Published:Updated:

தமிழக சட்டமன்ற நூலகத்தைப் பயன்படுத்தும் 46 எம்.எல்.ஏக்கள் இவர்கள் மட்டுமே! #VikatanExclusive

சட்டமன்ற நூலகத்துக்குச் சென்று புத்தகம் எடுத்துச் சென்ற 46 தமிழக எம்.எல்.ஏ-க்கள் யார் யார் என்கிற விவரம் விகடனுக்குக் கிடைத்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1996 - 2001 தி.மு.க ஆட்சிக்கால சட்டமன்றத்தில் ஒருநாள்!

சபாநாயகர் நாற்காலியில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அமர்ந்திருக்க... எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பேச எழுந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை அவையில் காட்டிப் பேச ஆரம்பித்தார். ''தரம் குறைந்த புழுக்கள் நெளியும் அரிசிதான் இப்போது ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது. இந்த அரிசியை மாண்புமிகு அமைச்சர் சமைத்துச் சாப்பிட்டால் அவருடைய தொகுதியில் இடைத்தேர்தல் வரும்'' என்றார். அந்த வார்த்தையைக் கேட்டு, சட்டமன்றம் நிசப்தம் ஆனது. உடனே எழுந்த உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், ''தரமுள்ள அரிசியைத்தான் அரசு விநியோகம் செய்கிறது. அந்த அரிசியை நான் சாப்பிடத் தயார். அப்படிச் சாப்பிட்டாலும் என் தொகுதியில் இடைத்தேர்தல் வராது'' என்றார் அமைச்சர்.

Indira Kumari
Indira Kumari
K.s.Alagiri
K.s.Alagiri

1991 - 1996 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் நடந்த விவாதம் இது!

காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.அழகிரி பேசியபோது, ''அரசு வழங்கும் இலவச வேட்டி சேலை தரமில்லாமல் இருக்கிறது. தண்ணீரில் அலசி வெளியே எடுத்தால், நூல் நூலாகச் சேலை வந்துவிடுகிறது'' என்றார். உடனே அமைச்சர் இந்திர குமாரி எழுந்து, ''தரமான சேலைகளைத்தான் அரசு வழங்குகிறது. அபாண்டமான பொய்களை உறுப்பினர் அள்ளிவிடுகிறார்'' என்றார். கே.எஸ்.அழகிரி விடவில்லை. ''தரமான உடை என்றால், தண்ணீரில் அலசி எடுத்துக் காயவைக்கப்பட்ட சேலையை நாளை அவைக்கு அமைச்சர் அணிந்து வரத் தயாரா?'' என மடக்கினார்.

1984-ம் ஆண்டு ஆந்திராவில் முதல்வராக இருந்த என்.டி.ராமா ராவ், பிரதமர் இந்திரா காந்தி அரசால் நீக்கப்பட்டார். விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. ''ஆந்திராவில் நடக்கும் விஷயங்களுக்கும் மத்திய அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆந்திராவில் ஆட்சி கவிழ்ந்துபோனதைக் காலையில் பத்திரிகைகளைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்'' என நாடாளுமன்றத்தில் சொன்னார், பிரதமர் இந்திரா காந்தி. உடனே வை.கோபால்சாமி (வைகோ), ''The Greatest Lie of Century'' என்றார். ''இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்'' என இரும்புப் பெண்மணி இந்திராவுக்கு எதிராகத் துணிச்சலோடு முழங்கினார் வைகோ.

Vaiko
Vaiko

இப்படிச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் எல்லோராலும் உரையாடிவிட முடியாது. மயிலை மாங்கொல்லையில் தங்கசாலை மணிக்கூண்டிலும் சைதை தேரடி வீதியிலும் பொதுக்கூட்ட மேடையில் முழங்குவதுபோல வார்த்தைகளை வீசிவிட முடியாது. 'மக்கள் பிரதிநிதி'கள் வீற்றிருக்கும் அவைகளில், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிரம்பியிருக்கும் மன்றங்களில் சொற்போர் நடத்துவதற்குப் பண்பும் பயிற்சியும் தேவை. அதைப் பெற்றிருப்பவர்கள்தான் சிறந்த நாடாளுமன்றவாதிகளாக (Parliamentarian) உருவெடுக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடாளுமன்றத்தில் பேசுகிறவர்கள் யாரும் பொய் சொல்லிவிட முடியாது. இந்திரா காந்தி பொய் சொன்னபோது, ''இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்'' எனச் சொல்லத் தைரியம் மட்டும் போதாது. அதைத் தாண்டிய அறிவும் வேண்டும். அந்தத் திறமைக்குப் பின்னால் வைகோவிடம் இருந்தது, அவருடைய நாடாளுமன்றப் பயிற்சி. முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் வைகோ நுழைந்தபோது, அதன் நடவடிக்கைகள் அத்தனையையும் கற்றார். கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து எம்.பி-க்களுடன் பழகினார்.

Parliament of India
Parliament of India

சீனியர் எம்.பி-யான இந்திரஜித் குப்தா உள்ளிட்டவர்களிடம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்துகொண்டார். சந்தேகங்களைக் கேட்டு, தெளிவடைந்தார். அவையில் எப்படிப் பேச வேண்டும்; அதற்காக எப்படித் தயார் ஆக வேண்டும்; அதற்கான குறிப்புகளை எங்கு பெற வேண்டும் என அனைத்தையும் கற்றுக்கொண்டார். நாடாளுமன்ற நூலகத்தில் புத்தகங்களைப் புரட்டினார். முந்தைய அவை நடவடிக்கை குறிப்புகளை எல்லாம் தேடிப் படித்தார். இத்தனை பயிற்சிகளை எடுத்துப் பேச ஆரம்பித்த பிறகுதான் வைகோவை, 'சிறந்த நாடாளுமன்றவாதி' எனப் பலர் புகழ ஆரம்பித்தனர்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு, அவையில் அவர்கள் வெளிப்படுத்திய திறன் ஆகியவற்றை மட்டுமே வைத்து 'சிறந்த நாடாளுமன்றவாதி'யாக ஒருவர் ஆகிவிட முடியாது. நுனிநாக்கில் புள்ளிவிவரம், கடந்தகால வரலாறு, பரந்துபட்ட ஞானம், ஆழமான வாதம், அபார நினைவாற்றல், மையப்பொருளை வைத்துக் களமாடும் திறன் ஆகியவை சிறந்த நாடாளுமன்றவாதியாக ஆவதற்கான அடிப்படை அம்சங்கள். இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது வாசிப்பு.

Tamil Nadu Secretariat
Tamil Nadu Secretariat

எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் 'சிறந்த நாடாளுமன்றவாதி' ஆவதற்கான தகுதிகளில் ஒன்று புத்தகங்கள், பத்திரிகைகள் படிப்பது, நூலகங்களுக்குச் செல்வது. பல முறை மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ உரை நிகழ்த்தும் முன் பயிற்சி எடுக்கிறார்கள். தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் புத்தகங்கள் படிக்கிறார்கள்... பயிற்சி எடுக்கிறார்கள்... அவர்களின் அறிவு விசாலமானதா? சிறந்த நாடாளுமன்றவாதியாக வரக்கூடிய ஆற்றல், தமிழக எம்.எல்.ஏ-க்களில் யாருக்கெல்லாம் இருக்கிறது எனச் சட்டமன்ற நூலகத்தை ஃபோக்கஸ் செய்து எம்.எல்.ஏ-க்களின் அறிவை அளந்தோம்.

ஒரு சாதாரண நூலகத்தைவிடச் சிறப்பான நூலகமாக இருக்கிறது, சட்டமன்ற நூலகம். இதுவரை நடந்த சட்டமன்ற அவை நடவடிக்கை குறிப்புகள் அனைத்தும் இங்கே இருக்கிறது. ஆண்டுதோறும் புத்தகங்களை வாங்குகிறார்கள். அப்படிப்பட்ட இந்த நூலகத்துக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விவரத்தையும் அவர்கள் எடுத்துப்போன புத்தகங்களையும் தோண்டி எடுத்தது விகடன். அவர்கள் யார் யார்?

நூலகத்தில் புத்தகங்கள் எடுத்த எம்.எல்.ஏ-க்கள் விவரம்!

வ.எண் - எம்.எல்.ஏ-க்கள் - கட்சி - தொகுதி - புத்தகங்கள் எண்ணிக்கை

1. சிவகுமார் (எ) தாயகம் கவி (தி.மு.க) - திரு.வி.க.நகர் - 13

2. பி.பலராமன் (அ.தி.மு.க) - பொன்னேரி - 10

3. சேகர்பாபு (தி.மு.க) - துறைமுகம் - 9

4. அம்பேத்குமார் (தி.மு.க) - வந்தவாசி - 8

5. எஸ்.டி.கே.ஜக்கையன் (அ.தி.மு.க) - கம்பம் - 7

6. திராவிட மணி (தி.மு.க) - கூடலூர் - 6

7. முருகன் (தி.மு.க) - வேப்பனஹள்ளி - 6

8. லோகநாதன் (அ.தி.மு.க) - கீழ்வைத்தியணான் குப்பம் - 6

9. எழிலரசன் (தி.மு.க) - காஞ்சிபுரம் - 6

10. ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க) - மணப்பாறை - 5

11. பன்னீர்செல்வம் (அ.தி.மு.க) - கலசபாக்கம் - 5

12. ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) - கிள்ளியூர் - 4

13. துரைமுருகன் (தி.மு.க) - காட்பாடி - 4

14. எஸ்.சுதர்சனம் (தி.மு.க) - மாதவரம் - 4

15. டி.பி.எம்.மைதீன்கான் (தி.மு.க) - பாளையங்கோட்டை - 3

16. மதிவாணன் (தி.மு.க) - கீழ்வேளூர் - 3

17. நந்தகுமார் (தி.மு.க) - அணைக்கட்டு - 3

18. ரவிச்சந்திரன் (தி.மு.க) - எழும்பூர் - 3

19. கே.பி.பி.சாமி (தி.மு.க) - திருவொற்றியூர் - 3

20. சரவணன் (அ.தி.மு.க) - மதுரை (தெற்கு) - 2

21. மாணிக்கம் (அ.தி.மு.க) - சோழவந்தான் - 2

22. பா.ஆறுமுகம் (அ.தி.மு.க) - கந்தர்வக்கோட்டை - 2

23. துரை சந்திரசேகரன் (தி.மு.க) - திருவையாறு - 2

24. டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க) - மன்னார்குடி - 2

25. முருகுமாறன் (அ.தி.மு.க) - காட்டுமன்னார்கோயில் - 2

26. ஈஸ்வரன் (அ.தி.மு.க) - பவானிசாகர் - 2

27. என்.டி.வெங்கடாச்சலம் (அ.தி.மு.க) - பெருந்துறை - 2

28. ஏ.பி.சக்திவேல் (அ.தி.மு.க) - சேலம் (தெற்கு) - 2

29. ரவி (அ.தி.மு.க) - அரக்கோணம் - 2

30. ஜெயராமகிருஷ்ணன் (தி.மு.க) - மடத்துக்குளம் - 1

31. பிரின்ஸ் (காங்கிரஸ்) - குளச்சல் - 1

32. சந்திரபிரபா (அ.தி.மு.க) - ஸ்ரீவில்லிப்புத்தூர் - 1

33. தமிமுன் அன்சாரி (ம.ஜ.க) - நாகப்பட்டினம் - 1

34. ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க) - மயிலாடுதுறை - 1

35. பாரதி (அ.தி.மு.க) - சீர்காழி - 1

36. தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க) - பெரம்பலூர் - 1

37. சி.ராஜா (அ.தி.மு.க) - சங்ககிரி - 1

38. மருதமுத்து (அ.தி.மு.க) - கெங்கவல்லி - 1

39. க.கார்த்திகேயன் (தி.மு.க) - ரிஷிவந்தியம் - 1

40. கு.பிச்சாண்டி (தி.மு.க) - கீழ்பெண்ணாத்தூர் - 1

41. எ.வ.வேலு (தி.மு.க) - திருவண்ணாமலை - 1

42. அ.நல்லதம்பி (தி.மு.க) - திருப்பத்தூர் - 1

43. ஆர்.நடராஜ் (அ.தி.மு.க) - மைலாப்பூர் - 1

44. விருகை வி.என்.ரவி (அ.தி.மு.க) - விருகம்பாக்கம் - 1

45. ஜெ.அன்பழகன் (தி.மு.க) - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 1

46. வி.ஜி.ராஜேந்திரன் (தி.மு.க) - திருவள்ளூர் - 1

இந்தப் பட்டியலின்படி, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 22 பேர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் 21 பேர், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 2 பேர், ம.ஜ.க. எம்.எல்.ஏ ஒருவர் என 46 பேர் மட்டுமே சட்டமன்ற நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களில் 46 என்பது மிகவும் வேதனையான எண்ணிக்கைதான்.

இத்தனை வசதிகள் வாய்ந்த நூலகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பிருக்கும் எம்.எல்.ஏ-க்களில் பலர், இதைப் பயன்படுத்தாத காரணத்தால்தான் கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் ஆகிறார். நீர் ஆவியாதலைத் தடுக்க தெர்மாகோல்கள் போடப்படுகின்றன. சுதந்திரம் கிடைத்த ஆண்டு 1955 ஆகிறது. பழமொழிகள் எல்லாம் மறந்துபோகின்றன.

வாசிப்பை நேசித்தவர்களே தங்களின் பேச்சாலும் எழுத்தாலும் தமிழக மக்களை ஈர்த்து தலைவர்களானது அந்தக் காலம். இப்போதிருக்கும் தலைவர்களுக்குப் பேசவும் தெரிவதில்லை. எழுதுவதற்குத் தேவையுமில்லை. அதனால் புத்தகம் வாசிப்பது என்பது அவசியமற்றதாக இவர்களுக்குத் தெரியலாம். ஆனால் இப்படிப்பட்டவர்களை அரசியல் தலைவர்களாகவும் ஆளுகின்ற மக்கள் பிரதிநிதிகளாகவும் பெற்றிருப்பது தமிழகத்துக்குப் பெரும் தலைக்குனிவு.

ஊரு கொச்சி, 3500 புத்தகம், 600 சதுரடி வீடு - இலவச நூலகம் நடத்தும் 12 வயதான யசோதா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு