Published:Updated:

ஒன் பை டூ: 5.7 லட்சம் கோடி ரூபாய் கடன்... தமிழகம் தாங்குமா?

மாஃபா பாண்டியராஜன் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
மாஃபா பாண்டியராஜன் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசு சொன்ன விதிகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இவ்வளவு கடனை வாங்கியிருக்கிறோம்.

ஒன் பை டூ: 5.7 லட்சம் கோடி ரூபாய் கடன்... தமிழகம் தாங்குமா?

மத்திய அரசு சொன்ன விதிகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இவ்வளவு கடனை வாங்கியிருக்கிறோம்.

Published:Updated:
மாஃபா பாண்டியராஜன் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
மாஃபா பாண்டியராஜன் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மாஃபா பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்

``கொரோனா காலத்தில் கடன் வாங்கும் உச்சவரம்பு தமிழகத்துக்குத் தளர்த்தப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வலிமையை வைத்துத்தான் நாம் கடன் பெறுகிறோம். தமிழகத்தின் ஜி.டி.பி இந்த ஆண்டு 19 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. அடுத்த வருடம் 23.5 லட்சம் கோடிக்கு மேல் ஜி.டி.பி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வளர்ச்சி, மைனஸ் 7.7 சதவிகிதம். ஆனால் தமிழகத்தின் வளர்ச்சி, ப்ளஸ் 2 சதவிகிதம். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைவிட, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகம்.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

மத்திய அரசு சொன்ன விதிகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இவ்வளவு கடனை வாங்கியிருக்கிறோம். அதுவும் மிகக் குறைந்த வட்டியில்தான் தமிழக அரசு இந்தக் கடன்களை வாங்கியிருக்கிறது. நாம் வாங்கும் கடன்களை மூலதன முதலீடுகளில் போடுகிறோமா அல்லது செலவின முதலீடுகளில் போடுகிறோமா என்பது முக்கியம். இந்த வருடம் மூலதன முதலீட்டை 37,000 கோடிகளுக்கு மேல் அதிகப்படுத்தியிருக்கிறோம். இதனால், தமிழக வருவாயும், தமிழர்களின் வாழ்வாதாரமும் மேலும் உயரும். அதனால், தமிழகத்துக்கு 5.7 லட்சம் கோடி கடன் என்று பார்க்க அதிகமாகத் தெரிந்தாலும். இந்தக் கடனைத் தாங்கக்கூடிய சக்தியும் பலமும் தமிழகத்துக்கு இருக்கிறது. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பொருளாதாரம் புரியாமல், `ஒவ்வொரு தமிழரின் தலையிலும் 62,000 ரூபாய்க்கு மேல் கடன்’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை!’’

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்

``உலகத்திலுள்ள எல்லா நாடுகளும், மாநிலங்களும் கடன் வாங்குவது இயல்புதான். பெரும்பாலும் கடனில்தான் பல்வேறு நாடுகளும், மாநிலங்களும் இயங்குகின்றன. சில ஆண்டுகள் சிங்கப்பூரிலும், பில் கிளின்டன் காலத்தில் சொற்ப காலங்கள் அமெரிக்காவிலும்தான் கடனில்லாமல் இருந்தார்கள். மற்றபடி, அரசுகள் கடன் வாங்குவது புதிதல்ல. ஆனால், உடனுக்குடன் அதிக கடன் வாங்குவதுதான் பெரும் ஆபத்தானது. அதைத்தான் அ.தி.மு.க அரசு தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் ஐந்து மடங்கு கடன் தமிழகத்துக்கு அதிகமாகியிருக்கிறது. கலைஞர் காலத்தில் 2011-ம் ஆண்டுக்கு முன், தமிழக வருமானம் ஒரு ரூபாய் என்றால், வட்டிக்காக 12.30 காசுகள் மட்டுமே சென்றன. அடுத்து வந்த அம்மையார் காலத்திலும் அது 12.25 காசுகளாகக் குறைந்தது. ஆனால், தற்போதுள்ள பொருளாதார மேதைகளால் தமிழக வருமானம் ஒரு ரூபாய் என்றால், 21 காசுகளுக்கும் மேல் வட்டிக்காகவே செல்கிறது. இப்படி வட்டிச் சுமை அதிகரித்தால் முதலீடுகள் குறையும். முதலீடுகள் குறைந்தாலே அடுத்தடுத்த எல்லா வளர்ச்சி நிலைகளும் பாதிக்கப்படும். இதை `Debt Spiral’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நம் பொருளாதாரத்துக்குச் சாவுமணி அடிக்கப் பார்க்கிறார்கள் இந்த அ.தி.மு.க அடிமைகள். கடந்த இரண்டு வருடங்களில் 1,64,677 கோடி நிதிப்பற்றாக்குறை தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கான முறையான தகவல்களே இந்த இடைக்கால பட்ஜெட்டில் இல்லை. தொழில்துறை வளர்ச்சி சரிந்திருக்கிறது. இதையெல்லாம்தான் 15-வது நிதிக்குழு அறிக்கையிலும் சொல்லியிருக்கிறார்கள்.”