Published:Updated:

67 ஆண்டுகள்; மூன்றே மூன்று பேர்!- முழுமையாக ஆட்சி செய்த கர்நாடக முதல்வர்கள்

சத்யா கோபாலன்

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெறுவது இது முதல்முறையல்ல. சொல்லப் போனால் அங்கு இதுவரை மூன்று முதல்வர்கள் மட்டுமே முழுமைமாக 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளனர்.

கர்நாடக முதல்வர்கள்
கர்நாடக முதல்வர்கள்

கர்நாடகாவில் நடைபெற்று வந்த காங்கிரஸ் - மஜத கூட்டணியிலான ஆட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் கடந்த 6-ம் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நடந்த அரசியல் குழப்பங்களுக்கிடையே நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 225 எம்.எல்.ஏ-க்களில் நேற்று நடந்த கூட்டத்தில் 205 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

கர்நாடக சட்டசபை
கர்நாடக சட்டசபை
Twitter/@INCKarnataka

சட்டசபைக்கு வராத 20 எம்.எல்.ஏ-க்களில் 15 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், இரண்டு சுயேச்சை மற்றும் ஒரு பகுஜன் சமாஜ்வாதி எம்.எல்.ஏ. குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானதால் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பதவியேற்று 14 மாதங்களே ஆன நிலையில் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி.

மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் 1956-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்டது. முதலில் மைசூர் மாநிலம் என அழைக்கப்பட்டு வந்த இந்த மாநிலம், 1973-ம் ஆண்டு முதல் கர்நாடகா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் இதுவரை அந்த மாநிலத்தை 25 -க்கும் மேற்பட்ட முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களில் பலரின் ஆட்சிக்காலமும் முழுமையாக நீடிக்கவில்லை.

முன்னாள் முதல்வர் சித்தராமையா
முன்னாள் முதல்வர் சித்தராமையா

அப்படி முழுமையாக நீடித்த முதல்வர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் செய்தி. நிஜலிங்கப்பா (1962-68), தேவராஜா (1972-77), சித்தராமையா (2013-18). கர்நாடகாவில் இதுவரை ஆறு முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் மூன்று முதல்வர்கள் மாறி மாறி ஆட்சி செய்த வரலாற்றையும் தாங்கி நிற்கிறது கர்நாடகா. இதுவரை நான்கு முறை இதேபோன்று நடந்துள்ளது.

குமாரசாமி

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதல்முறையாக பா.ஜ.க-வுடன் இணைந்து 2006-ம் ஆண்டு கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், 2 ஆண்டுகள் மட்டுமே அவரின் பதவி நீடித்தது. பா.ஜ.க-வுடனான அதிகாரப் பகிர்வுக்கு குமாரசாமி உடன்படாததால் அப்போது அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. இரண்டாவது முறையாகக் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸுடன் கூட்டணி வைத்து முதல்வராகப் பதவியேற்றார். அந்த ஆட்சி 14 மாதங்கள் கழித்து நேற்றுடன் முடிவு பெற்றது.

எடியூரப்பா- குமாரசாமி
எடியூரப்பா- குமாரசாமி

எடியூரப்பா

பா.ஜ.க-வின் பி.எஸ் எடியூரப்பா 2007-ம் ஆண்டு கர்நாடகா முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், அப்போது ம.ஜ.த தங்களின் ஆதரவைத் திரும்பப் பெற்றதால் ஏழு நாள்களுக்குப் பிறகு அவரது ஆட்சி முடிவுக்கு வந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இரண்டாவது முறையாக 2008-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா. அப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2011-ம் ஆண்டு பதவி விலகினார்.

இதையடுத்து, 2018-ம் ஆண்டு வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பாவின் ஆட்சி வெறும் நான்கு நாள்கள் மட்டுமே நீடித்தது. பா.ஜ.க-வை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ராஜினாமா செய்தார் எடியூரப்பா.