Election bannerElection banner
Published:Updated:

போராட்டம்தான்... ஆனாலும் வெற்றி... போடியில் `ஹாட்ரிக்’ அடித்த ஓ.பன்னீர்செல்வம்! #TNelections2021

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு, இந்த முறை பெரும் சோதனையை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்றே சொல்லலாம்.

டியிதேனி மாவட்டம், போடி சட்டமன்றத் தொகுதி 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே நட்சத்திர வேட்பாளரைப் பார்த்த தொகுதி. ஜெயலலிதா முதன்முதலாக 1989-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது போடி தொகுதியின் மூலமாகத்தான். அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டதன்  மூலம் தற்போது  இந்தத் தொகுதி மீண்டும் விஐபி தொகுதியாக மாறியது.

2001 மற்றும் 2006-ம் ஆண்டு தேர்தல்களில் பெரியகுளம் தொகுதியிலும், பின்னர் 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போடி  தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். கடந்த முறை திமுக வேட்பாளர் இலட்சுமணனை 15,608 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஓ.பி.எஸ்.,  இந்தத் தேர்தலிலும் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கினார்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

இதுவரை போடி தொகுதியில்  நடந்த 14 சட்டமன்றத் தேர்தல்களில் ஏழு முறை அ.தி.மு.க-வும், மூன்று முறை தி.மு.க-வும், காங்கிரஸ் நான்கு முறையும் வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்த முறை போடி தொகுதியை அதிமுக மீண்டும் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

போடி தொகுதியில் பல்வேறு கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் அதிமுக., திமுக., அமமுக வேட்பாளர்களிடையேதான் கடும் போட்டி நிலவியது.  இதுவரை, தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற ஓ.பன்னீர்செல்வம், இந்த முறை பெரும் சோதனையை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்றே சொல்லலாம். முக்குலத்தோர் வாக்குகளையே அதிகம் நம்பிக் களம் இறங்கிய பன்னீரை எதிர்த்து தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும், தினகரனின் அமமுக சார்பில் முத்துச்சாமியும் போட்டியிட்டனர். ஒரு காலத்தில் அதிமுக-வில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய இந்த மூன்று பேருமே, இந்தத் தேர்தலில் மூன்று எதிர் துருவங்களாகப் போட்டியிட்டனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நம்பிக்கையுடன் வலம்வந்த பன்னீர்செல்வம், தேர்தல் தேதி நெருங்க நெருங்க தினகரனின் அமமுக வேட்பாளர் பிரிப்பது தனது வாக்குகளைத்தான் என எண்ணி ரொம்பவே கலங்கிப்போனார். கூடவே வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடுக்கு முக்குலத்தோர் சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட எதிர்ப்பும் பன்னீரின் அச்சத்தை அதிகரித்திருந்தது.

இப்படிப் பல சிக்கல்களைப் பன்னீர்செல்வம் சந்தித்தபோதும், நேற்று காலை முதலே நடைபெற்றுவந்த வாக்கு எண்ணிக்கையில் இருமுனைப் போட்டி கடுமையாக இருந்தது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோதே போட்டி கடுமையாக இருந்தது. அதன் பின் 8:30 மணியிலிருந்து நேரடி வாக்குகளும் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணப்பட்டுவந்தன. தபால் வாக்குகள் மற்றும் தொடக்கச் சுற்றுகளிலேயே பன்னீர்செல்வத்துக்கும் திமுக-வின் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மிகக் குறைந்த அளவு வித்தியாசத்தில் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்துவந்தார்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

சில சுற்றுகளின் எண்ணிக்கையின்போது  பன்னீர்செல்வத்தை பின்னுக்குத் தள்ளி தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். அடுத்தடுத்து  நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவியது. இருமுனைப் போட்டி என்பது கடுமையாக இருந்தது. அனைத்துச் சுற்றுகளும் முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கையின்  முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக-வின் தங்க தமிழ்ச்செல்வனைவிட 11,055  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அமமுக பிரித்த வாக்குகள், தங்க தமிழ்ச்செல்வனின் கடும் போட்டி இவற்றைக் கடந்து போடியில் ஹாட்ரிக் வெற்றிபெற்றிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு