Published:Updated:

ஆன்லைன் ரம்மியை மிஞ்சும் `லோன் ஆப்ஸ்’ - விழித்துக்கொள்ளுமா அரசு?!

மொபைல் ஆப் லோன்

``ரிசர்வ் வங்கியும், அரசும் இது போன்ற ஆன்லைன் கடன் செயலி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.”

ஆன்லைன் ரம்மியை மிஞ்சும் `லோன் ஆப்ஸ்’ - விழித்துக்கொள்ளுமா அரசு?!

``ரிசர்வ் வங்கியும், அரசும் இது போன்ற ஆன்லைன் கடன் செயலி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.”

Published:Updated:
மொபைல் ஆப் லோன்

சமீபகாலமாக  ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செல்போன்  செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும், குறைந்த வட்டி, ஈசி அக்சஸ் போன்ற ஆசைவார்த்தைகளைக் கூறி மக்களிடம் எளிதாக நுழையும் இந்தக் கடன் செயலிகள், இப்போது ஆன்லைன் ரம்மியைவிடக் கொடூரமான ஒன்றாக மாறிவருகின்றன. அதாவது, பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் போன்றவர்களைக் குறிவைத்து இது போன்ற கடன் செயலி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுவருகின்றன.

லோன்
லோன்

தனிநபர் ஒருவரின் ஆதார், செல்போன் எண் போன்ற தகவல்களைத் தருவதன் மூலமாக தனிநபர் கடன் எளிதாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் செயலி மூலம் கடன் பெறுபவரின் மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்கின்றனர். பணத்தை தாமதமாகக் கட்டினாலோ அல்லது நிறுவனம் சொல்லும் கூடுதல் பணத்தைக் கட்டத் தவறினாலோ கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துவருகின்றன.

இதனால் தற்கொலைச் சம்பவங்களும் நடக்கின்றன. நாடு முழுவதும் இது போன்ற குற்றம் அதிகமாகிவருகிறது. இது போன்ற புகார்களால் ஏராளமான சீனக் கடன் செயலிகளை மத்திய அரசு கடந்த மாதம் தடைசெய்தது.

தற்கொலை
தற்கொலை

கடந்த ஜூன் மாதம் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாததால், அவரின் படத்தை  ஆபாசமாகச் சித்திரித்து லோன் ஆப் நிறுவனம், அவரின் உறவினர்களுக்கு அனுப்பியிருக்கிறது. இதனால், மனமுடைந்த பாண்டியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல், அக்டோபர் 3-ம் தேதி லோன் ஆப்பில் கடன் பெற்ற கே.கே.நகரைச் சேர்ந்த ஐடி ஊழியர் நரேந்திரன் என்பவரும் ஆபாச மிரட்டல்களால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சமீபத்தில், சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த உஷ்னா என்பவர் அவசரக் கடன் வழங்கும் கடன் செயலிகளைப் பதிவிறக்கி ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

10 நாள்களில் அவர் வட்டியுடன் பணத்தைத் திரும்பச்  செலுத்தினார். ஆனால் கடன் கொடுத்த நிறுவனம், மேலும் ரூ.50 ஆயிரம் கட்ட நிபந்தனை விதித்தது. பணத்தைக் கட்ட  உஷ்னா மறுக்கவே, அவரின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்து உஷ்னா அளித்த புகாரின்படி சேலம் மாநகர சைபர்  க்ரைம் போலீஸார், அந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். தமிழகம் மட்டுமில்லாமல் மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதுபோல் நடந்துள்ளது. இதேபோல், சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆன்லைன் கடன் செயலிகளுக்கு உரிய விதிமுறைகளை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இந்திய ரிசர்வ் வங்கிச் செயலாளர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் பதில் அளிக்க ஆணை பிறப்பித்தனர். 

வினோத் ஆறுமுகம்
வினோத் ஆறுமுகம்

ஆன்லைன் ரம்மியைக் காட்டிலும் கொடூரமான ஒன்றாக லோன்  ஆப்கள் மாறிவருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இது குறித்து, சைபர் சமூக ஆர்வலர் வினோத் ஆறுமுகம் நம்மிடம், "ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே லோன்  கொடுக்க முடியும். இது போன்ற கடன் செயலிகளை `குளோன்  ஆப்’ என்று சொல்வார்கள். ஒரு நபர் வைத்திருக்கும் ஆப்  விவரங்களை குளோன் செய்து, வேறு ஒரு பெயரில் ஆப் என்று இணையத்தில் வெளியிட முடியும். இந்த ஆப்களுக்கு 'மால்வேர்' இல்லை என்பதால், கூகுள்பிளே ஸ்டோரில் எளிதாகச்  சென்றுவிடும். பின்னர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலமாக மக்களை டார்கெட்  செய்வார்கள். இதுதான் அவர்களின் திட்டமிடலாக இருக்கும். கூகுள் பிளே ஸ்டோர் நிறுவனத்திடம் அரசு இது போன்ற கடன் செயலிகள் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெறப்பட்டவையா என்று ஆய்வுசெய்ய அழுத்தம்  கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கியும், அரசும் இது போன்ற  ஆன்லைன் கடன் செயலிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். லோன் கொடுத்தவர்கள் மிரட்டும்போது பொதுமக்கள் சைபர் க்ரைமிலும், போலீஸிலும் துணிச்சலுடன் புகார் கொடுக்க வேண்டும். ஆன்லைன் கடன் செயலி குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார். 

கடன் செயலி மோசடியால் மேலும் ஒருவர் பாதிக்கும் முன்னர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை!