Published:Updated:

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணியின் ஓராண்டு ஆட்சி!

முதல்வர், கவர்னர்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர், கவர்னர்

தேர்தல் பிரசாரத்தில் `குப்பை வரி ரத்து செய்யப்படும், மின் கட்டணம், சொத்து வரி குறைக்கப்படும்’ என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணியின் ஓராண்டு ஆட்சி!

தேர்தல் பிரசாரத்தில் `குப்பை வரி ரத்து செய்யப்படும், மின் கட்டணம், சொத்து வரி குறைக்கப்படும்’ என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

Published:Updated:
முதல்வர், கவர்னர்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர், கவர்னர்

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கடந்த 7-ம் தேதியுடன் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவுசெய்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, என்.ஆர்.காங்கிரஸ் கொடிகளை எங்கும் காண முடியவில்லை. அதேசமயம் வீதிக்கு வீதி பா.ஜ.க கொடிகள் பரபரவெனப் பறந்துகொண்டிருக்கின்றன. நாள்தோறும் ஒரு பேட்டி என மீடியாவின் உச்சபட்ச வெளிச்சத்தில் வலம்வருகிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை. நிதி நெருக்கடி, கூட்டணிக்குள் உரசல் என ஆயிரம் இருந்தாலும், ஆளுநருடனான நெருக்கத்தால் ஆட்சியை ஓட்டிக்கொண்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமையேற்றிருக்கும் முதல்வர் ரங்கசாமி, மறந்தும்கூட அதை எங்கும் குறிப்பிடுவதில்லை என்பதால் ஏக கடுப்பில் இருக்கிறது பா.ஜ.க. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடந்த ஓர் ஆலோசனைக் கூட்டத்தைத் தவிர, கடந்த ஒரு வருடத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் என்று எதுவும் நடக்கவில்லை. கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டிவிட்டு, முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகக் குறைந்தபட்ச செயல்திட்டக் கூட்டம் கூட்டப்படும். ஆனால் அதையும் முதல்வர் ரங்கசாமி தவிர்த்துவருகிறார். இவை அனைத்தும் கூட்டணியிலுள்ள உரசலையும் விரிசலையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன!

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணியின் ஓராண்டு ஆட்சி!

`தனி மாநில அந்தஸ்து பெறுவதுடன், 8,863 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்யவைப்பேன்’ என்று தேர்தலின்போது கூறினார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், பா.ஜ.க வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், இவை இரண்டும் அப்போதே கவனமாகத் தவிர்க்கப்பட்டிருந்தன. அதனால்தானோ என்னவோ... முதல்வர் ரங்கசாமி இதுவரை டெல்லிக்குச் சென்று பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சந்திக்கவில்லை. பா.ஜ.க-வுடன் நேரெதிர் அரசியல் செய்யும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள்கூட மாநிலத்தின் நலன் கருதி பிரதமரைச் சந்தித்துவிட்டனர். ஆனால், கூட்டணியில் இருந்தும்கூட அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார் ரங்கசாமி. கொரோனாவுக்கு 3,000 ரூபாய், மழை பாதிப்புக்கு 5,000 ரூபாய், பயிர் பாதிப்புக்கு 20,000 ரூபாய் என இவர் வழங்கிய நிவாரணத் தொகைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு 10% உள் ஒதுக்கீடு, ரேஷன் கடைகள் திறப்பு, குப்பை வரி ரத்து, தனி கல்வி வாரியம், புதுச்சேரிக்கென மாநிலப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்’ என என்.ஆர்.காங்கிரஸும், ‘2.5 லட்சம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள், மூடப்பட்ட பஞ்சாலைகள் திறக்கப்படும்’ என்று பா.ஜ.க-வும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன. ‘இரவு 10 மணிக்குமேல் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதினால், 112 என்ற இலவச எண்ணைத் தொடர்புகொண்டால், ஒரு பெண் காவலருடன் காரில் அழைத்துச்சென்று பாதுகாப்பாக விடப்படுவார்கள்’ என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், ‘பெண்களுக்கு இலவச பிங்க் பேருந்து விடப்படும்’ என்று அமைச்சர் சந்திரபிரியங்காவும் அறிவித்திருந்தனர். பிறகு இருவரும் அது குறித்து வாய் திறக்கவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் ஒரு வருட நிறைவு குறித்து, நம்மிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான சிவா, “தேர்தல் பிரசாரத்தில் `குப்பை வரி ரத்து செய்யப்படும், மின் கட்டணம், சொத்து வரி குறைக்கப்படும்’ என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திவிட்டனர். `ரேஷன் கடைகளைத் திறப்போம்’ என்றனர். ஆனால், தற்போதுவரை அங்கு பூட்டுகள்தான் தொங்குகின்றன. `புதுச்சேரி அரசுக்கு மாநில அந்தஸ்தையும், கூடுதல் நிதியையும் பெற்றுவருவோம், கடன்களைத் தள்ளுபடி செய்யவைப்போம்’ என்றனர். ஆனால் அதற்காக முதல்வர் ரங்கசாமி இதுவரை ஒரு முறைகூட பிரதமர் மோடியைச் சந்திக்கவில்லை. மக்கள் படும் வேதனையின் சாட்சிதான் இவர்களின் ஆட்சி” என்றார்.

நமச்சிவாயம், சந்திரபிரியங்கா, லட்சுமி நாராயணன், சிவா
நமச்சிவாயம், சந்திரபிரியங்கா, லட்சுமி நாராயணன், சிவா

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமி நாராயணனிடம் இது குறித்துக் கேட்டோம், “மக்களின் மனசாட்சியைப் பிரதிபலிக்கும்விதமாக, முதல்வர் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். பிரதமரை முதல்வர் சந்திக்கவில்லைதான். அதனால் மாநில வளர்ச்சி எதுவும் தடைப்படவில்லை. எங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் புதிதாக 10,000 பேர்களுக்குப் புதிதாக முதியோர் ஓய்வூதியம் கொடுத்திருக்கிறோம். கொரோனா தொற்றால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறோம். ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்கியிருக்கிறோம். காவல்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தடைப்பட்டுக் கிடந்த 390 காவலர் பணியிடங்களை நிரப்பியிருக்கிறோம். எங்களின் சாதனைகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள்தான் எங்களை விமர்சிக்கிறார்கள்” என்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே, மக்களிடம் செல்லுங்கள்... ஒரு வருட ஆட்சியின் மீதான விமர்சனங்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள் மீதமிருக்கின்றன; கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செயல்படுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism