அரசியல்
Published:Updated:

ஒன் பை டூ: அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களா?

புகழேந்தி - வீர.வெற்றி பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
புகழேந்தி - வீர.வெற்றி பாண்டியன்

அம்மா சொன்னதுபோல அ.தி.மு.க எனும் பேரியக்கம் இன்னும் பல நூற்றாண்டுகள் நீடிக்க வேண்டுமானால், அதற்குச் சரியான தலைமை சின்னம்மாதான் என நினைக்கும் அனைவருமே ஸ்லீப்பர் செல்கள்தான்.

புகழேந்தி, செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

புகழேந்தி
புகழேந்தி

‘‘ `ஸ்லீப்பர் செல்’ என்ற வார்த்தையே டி.டி.வி.தினகரனால்தான் உருவாக்கப்பட்டது. ‘அ.தி.மு.க-வை மீட்டெடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் தினகரன் முன்மொழிந்த இந்த வார்த்தையை நான் உட்பட பலரும் அப்போது ஏற்றுக்கொண்டோம். ஆனால், அது பச்சைப் பொய்தானே தவிர, அதில் துளியளவும் உண்மையில்லை. அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் என யாரும், எப்போதும் இருந்ததில்லை. அதனால்தான், தினகரனால் இப்போதுவரை ஒரு ஸ்லீப்பர் செல்லைக்கூட நிரூபிக்க முடியவில்லை. ஓசூரிலிருந்து சென்னை வரை மக்கள் வெள்ளத்தில் சசிகலா வருவதுபோல ஒரு ரோடு ஷோவை நடத்தினார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்களை அழைத்துவந்து பாயின்ட் கொடுத்து நிற்கவைத்தார்கள். எங்களின் கேள்வி என்னவென்றால், அ.தி.மு.க-வின் எத்தனை எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், மாவட்ட, நகர, ஒன்றியச் செயலாளர்கள் சசிகலாவை வரவேற்றார்கள்? ஒருவர்கூட இல்லையே! ‘தீவிரமான நடவடிக்கையில் சசிகலா என்றைக்கும் ஈடுபட மாட்டார். இந்தக் கட்சிக்கும் ஆட்சிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் எந்தக் காலத்திலும் செயல்பட மாட்டார்’ என்று பல காலமாக நான் சொல்லி வருகிறேன். ஆகவே, ஸ்லீப்பர் செல் என்பதெல்லாம் தினகரனின் கனவு. அது ஒருபோதும் நிறைவேறாது!’’

வீர.வெற்றி பாண்டியன், செய்தித் தொடர்பாளர், அ.ம.மு.க

வீர.வெற்றி பாண்டியன்
வீர.வெற்றி பாண்டியன்

‘‘அம்மா சொன்னதுபோல அ.தி.மு.க எனும் பேரியக்கம் இன்னும் பல நூற்றாண்டுகள் நீடிக்க வேண்டுமானால், அதற்குச் சரியான தலைமை சின்னம்மாதான் என நினைக்கும் அனைவருமே ஸ்லீப்பர் செல்கள்தான். `அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், மாவட்டச் செயலாளர்கள் சின்னம்மாவைப் பார்க்க, வரவேற்க ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆட்சி, அதிகாரம், டெண்டர் ஆகிய பலன்களைக் கருத்தில்கொண்டு, தேர்தல் அறிவிப்பு வரும்வரை அவர்கள் வெளியில் வர மாட்டார்கள்.

அ.தி.மு.க-வில் 80 சதவிகித தொண்டர்கள், கட்சியைக் காப்பாற்ற சின்னம்மாவின் தலைமையும் டி.டி.வி.தினகரனின் வழிநடத்தலுமே தேவை என நினைக்கிறார்கள். அம்மாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதிக்குப் பிறகு பாருங்கள்... பல மாற்றங்கள் நடக்கும். அதேபோல, அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக சின்னம்மா தொடர்ந்த சிவில் வழக்கும் மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. அதில் தீர்ப்பு சாதகமாக வந்துவிட்டால், நூறு சதவிகித தொண்டர்களும் சின்னம்மா பக்கம் வந்துவிடுவார்கள்!’’