Published:Updated:

ஜெகனின் ஓராண்டு ஆட்சி! - சாதனைகளும் சர்ச்சைகளும்

ஜெகன் மோகன் ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஜெகன் மோகன் ரெட்டி

ராஜசேகர் ரெட்டி என்பவரை முதல்வராக்கியது காங்கிரஸ் கட்சிதான். ராஜசேகர் ரெட்டியின் தனிப்பட்ட வாழ்க்கையை வேண்டுமானால் ஜெகன் சொந்தம் கொண்டாடலாம்; அவரின் அரசியல் வாழ்க்கையைச் சொந்தம் கொண்டாட அவருக்கு உரிமை இல்லை.

ஜெகனின் ஓராண்டு ஆட்சி! - சாதனைகளும் சர்ச்சைகளும்

ராஜசேகர் ரெட்டி என்பவரை முதல்வராக்கியது காங்கிரஸ் கட்சிதான். ராஜசேகர் ரெட்டியின் தனிப்பட்ட வாழ்க்கையை வேண்டுமானால் ஜெகன் சொந்தம் கொண்டாடலாம்; அவரின் அரசியல் வாழ்க்கையைச் சொந்தம் கொண்டாட அவருக்கு உரிமை இல்லை.

Published:Updated:
ஜெகன் மோகன் ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஜெகன் மோகன் ரெட்டி
சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் கும்பகோணம் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி களேபரப்படுத்தியிருந்தனர்.

போஸ்டர் ஒன்றில், விஜய்க்கும் மேல் ஒருவர் கைகூப்பி வணங்கிக்கொண்டிருந்தார்... கூடவே, ‘வருங்கால தமிழகத்தின் ஜெகன் மோகனாரே...’ என்ற வாசகம்! `ஜெகன் காந்தம்’ ஆந்திரத்தையும் தாண்டி, தமிழ்நாட்டு இளைஞர்களையும் ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஆண்டு, மே 30-ம் தேதி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த 47 வயதேயான ஜெகன் வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்திருக்கிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி, அதை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி முதல்வராக வீற்றிருக்கும் ஜெகன், இந்த ஓராண்டில் நிகழ்த்திய சாதனைகள் என்னென்ன, எதிர்க்கட்சிகள் அவர்மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னென்ன... பார்ப்போம்.

அசராத உழைப்பும், அதிரடி அறிவிப்புகளும்தான் ஜெகனின் அடையாளம். முதியோர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு, விவசாயிகளுக்குக் கடனுதவி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு நிதியுதவி என ஒட்டுமொத்த ஆந்திர மக்களின் இதயத்தையும் கொள்ளை கொண்டிருக்கிறார் ஜெகன். கொடுத்த வாக்குறுதி களில் பாதிக்கும் மேல் நிறைவேற்றிவிட்டார். கொரோனா காலகட்டத்திலும் ஜெகனின் அதிரடிகள் குறையவில்லை. தனியார் மருத்துவ மனைகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது; சலவைத் தொழிலாளர்கள், சலூன் கடைக்காரர்கள் உள்ளிட்ட 2.47 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி அறிவித்தது எனத் தொடர்கின்றன அவரது அதிரடிகள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பழிவாங்கும் அரசியல்!

மறுபுறம், ‘‘ஜெகனின் ஆட்சியில் பழிவாங்கல்கள் அதிகம். அவருடைய விருப்பு வெறுப்பு அரசியலுக்காக ஆந்திராவின் எதிர்காலத்தை பலியிடுகிறார்’’ என்கிறார்கள் ஜெகனின் எதிர்ப்பாளர்கள். ஜெகன் சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்துகொள்வதாக, 11 பக்க குற்ற அறிக்கையை ஆந்திர ஆளுநரிடம் அளித்திருக்கிறார், ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு. ‘என் கட்சியினரை வேண்டுமென்றே பழிவாங்குகிறார்; அரசியல் அமைப்பையே சீர்குலைக்கிறார்; தேவையில்லாமல் தலைநகரை மாற்றுகிறார்; அனுபவமின்மையால் ஆந்திராவைக் கடன்கார மாநிலமாக ஆக்கிவிட்டார்’ போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறார் அவர்.

சந்திரபாபு நாயுடு - ரவிச்சந்திர ரெட்டி - ராமகிருஷ்ண பிரசாத்
சந்திரபாபு நாயுடு - ரவிச்சந்திர ரெட்டி - ராமகிருஷ்ண பிரசாத்

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கோட்டிபட்டி ராமகிருஷ்ண பிரசாத், ‘‘ஜெகன் மோகனின் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓர் ஆண்டிலேயே 84,000 கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுவிட்டது. அதைச் சமாளிக்க, அரசு சொத்துகளை விற்க முயன்றுவருகிறார். அதை எதிர்த்து பல பொதுநல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு தடைகள் வாங்கப்பட்டுள்ளன. முறையான திட்டமிடலும் அனுபவமின்மையுமே இதற்குக் காரணங்கள். மேல்சபையில் எங்கள் கட்சியின் உறுப்பினர் களைத் தாக்குவது, மூத்த தலைவர்கள்மீது தேவையில்லாமல் வழக்கு போடுவது என எதிர்க்கட்சியினரை ஒழிப்பதிலேயே அவரது கவனம் இருக்கிறது. அரசுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தால்கூட வழக்கு போட்டு, சர்வாதிகாரிபோல நடந்துகொள்கிறார் ஜெகன்’’ என்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான ரவிச்சந்திர ரெட்டியோ, ‘‘தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி களில் 90 சதவிகிதத்தை ஒன்பது மாதங்களிலேயே நிறைவேற்றிவிட்டோம். அந்தக் கோபத்தில்தான் எங்களைப் பற்றி அவதூறு பரப்பிவருகிறார்கள். சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் 2,58,000 கோடி ரூபாய்க்குக் கடன்கள் வாங்கப்பட்டன. மேலும், நாயுடு ஆட்சியை விட்டுப் போகும்போது கஜானாவை காலி செய்துவிட்டுத்தான் போனார். நாங்கள் 84,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறோம் என்பதை மட்டும் சொல்லும் அவர்கள், 41,000 கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறோம் என்பதை மறந்தும் சொல்வதில்லை. நாங்கள் வாங்கும் கடனை மக்களுக்காகத்தான் செலவழிக்கிறோம். அவர்களைப்போல், ஆடம்பர செலவுகளுக்கும் அவர்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தவில்லை. அவர்களின் ஆட்சியில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றின்மீதுதான் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்’’ என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுபுறம், ‘‘ராஜசேகர் ரெட்டியின் புகழைவைத்துதான் ஜெகன் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். ராஜசேகர் ரெட்டி என்பவரை முதல்வராக்கியது காங்கிரஸ் கட்சிதான். ராஜசேகர் ரெட்டியின் தனிப்பட்ட வாழ்க்கையை வேண்டுமானால் ஜெகன் சொந்தம் கொண்டாடலாம்; அவரின் அரசியல் வாழ்க்கையைச் சொந்தம் கொண்டாட அவருக்கு உரிமை இல்லை. அடுத்தத் தேர்தலில் உண்மை தெரிந்துவிடும்’’ என்று போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள் ஆந்திர காங்கிரஸ் கட்சியினர். காங்கிரஸ் கட்சியினருக்கும் ஜெகனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமை அப்படி.

காங்கிரஸ் Vs ஜெகன்மோகன் முன்கதை

இரண்டு முறை ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர் ரெட்டி 2009-ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டிக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக, அவரை எதிர்கொள்வதில் காங்கிரஸ் கட்சித் தலைமைக்குப் பல சங்கடங்கள் ஏற்பட்டன. அவரின் மகனான ஜெகனின் விஷயத்திலும் அப்படி ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது காங்கிரஸ் தலைமை. இதனால், ஜெகனுக்கு முதல்வர் பதவியளிக்க மறுத்துவந்தது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், 2011-ம் ஆண்டு, புதிய கட்சியைத் தொடங்கினார். இவருடைய தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியை எல்லோரும் ‘ஒய்.எஸ்.ஆர்’ என்றுதான் அன்போடு அழைப்பார்கள். அந்த வகையில் தந்தையின் பெயரை நினைவூட்டும் வகையிலேயே ‘ஒய்.எஸ்.ஆர்’ கட்சியின் பெயரை உருவாக்கினார். அதாவது, ‘யுவஜன ஸ்ரமிக ரிது காங்கிரஸ்’ (இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் காங்கிரஸ்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை ஆங்கிலத்தில் ‘ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்’ என்று அழைக்கிறார்கள். உண்மையில் நிறைய உழைத்தார். மாநிலம் முழுவதும் கிராமங்கள் ஊடாக நுண் பயணங்களை மேற்கொண்டார். செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் அலை அலையாகக் குவிந்தார்கள். ஆந்திராவின் செல்வாக்குமிக்க தலைவராகக் குறுகியகாலத்தில் உருவெடுத்தார் ஜெகன்.

இடைத்தேர்தல்களில் வெற்றி, 16 மாத சிறைவாசம் எனப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த ஜெகன், 2014-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 67 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். தொடர்ந்து தன் கட்சியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்குச் செல்ல, அப்போதும் அசராமல் காய்களை நகர்த்தினார். தந்தையின் வழியில் அவர் மேற்கொண்ட பாதயாத்திரைகள், 2019 சட்டமன்றத் தேர்தலில் அவரை ஆந்திராவின் முதல்வராக்கின.

மக்களிடம் கற்றுக்கொண்டார்!

ஜெகனிடம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்... அதிகாரிகள், அரசியல்வாதிகள் வழியே அல்லாமல் பல விஷயங்களை நேரடியாக மக்களிடமிருந்து பெற்றார். பாதயாத்திரை சென்றபோது, மக்களின் பிரச்னைகளை மக்களிடமிருந்தே அவர் உள்வாங்கியவை ஏராளம். அதற்கேற்ப திட்டங்களை வகுத்தார். திறம்படச் செயல்படுத்தினார். இதுவே ஜெகனின் வெற்றி சூத்திரம். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் தாய்மார்கள் படும் சிரமத்தைக் கண்ட ஜெகன், ‘அம்மா வொடி’ (அம்மா மடி) எனும் திட்டத்தைக் கொண்டுவந்தார். பள்ளி செல்லும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் அது. இது ஆந்திர மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

‘‘தேர்தல் அறிக்கையில் ஜெகன் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ, அவற்றில் 90 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். ஆட்சி முடியும் கடைசி காலகட்டத்தில் அடுத்த தேர்தலைக் குறி வைத்து அவசர அவசரமாக வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார் ஜெகன். உதவிகள் அனைத்தும் மக்களிடம் நேரடியாகக் கொண்டுசேர்க்கப்படு கின்றன. 50 குடும்பங்களுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

கொரோனா காலத்தில் அந்தத் தன்னார் வலர்கள் செய்த பணிகள்தான் ஆந்திராவில் கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க உதவின. குறிப்பாக, ஊழல் இல்லை. மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜெகன்தான் இங்கு முதல்வர்’’ என்கிறார் ஆந்திராவின் முன்னணி அரசியல் விமர்சகரான மகேஷ் காத்தி.

ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பிறகு ஆந்திர அரசியலில் என்ன நடந்துவிடக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் தலைமை கருதியதோ, அது இந்தப் பத்தாண்டுகளில் நடந்தேவிட்டது. தேசியக் கட்சிகளுக்கு இது ஒரு பாடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism