Published:Updated:

` 4 ஆண்டுகளுக்குப் பிறகான சோகம் இது!' - ஒரே வாரத்தில் உச்சம் தொட்ட வெங்காய விலை

தமிழகத்தில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Onion
Onion

இந்தியாவின் பல மாநிலங்களில், கடந்த சில மாதங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடானது. கனமழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது. பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை அறிவித்திருந்தாலும் மழையின் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் காய்கறிகளை அறுவடை செய்யமுடியாத சூழல் உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

Onion
Onion

விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும் வரத்து குறைந்ததால் மார்க்கெட்டுகளில் கடந்த சில நாள்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்துதான் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இங்குள்ள மிகப்பெரிய வெங்காயச் சந்தையான லாசல்கானில், கடந்த வாரம் ஒரு குவிண்டால் வெங்காயம் 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், இந்த வாரம் குவிண்டால் 4,000 ரூபாய் வரையில் விற்பனையானது. 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் தான் வெங்காயத்தின் விலை இவ்வளவு உச்சம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒரு கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Onion
Onion

மத்திய அரசிடம் 56 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மொத்தக் கொள்முதல் வியாபாரிகள் வெங்காயத்தைப் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சென்னையில், வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ, காமராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.