Published:Updated:

‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை!

ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.என்.ரவி

ஆளுநருக்கு விளக்கமளிக்க ‘பவர்பாயின்ட்’ தயாரிப்புகளைச் செய்யுங்கள்’ என துறைச் செயலாளர் களுக்கு இறையன்பு கடிதமும் அனுப்பினார். இது தி.மு.க அரசுக்குப் பெரிய ‘ஷாக்.’

‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை!

ஆளுநருக்கு விளக்கமளிக்க ‘பவர்பாயின்ட்’ தயாரிப்புகளைச் செய்யுங்கள்’ என துறைச் செயலாளர் களுக்கு இறையன்பு கடிதமும் அனுப்பினார். இது தி.மு.க அரசுக்குப் பெரிய ‘ஷாக்.’

Published:Updated:
ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.என்.ரவி

இந்தியா முழுவதுமுள்ள ஆளுநர்களுக்கும் ஒரே மாதிரியான அதிகாரம்தான் என்றாலும், பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் வெவ்வேறான அரசியல் சூழல் நிலவுகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளாத மாநிலங்களில், அரசின் நிர்வாகச் செயல்பாடுகளில் தலையிடுவது, கொள்கை சார்ந்த விஷயங்களில் எதிர்க் கருத்து தெரிவிப்பது என ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சையைக் கிளப்புகின்றன. மேற்கு வங்கம், தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆளுநர் - முதல்வர்களுக் கிடையிலான மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைதான். ‘உளவுத்துறையில் பணிபுரிந்த ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்படுவதில் உள்நோக்கம் இருக்கிறது’ என்று தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கின. செப்டம்பர் 18-ம் தேதியுடன் அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், அவரின் செயல்பாடுகள், அவர் கருத்தால் உண்டான சர்ச்சைகள், அவருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகள், அவர் செய்திருக்கவேண்டிய பணிகள் குறித்து அரசியல் கட்சிகள், அரசு உயரதிகாரிகள், சமூக-அரசியல் பார்வையாளர்கள் எனப் பல தரப்பினரிடமும் விசாரித்தோம்...

‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை!

டெல்லி சந்திப்பு, பவர்பாயின்ட் அறிக்கை... ‘ஷாக்’ கொடுத்த ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் இடையிலான முதல் மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்... அதாவது ரவி பதவியேற்ற ஒரு மாதத்திலேயே தொடங்கி விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை சர்ச்சைகளுக்கு அளவில்லை.

நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “தி.மு.க அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை அக்டோபர் 12, 2021-ல் ஆளுநர் ரவியிடம் அளித்தார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இந்தப் புகார் பட்டியலோடு அக்டோபர் 23-ம் தேதி டெல்லிக்குப் பறந்த ஆளுநர் ரவி, பிரதமர் மோடியைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் மொத்தமாகவே மாறிவிட்டன. டெல்லியிலிருந்து திரும்பியவுடன், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையைத் தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் கேட்டார் ஆளுநர் ரவி.

அதன்படி, ‘ஆளுநருக்கு விளக்கமளிக்க ‘பவர்பாயின்ட்’ தயாரிப்புகளைச் செய்யுங்கள்’ என துறைச் செயலாளர் களுக்கு இறையன்பு கடிதமும் அனுப்பினார். இது தி.மு.க அரசுக்குப் பெரிய ‘ஷாக்.’ அரசின் நிர்வாகத்தைக் கவனிக்கத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அதிகாரத்துக்குள் அத்துமீறுவதுபோல, ஆளுநர் ரவி அறிக்கை கேட்டது சர்ச்சையாக வெடித்தது. சர்ச்சை வெடி பற்றவைப்பதை ஆளுநர் ரவி அதோடு நிறுத்த வில்லை. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை, திராவிடக் கொள்கைகள், மதம், சனாதனம் எனத் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு நேரெதிராகப் பல்வேறு கருத்துகளை ஆளுநர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறார். அந்தக் கருத்துகளும் சர்ச்சையாகிக்கொண்டே இருக்கின்றன” என்றனர்.

‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை!

நிர்வாகத்தில் தலையீடு... சர்ச்சைக் கருத்துகள்!

சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கவேண்டிய ராஜ்பவன், ஒவ்வொரு மாதமும் புதுப்புதுச் சர்ச்சைகளின் பிறப்பிடமாக உருவாகியிருப்பது அரசியல் அரங்கிலும் சரவெடியைப் பற்றவைத்திருக்கிறது.

அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழகத்தின் கல்விச்சூழல்தான் இங்கிருக்கும் பல்வேறு முற்போக்கான மதச்சார்பற்ற பண்பாட்டை உருவாக்கிவைத்திருக்கிறது. இதில் ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. அதற்கு ஆளுநர் ரவியைப் பயன்படுத்துகிறது. நவம்பர் 1, 2021-ல் கோவை வேளாண் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, ‘தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத்திட்டங்கள் வேளாண் கல்வியில் இணைக்கப்பட்டுள்ளன’ என்றார். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு குரல் எழுப்பி வரும் வேளையில், அதை வரவேற்கும்விதமாக ஆளுநர் ரவி பேசியது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டது. டெல்லி செல்லும்போதெல்லாம், மத்திய கல்வியமைச்சரைச் சந்திக்கிறார் ரவி. மாநிலத்தின் கல்விக் கொள்கையைத் தீர்மானிக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கும்போது, கல்விக் கொள்கையைத் தீர்மானிக்க ரவி யார்?

துணைவேந்தர் தேடுதல் குழு நியமனம் முதல் எல்லாவற்றையும் நேரடியாக ஆளுநரே கண்காணிக்கிறார். ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்கும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறிய வேளையில், ‘என் கையில்தான் அதிகாரமிருக்கிறது’ என்பதை உணர்த்தும்விதமாக, ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தினார். தொடர்ந்து பல்கலைக்கழக விவகாரங்களில், மாநில அரசை அலட்சியப்படுத்தும் நோக்கிலேயே செயல்பட்டுவருகிறார். கல்விப்புலத்தில் தொடர்ந்து அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுவருகிறார் ரவி. என்ன நோக்கத்துக்காக மத்திய அரசு ரவியை தமிழ்நாட்டுக்கு அனுப்பியதோ, அதில் மட்டுமே குறியாக இருக்கிறார் ரவி” என்றனர்.

இது ஒருபுறமிருக்க, ‘‘சனாதன தர்மம்தான் நம் பாரதத்தை உருவாக்கியது. `வேற்றுமையில் ஒற்றுமை’ என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது’’ என சென்னை மயிலாப்பூரில் நடந்த ராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ரவி பேசியது தமிழ்நாட்டில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல, வேலூர் சிப்பாய் புரட்சி நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, ‘‘பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, புவியியல் வெளிப்பாடான திராவிடத்தை இன அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினர்’’ என்றதும் சர்ச்சையானது.

‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை!

மக்களைப் பிளவுபடுத்துகிறாரா ஆளுநர்?

நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், “ஆர்.எஸ்.எஸ்-ஸின் அகில இந்தியத் தலைவராக மோகன் பகவத் செயல்பட்டு வருவதைப்போல, தமிழ்நாட்டின் தலைவராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை வளர்ப்பது மட்டும்தான் அவருடைய முதன்மையான பணியாக இருக்கிறது. `சனாதனம்தான் சரியான கொள்கை’ என்கிறார். மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தக்கூடிய ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதியாகத்தான் அவர் செயல்படுகிறார். கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிராக அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’’ என்றார் காட்டமாக.

சமீபத்தில், ஆளுநர் ரவியைச் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். சந்திப்பை முடித்துவிட்டு, ‘‘எங்கள் சந்திப்பில் அரசியல் பற்றியும் பேசினோம்’’ என ரஜினி பேசியதும் அதிர்வைக் கிளப்பியது. ஆளுநர் மாளிகை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். ‘நாங்கள் அரசியல் பேசினோம்’ என ரஜினி கூறியதற்கு இதுவரை ஆளுநர் ரவி மறுப்பு தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், `ராம ராஜ்ஜியம் அமைப்போம்’, ‘துப்பாக்கியைப் பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால்தான் பதில் சொல்ல வேண்டும்’, `நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்திருக்கிறது’, `புதிய கல்விக் கொள்கை என்பது பாரதிதாசனும் பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் புரட்சிகர ஆவணம்’ எனத் தொடர்ச்சியாக ஆளுநர் ரவி தெரிவித்த கருத்துகள் பெரிய பிரளயத்தையே உருவாக்கின. துணைவேந்தர் மாநாட்டைத் தன்னிச்சையாக நடத்தியது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சரைத் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது என நிர்வாக ரீதியாகவும் அவரின் செயல்பாடுகள் சர்ச்சைக்குள்ளாகின.

‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை!

கமலாலயத்தின் கிளை அலுவலகமா ராஜ்பவன்?

தமிழ்நாட்டுக்கு எத்தனையோ ஆளுநர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், ரவி அளவுக்கு யாரும் சர்ச்சையைக் கிளப்பியதுமில்லை, அரசு நிர்வாகத்தில் தலையிட்டதுமில்லை. ஆளுநர் ரவியின் செயல்பாடுகளைக் கண்டித்து, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி அவர் அளித்த டீ பார்ட்டியை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. `ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?’ என அண்ணா நினைவுநாளில் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் ட்வீட் செய்தார். ‘ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ என நாடாளுமன்றத்தில் தி.மு.க நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குரல் எழுப்பினார். இந்தச் சர்ச்சைகளுக்கு நடுவே சுதந்திர தினமும் வந்தது. அதையொட்டி ராஜ்பவனில் நடந்த ‘டீ பார்ட்டி’-யில், பா.ஜ.க-வினர் அமர்வதற்கென தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. ‘கட்சி சார்பற்று இருக்கவேண்டிய ஆளுநர் மாளிகை, கமலாலயத்தின் கிளை அலுவலகமாக மாறிவிட்டது’ என அடுத்த சர்ச்சை வெடித்தது. பா.ஜ.க-வினர் மட்டுமே விருந்தாளி வீட்டுக்குப் போவதுபோல, ஆளுநர் மாளிகைக்குள் சென்று வருவதும், இதர கட்சிகளுக்கு அனுமதி கிடைப்பதே அரிதாகியிருப்பதும் பிரச்னைகளுக்கு வித்திட்டிருக்கின்றன. இது எதையுமே ரவி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

வன்னி அரசு
வன்னி அரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு நம்மிடம் பேசுகையில், “பா.ஜ.க-வின் மேடைப் பேச்சாளரைப்போல, `திராவிடம் என்ற ஒன்று இல்லை, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா ஒரு தீவிரவாத இயக்கம், தேசியக் கல்விக் கொள்கை அவசியம்’ எனப் பேசிவருகிறார் ஆளுநர் ரவி. மக்கள் பிரச்னைகளைப் பேசக்கூடிய எங்களைப் போன்றவர்களைச் சந்திக்க நேரம் கொடுக்க மறுக்கிறார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்களை எளிதாகச் சந்திக்கிறார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் அஜண்டாவான ‘சோஷியல் இன்ஜினீயரிங்’ என்று சொல்லக்கூடிய சாதிரீதியாக மக்களை ஒருங்கிணைக்கும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார். குறிப்பாக, பட்டியலின மக்களைக் குறிவைத்துத்தான் செயல்பட்டுவருகிறார். இது ஓர் ஆளுநரின் மாண்புக்கு மிக எதிரானது’’ என்றார்.

இவ்வளவு சர்ச்சைகள், எதிர்ப்புகளுக்கு நடுவே, ‘ஆளுநருக்கு எங்கேயிருந்து தகவல் வருகிறது?’ என்பது தலைமைச் செயலகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல், இதர கேடர்களைச் சேர்ந்த தமிழ் அதிகாரிகளிடமிருந்தும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்தான தகவல்கள் வருவதாகச் சொல்கிறது அதிகாரிகள் வட்டாரம்.

‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை!

கைக்குள் அதிகாரிகள்... கண்காணிக்கும் ஆளுநர்?

நம்மிடம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பேசும்போது, “மிகக் குறுகியகாலத்தில் தமிழக அதிகாரிகளை நட்பாக்கிக்கொண்டு, அவர்களின் மூலமே மாநில அரசைக் கண்காணித்துவருகிறார் ஆளுநர் ரவி. அந்தவகையில் அவரது உளவுத்துறை அனுபவம் அவருக்குக் கைகொடுக்கிறது. ஆளுநரின் செயல்பாடுகள், அதிகாரம் தொடர்பாக அரசியலமைப்பின் 200-வது பிரிவு மற்றும் 168-வது பிரிவைத் தெரிந்து வைத்திருக்கிறார். அதன் மூலம் மாநில அரசு கொண்டுவரும் மசோதாக்களுக்கு செக் வைக்கிறார். ஆனால், சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை அவர் அலட்சியப் படுத்துவது தமிழகத்தில் ஏற்கப்பட வில்லை. அவரது தேவையற்ற மதம் சார்ந்த கருத்துகள், நிர்வாகத் தலையீடுகள் இங்கு எடுபடவில்லை.

தமிழ்நாடு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியில் ஆளுநர் ரவிக்கு அக்கறை இருந்தால், மத்திய அரசுடன் பேசி தேவையான நிதியைப் பெற்றுக் கொடுக்க முயன்றிருக்க வேண்டும். ஆனால், அது போன்ற எந்தப் பணியையும் அவர் செய்யவே இல்லை. ஊழலில் ஈடுபட்ட நபர்களின் விவரங்கள் அவரிடம் இருக்கின்றன. ஆனால், இதுவரை யார்மீதும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆளுநர் பரிந்துரைக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டவிதி 154-ன்படி நேரடியாகவோ அல்லது துணை அதிகாரிகள் மூலமாக மறைமுகமாகவோ ஆளுநர் நிர்வாகக் கடமையாற்றலாம். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த அதிகாரத்தை வைத்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மிரட்டும் போக்கையே கடைப்பிடிக்கிறார். தமிழகத்தில் இவ்வளவு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் இருக்கும்போதும், அது குறித்து ஆளுநர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை” என்றனர்.

ஆளுநர் ரவியின் இந்த ஓராண்டு, சர்ச்சைகளும் மோதல்களுமாகவே கடந்துபோயிருக்கிறது. ‘டெல்லியின் ஆசியோடு, ராஜ்பவனையும் தாண்டி தன் அதிகார விரல்களை நீட்டுகிறார். மாநில அரசின் பல்வேறு முயற்சிகளுக்குக் குறுக்கே நிற்கிறார். தனது பொறுப்பை உணராமல் அநாவசியமாகப் பேசுகிறார். குறிப்பாக ஒரு கட்சிக்கு சார்பாக அவர்களுக்கு மட்டும் சாதகமாகச் செயல்படுகிறார்’ உள்ளிட்ட தன் செயல்பாடுகள், பேச்சுகள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆளுநர் காதுகொடுக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின்படி பொறுப்பேற்றிருக்கும் ஆளுநருக்கும் மக்களாட்சியின் மாண்பைக் காக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது!

 “ஆளுநர், மாநிலத்தின் செய்தித் தொடர்பாளர் அல்ல!”

‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை!

“தமிழ்நாட்டுக்கு கவர்னராக வருபவர்கள், இங்கிருக்கும் கட்சிகளின் சித்தாந்தத்தைத்தான் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆளுநர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் பேசுகிறார். அவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆளுநர் உரையில், அரசு தயாரித்துக்கொடுக்கும் உரையை அவர் பேசலாம். ஆனால், அவர் கலந்துகொள்கிற எல்லா விழாக்களிலும் தமிழ்நாடு அரசு சொல்கிறபடிதான் பேச வேண்டும் என்பது முட்டாள்தனம். மாநில அரசின் கொள்கையை மட்டுமே பேச அவர் ஒன்றும் இந்த மாநிலத்தின் செய்தித் தொடர்பாளர் இல்லையே... அறிவியல்ரீதியாக, ஆதாரபூர்வமாக ஆளுநர் பேசுவது இவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டு, கொடுக்கவில்லை என்பதை ஆதாரபூர்வமாக அவர்கள் பொதுவெளியில் வெளியிட வேண்டும்!’’

- வானதி சீனிவாசன் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர்