Published:Updated:

ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை யுத்தம்... ஸ்கெட்ச் ஸ்டாலினுக்கா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா?

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

கூகுளில் அறிக்கை என்று டைப் செய்தாலே ஓ.பி.எஸ் பெயர் வந்து நிற்குமளவுக்கு கடந்த இருபத்தைந்து நாள்களுக்கும் மேலாக தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

``கொரோனா தொற்று காரணமாகப் பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன். எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்''
ஓ.பன்னீர் செல்வம், ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸிடமிருந்து அவ்வப்போது இது போன்ற அறிக்கைகள் வெளியானதைப் பார்த்திருப்போம். இந்த ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து நாளுரு மேனியும் இப்படி அறிக்கைகள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் துணை முதல்வராக இருந்த காலத்தில்கூட, மீடியா லைம்லைட்டில் இல்லாத ஓ.பி.எஸ் தற்போது அதிரடியான அறிக்கைகள் மூலம் ஊடகங்களை ஆதிக்கம் செய்து வருகிறார். கூகுளில் அறிக்கை என்று டைப் செய்தாலே ஓ.பி.எஸ் பெயர் வந்து நிற்குமளவுக்கு கடந்த இருபது நாள்களுக்கும் மேலாக தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள், சென்னை ஜெ.ஜெ நகரில் உள்ள அம்மா உணவகத்தைத் தாக்கியதைக் கண்டித்து வெளியான அறிக்கைதான் ஓ.பி.எஸ் பெயரில் வெளியான முதல் தனி அறிக்கை. அதனைத் தொடர்ந்து, கொரோனா நடவடிக்கைகளை துரிதப்படுத்த, தனியார் ஆம்புலன்ஸ் கட்டணங்களை முறைப்படுத்த, கருப்புப் பூஞ்சை சிகிச்சைகளை விரைவுபடுத்த, கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய, போக்குவரத்துத்துறை, மின் துறை ஊழியர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். தவிர, ஆளும் கட்சியினரின் தலையீடுகளைக் கண்டித்தும் சில அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். ஓ.பி.எஸ்ஸின் பல கோரிக்கைகளுக்கும் ஆளும் தரப்பிடம் இருந்தும் பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸே வருகிறது.

”நானும் முன்னாள் முதலமைச்சர்தான்” - அறிக்கை ஈகோ யுத்தத்தில் பன்னீர் - எடப்பாடி!

ஆனால், அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிதான், ஓ.பி.எஸ்ஸின் இந்த அறிக்கை நடவடிக்கைகளால் மிகவும் நொந்து போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் கட்சியைப் பாராட்டும் விதமாகவும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஓ.பி.எஸ் சில அறிக்கைகளை வெளியிட கடும் அப்செட்டில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ``ஓ.பி.எஸ் எதிர்பார்த்தது இதைத்தான்... பெயரளவில் வேண்டுமானால் இ.பி.எஸ் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கலாம். ஆனால், மக்களைப் பொறுத்தவரை, ஓ.பி.எஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர். எங்க அண்ணனோட இந்த அஸ்திரத்தை எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறி வருகிறார்'' என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலர்,

``பேருக்குத்தான் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர். ஆனா, எங்க அண்ணன் ஓ.பி.எஸ்தான் உண்மையிலேயே பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரா செயல்பட்டுட்டு வர்றாரு. மக்கள் பிரச்னைகளுக்காக அரசாங்கத்துகிட்ட கோரிக்கைகள் முன்வைக்கிறது தப்பில்லையே. முதலமைச்சர் சில நல்ல நடவடிக்கைகளை எடுக்கும்போது பாராட்டுறதும் தப்பில்லையே. ஆனா, எங்க அண்ணன் தி.மு.க-காரங்களை கண்டிச்சும்தான் அறிக்கைகள் வெளியிடுறாரு. எதிர்க்கட்சினா எதிரியாத்தான் நிக்கணும்னு அவசியம் இல்லை. எங்கள் அண்ணன் அறிக்கைகளுக்கு முதல்வர் கிட்ட இருந்தும் உடனடியா ரியாக்ஷன் வருது. தலைமைச் செயலாளர் போன் பண்ணி `கட்சிக்காரங்க தலையீடு எதுவும் இருக்காது'ன்னு எங்க அண்ணன் கிட்ட நம்பிக்கையாப் பேசுறாரு. சுகாதாரத்துறை அமைச்சர் கூட எங்கள் அண்ணன் அறிக்கைக்கு பொறுப்பா பதில் சொல்றாரு. அமைச்சர்கள் எல்லோரும் எங்க அண்ணனுக்கு உரிய மரியாதையைக் கொடுக்குறாங்க'' என்றவர்களிடம் உண்மையிலேயே மக்கள் மீதான அக்கறைதானா, இல்லை எடப்பாடி பழனிசாமியை டார்க்கெட் செய்யும் யுக்தியா எனக் கேட்க,

ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக டபுள் கேம் ஆடிய இனிஷியல் பிரமுகர்
- எதிர்க்கட்சித் தலைவர் விவகார உள்குத்து!

``ஆமா, அதில் எந்தத் தப்பும் இல்லையே. எங்க அண்ணன் கிட்ட வந்து நான் எதிர்க்கட்சித் தலைவரா வர விரும்புறேன்னு எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்தா, இவரே அவர் பெயரை முன்மொழிஞ்சிருப்பாரு. ஆனா, சொந்தக் கட்சிக்குள்ளயே அரசியல் செஞ்சு, எங்க அண்ணனை அவமானப்படுத்திதானே அவர், எதிர்க்கட்சித் தலைவரா ஆனாரு. கட்சியோட ஒருங்கிணைப்பாளர் எங்க அண்ணன்தான். அவரை அறிக்கை வெளியிடக்கூடாதுன்னு சொல்றதுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமில்ல யாருக்குமே அதிகாரம் கிடையாது.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

எங்க அண்ணனுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. இப்போதான் அவரோட உண்மையான ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்காரு. இது தொடக்கம்தான். இதுக்கே அவங்களால ஜீரணிச்சுக்க முடியல. கட்சியோட தலைமைப் பொறுப்புல இவர் இருக்கும்போது, யார் யாரோ பிரஸ்மீட் கொடுத்துட்டு இருக்காங்க. சசிகலா விவகாரத்துல பிரஸ்மீட் வச்சு பதில் சொல்ல கே.பி.முனுசாமி யாருங்க? எடப்பாடி தூண்டுதல் பேருதலாதான் அவர் இதெல்லாம் செஞ்சிட்டு இருக்காரு. அதுக்கும் எங்க அண்ணன் முற்றுப்புள்ளி வைப்பாரு பாருங்க'' என்கிறார்கள் அதிரடியாக.

அடுத்த கட்டுரைக்கு