Published:Updated:

மதுரை அன்னபூர்ணா ஹோட்டலில் பன்னீர்செல்வம் திடீர் மீட்டிங்; பரபரப்பான அதிமுக வட்டாரம்!

முல்லைப்பெரியாறு பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக, பன்னீர்செல்வம் தெரிவித்தார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக-வினர் மதுரையில் இன்று நடத்திய திடீர் கூட்டம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முல்லைப்பெரியாறு பிரச்னை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

இன்று காலை பசும்பொன் சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மதுரை அன்னபூர்ணா ஹோட்டலில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் கட்சித் தொண்டர்கள், செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் ராஜன் செல்லப்பா, ஜக்கையன் உள்ளிட்ட சிவகங்கை, தேனி மாவட்ட எம்.எல்.ஏ-க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

சமீபகாலமாக அதிமுக-வில் சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசிவருவதால், அதிமுக-வுக்குள் குழப்பமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த திடீர் கூட்டம் கட்சியினர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஐந்து மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும். இது சம்பந்தமாகத்தான் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

போராட்டம் நடைபெறும் இடம், நாள் குறித்து நானும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவிப்போம். ஜெயலலிதா முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கும் வகையில் விவசாயிகளின் ஜீவாதார உரிமையைப் பெற்றுத் தந்தார். 142 அடி நீரைத் தேக்குவது தொடர்பான அரசாணையும் வெளியிட்டார். முல்லைப்பெரியாறு அணையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மூன்று முறை 142 அடி வரை நீர் தேக்கிவைக்கப்பட்டது.

`நவம்பரில்’ பன்னீர்... எடப்பாடியை எச்சரித்த உளவுத்துறை?! - பசும்பொன் செல்லாமல் தவிர்த்தது ஏன்?

முல்லைப்பெரியாறு அணையால் ஐந்து மாவட்ட மக்கள் பயன் பெற்றுவருகிறார்கள். முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கக் கேரள அரசு பல்வேறு இடையூறுகள் செய்துவருகிறது. கேரள அரசின் இடையூறுகளை திமுக தலைமையிலான தமிழக அரசு கண்டும் காணாமலும் இருக்கிறது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

கேரள அரசுக்கும், திமுக அரசுக்கும் எதிராக ஐந்து மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை நிலைநாட்ட, மக்கள் எழுச்சியுடன் போராட்டம் நடத்த அதிமுக சார்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றார். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் என்று வெளியில் சொல்லப்பட்டாலும், உட்கட்சிப் பிரச்னைகள், சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பது போன்ற விஷயங்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு