Published:Updated:

ஒன் பை டூ: அரசியல் களத்தில் தரம் தாழ்ந்து பேசுவது யார்?

வைகைச்செல்வன், தங்கம் தென்னரசு
பிரீமியம் ஸ்டோரி
News
வைகைச்செல்வன், தங்கம் தென்னரசு

கட்சியின் தலைவர், இளைஞரணிச் செயலாளர் எனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே தரம் தாழ்ந்து பேசுவது தி.மு.க-வில்தான்

வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

ஒன் பை டூ: அரசியல் களத்தில் தரம் தாழ்ந்து பேசுவது யார்?

‘‘தமிழக அரசியல் மேடைகளில் இரட்டை அர்த்தங்களில் அநாகரிகமாகப் பேசுவதைத் தொடங்கிவைத்ததே தி.மு.க-தான். வெற்றிகொண்டானில் ஆரம்பித்து இன்று உதயநிதி ஸ்டாலின் வரை நாராச நடையில் பேசுவது தொடர்கிறது. இந்திரா காந்தியின் தலையில் அடிபட்டு வழிந்த ரத்தத்தை, தி.மு.க-வினர் என்ன சொன்னார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேடைப் பேச்சுகளில் மட்டுமல்ல... சட்டமன்றத்தில்கூட அவர்கள் அப்படித்தான் பேசியிருக்கிறார்கள். ‘திராவிட நாடு எங்கே இருக்கிறது?’ எனக் கேட்டதற்கு, கருணாநிதி சொன்ன பதில் அனைவரையும் முகம் சுளிக்கவைத்தது. அதுமட்டுமல்ல... ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., அம்மா என அனைவரின் மீதும் தனிமனித கேலியையும், தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தல் பிரசாரத்திலும், முதல்வர் குறித்து உதயநிதி ஸ்டாலின் மிகவும் தரம் தாழ்ந்து பேசினார். அவர் மட்டுமா... தி.மு.க தலைவர் ஸ்டாலின், முதல்வரைக் குறிப்பிட்டு ‘நான் கருணாநிதி மவன்டா’ என்று ஒருமையில் பேசுகிறார். கட்சியின் தலைவர், இளைஞரணிச் செயலாளர் எனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே தரம் தாழ்ந்து பேசுவது தி.மு.க-வில்தான்!’’

தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர், தி.மு.க

ஒன் பை டூ: அரசியல் களத்தில் தரம் தாழ்ந்து பேசுவது யார்?

‘‘தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை ஆரம்பித்துவைத்ததே அ.தி.மு.க-வினர்தான். உதாரணத்துக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைவிடவா யாரும் தரம் தாழ்ந்து பேசிவிட முடியும்... அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைத்தான் அவர் எப்போதும் பயன்படுத்துவார். முன்பெல்லாம் கட்சியின் பேச்சாளர்கள்தான் இப்படிப் பேசுவார்கள். ஆனால், தற்போது அமைச்சராக இருப்பவரே அப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். அ.தி.மு.க தலைமையும் அவரைக் கண்டிப்பதை விட்டுவிட்டு, அனைத்து ஊர்களிலும் அவரைவைத்து பொதுக்கூட்டம் நடத்தச் சொல்லியிருக்கிறது. தங்களின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்ற தோல்வி பயத்தில்தான் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது மட்டுமல்ல... கடந்த காலங்களிலும் அ.தி.மு.க-வின் வளர்மதி பேசிய பேச்சுகளை யாரும் பேசியதில்லை. ப.சிதம்பரம், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்களுக்கு, அவர்கள் கொடுத்த வரவேற்பு அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். வேறு எந்த அரசியல் கட்சியாலும். எந்தக் கட்டத்திலும் ஈடுகொடுக்க முடியாத தரம் தாழ்ந்த அரசியல் செய்வது அ.தி.மு.க-வினர்தான்!’’