ரேஷன் அட்டையை ஆதார் அட்டையோட இணைக்கும்போது இந்த போலி ரேஷன் அட்டைகள் ஒழிக்கப்படும். எல்லாத்தையும் கண்மூடித்தனமா எதிர்த்து அரசியல் பண்றவங்க ஏழை எளிய மனிதர் களின் பழிச்சொல்லுக்கு ஆளாகாதீங்க. ஒரு நல்ல திட்டத்தை வரவிடுங்க. இதைத்தான் நான் சொல்லுவேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு