தமிழ்நாடு அரசின் ஆவின் பால்பாக்கெட்டில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை, "ஆவின் நிறுவனத்தின் அரை லிட்டர் (500 ml) பால் பாக்கெட்டில் 70 ml குறைத்து 430ml மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு பாக்கெட்டுக்கு 70 ml குறைகிறது என்றால், ரூ.3.08 குறைய ஒரு பாக்கெட்டுக்கு விலை குறைய வேண்டும்.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2.16 கோடிக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வழக்கம்போல அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி தப்பிக்காமல், ஆவின் பால் பாக்கெட்டில் அளவைக் குறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அதிமுக தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில்," தரமான மற்றும் சரியான அளவில் ஆவின் பால் பாக்கெட்டுகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதில், தனிக்கவனம் செலுத்தி, ஆவின் பால் உரிய எடையில் மக்களுக்குக் கிடைப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளது. அதில், ``ஜூலை 30-ம் தேதி ஆவின் பால் குறைவான எடையில் விநியோகிக்கப்பட்டதாகப் புகார் வெளியானது. இதன் அடைப்படையில், மத்திய பால்பண்ணையின் உதவி பொதுமேலாளர் (பொறியியல்), உதவி பொதுமேலாளர் (தரக்கட்டுபாடு), துணை மேலாளர் (விற்பனைப் பிரிவு) ஆகியோர் என்ஆர்ஓசி425-ன் பொறுப்பாளர் தசரதன், அவர்களை நேரில் சென்று விசாரித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது இந்தப் புகாரின் அடிப்படையில் கூறியதன்படி, 30.07.2022 அன்று 672 எப்சிஎம் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டதாகவும் அதில் ஒரு பாக்கெட் மட்டும் எடை குறைவாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அதற்கு பதிலாக வாடிக்கையாளருக்கு உடனடியாக மாற்று பாக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது. நுகர்வோர்களின் நலன் பேணும் வகையில் அனைத்துத் தரம் மற்றும் அளவுகள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்துக்கு உட்பட்டு எவ்வித வேறுபாடுமின்றி பால் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் உறுதியாக இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.