செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில்... சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அ.தி.மு.க-வின் 108 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொடிக்கம்பத்தில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்துள்ளார். தற்போது, மாண்டஸ் புயலின் காரணமாக அந்த கம்பத்தில் இருந்த அ.தி.மு.க கொடி சேதமடைந்து காணப்பட்டுள்ளது.

எனவே, அந்த கொடியை கழற்றிவிட்டு புது கொடியை மாற்றுவதற்கான முயற்சியில் அ.தி.மு.க கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கொடியில் மாட்டப்பட்டுள்ள ரோப் கயிற்றை இழுத்தபோது அது கீழே வரவில்லையாம். எனவே, இன்று மாலை ராட்சத கிரேன் உதவியோடு அந்த கொடி கம்பத்தை கழற்றி புதிய ரோப் மற்றும் கொடியை மாற்றுவதற்கு முற்பட்டுள்ளனர்.
அதன்படி, கொடிக்கம்பத்தை கீழே இறக்கி வைத்து, புது ரோப்பை மாற்றி மீண்டும் தூக்கி நிறுத்த முற்பட்டபோது கம்பம் தவறி விழுந்ததில், சூரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் எனும் அ.தி.மு.க நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீஸார் செல்லப்பனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 108 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க கொடிக்கம்பத்தில், கொடியை மாற்றும் முயற்சியின்போது, கொடிக்கம்பம் தவறி விழுந்ததில் அந்தக் கட்சியின் நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மதுராந்தகம் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.