Published:Updated:

எதிர்ப்பை மீறி பெண் வேட்பு மனு: 20 வாக்குகள் மட்டுமே பதிவான நாயக்கனேரி ஊராட்சி! - காரணம் இதுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாயக்கனேரி ஊராட்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா
நாயக்கனேரி ஊராட்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா

நாயக்கனேரி ஊராட்சியில், ஐம்பதாயிரம் வாக்குகளுக்கான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுவருகிறது. மதியம் 12.30 மணி நிலவரப்படி... வெறும் 20 வாக்குகளே பதிவாகியிருக்கின்றன.

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திலிருக்கும் நாயக்கனேரி மலை ஊராட்சியில் மொத்தம் 3,440 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 2,889 வாக்குகள் பழங்குடி சமூகத்தினருடையது. மீதமுள்ள 551 வாக்குகளும் பொதுப்பிரிவினருடன் கலந்துள்ள பட்டியல் சமூகத்தினருடையது. இந்த நிலையில், காலம் காலமாக பழங்குடிப் (எஸ்.டி) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுவந்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை இந்த முறை பட்டியல் (எஸ்.சி) சமூகப் பெண்களுக்கு ஒதுக்கியதை அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பழங்குடி சமூக மக்கள் விரும்பவில்லை.

இந்துமதி
இந்துமதி

இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது கிராம வார்டுகள் இருக்கின்றன. இதில், நான்கு வார்டுகள் பழங்குடியின பொதுப் பிரிவினருக்கும், ஐந்து வார்டுகள் பழங்குடியினப் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை மட்டும் சம்பந்தமே இல்லாமல் பட்டியல் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் என தெரிவித்து பெரும்பான்மை சமூக மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவந்தனர்.

ஆம்பூர்: தனி ஆளாகக் களமிறங்கிய இளம்பெண்; எதிர்க்கும் பெரும்பான்மை-நாயக்கனேரி ஊராட்சியில் நடப்பதென்ன?

இதற்கிடையே, நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவிக்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற ஒரேயொரு பெண் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். அதுவும் வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளில்தான் இந்துமதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்வதற்காக மாதனூர் ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற இந்துமதியை பெரும்பான்மை சமூக மக்கள் தடுத்து விரட்டியடிக்க முயன்றனர். ஆனாலும், மூச்சிறைக்க ஓடோடிச் சென்று அவர் மனு தாக்கல் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

கிராம மக்களிடம் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்
கிராம மக்களிடம் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்

இதையடுத்து, ஊராட்சியிலுள்ள ஒன்பது கிராம வார்டுகளுக்கும் ஒருவர்கூட போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை. அதேபோல், ஐந்தாயிரம் வாக்குகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட மூன்று பேரும் தங்களுடைய வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில், இந்துமதியைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வாகியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பெரும்பான்மை சமூக மக்கள் கிராமப் பஞ்சாயத்தைக்கூட்டி ‘‘வாக்களிக்கப் போவதில்லை; தேர்தலைப் புறக்கணிக்கின்றோம்’’ என்றும் அறிவித்திருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்: T23 புலி அச்சத்தையும் மீறி வாக்குகளைப் பதிவு செய்து வரும் மசினகுடி மக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், நாயக்கனேரி மக்கள் சமரசம் ஆகவில்லை. இன்று நடைபெற்றுவரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவினையொட்டி, நேற்று முன்தினம் நாயக்கனேரி ஊராட்சியிலிருக்கும் காமனூர் தட்டு கிராமத்தில் வாக்காளர்களுக்கு ‘பூத்’ சிலிப் வழங்கும் பணியை தூய்மைப் பணியாளர் வேல்முருகன் என்பவர் மேற்கொண்டிருந்தார். அப்போது, அவரை கிராம மக்கள் தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற வேல்முருகனின் உறவினர்கள் மூன்று பேருக்கும் உடி உதை விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக, ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

கிராம மக்களிடம் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்
கிராம மக்களிடம் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்

இந்த நிலையில், அறிவித்தபடியே நாயக்கனேரி மக்கள் இன்று நடைபெற்றுவரும் வாக்குப்பதிவினை புறக்கணித்துள்ளனர். கிராம வார்டுகளுக்கு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததுனாலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களும் மனுக்களைத் திரும்ப பெற்றுக்கொண்டதாலும் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டுமே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவின் மதியம் 12.30 மணி நிலவரப்படி... நாயக்கனேரி ஊராட்சியில் வெறும் 20 வாக்குகளே பதிவாகியிருக்கின்றன. நாயக்கனேரி ஊராட்சியிலுள்ள பனங்காட்டேரி, காமனூர் தட்டு, பள்ளக்கொல்லை, சோலக்கொல்லைமேடு ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அமர்குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு பொதுமக்களை வாக்களிக்க வருமாறு அறிவுறுத்தினார். ஆனாலும், மக்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவுவதால், வஜ்ரா வாகனத்துடன் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். வாக்களிக்க வரும் மக்களை தடுத்து அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு