அலசல்
Published:Updated:

ஆபரேஷன் அ.தி.மு.க... ஆளுக்கொரு செக்!

ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் என்கிற வகையில், பன்னீருக்குச் சில சலுகைகளை அளிக்கத் தயாராகிறாராம் ஸ்டாலின்.

2001-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்த நேரமது. எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார் மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். தி.மு.க-வைத் தாக்குவதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அதுவே ஒரு வாய்ப்பாக மாறியது. ஜெயலலிதாவின் அணுகுமுறைகளில் பெரிய வித்தியாசங்கள் தென்பட்டன. சட்டமன்றத்தில் அன்பழகன் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் ஆர்வமாகப் பதிலளித்தார் ஜெயலலிதா. அவரது கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்தார். தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இடையே ஈகோ மோதலை உருவாக்க ஜெயலலிதா முயல்வதாக அரசியல் வட்டாரத்தில் அனல் கிளம்பியது. ஆனால், ஜெயலலிதாவின் வலைக்குள் சிக்காமல், எதிர்க்கட்சித் தலைவராக அமைதியாக அந்த ஐந்து வருடத்தைக் கடந்தார் அன்பழகன். அன்று ஜெயலலிதா எடுத்த அதே ‘ஈகோ’ அஸ்திரத்தைத்தான், இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் கையிலெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

“அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது, இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, என்பதை ஸ்டாலின் திட்டமிட்டே செய்கிறார். அதற்கு பன்னீரும் பலியாகிறார்” என்று அ.தி.மு.க-விற்குள்ளேயே பொருமல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் என்கிற வகையில், பன்னீருக்குச் சில சலுகைகளை அளிக்கத் தயாராகிறாராம் ஸ்டாலின். ஆகஸ்ட், 2018-ல் கருணாநிதி மறைந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மெரினாவில் இடம் தர மறுத்தது அ.தி.மு.க அரசு. ‘முன்னாள் முதலமைச்சர் என்பதன் அடிப்படையில் பரிசீலிக்கலாமே’ என தி.மு.க-வினர் வாதம் செய்தபோது, அதை அ.தி.மு.க ஏற்கவில்லை. இறுதியாக நீதிமன்றப் படியேறிதான், கருணாநிதியை மெரினாவில் நல்லடக்கம் செய்தனர். ‘முன்னாள் முதலமைச்சர் என்கிற அந்தஸ்தின் அடிப்படையில்கூட தன் தந்தையை மதிக்காத அ.தி.மு.க தலைவர்களில் ஒருவருக்கு, அதே அந்தஸ்தின் அடிப்படையில் ஸ்டாலின் திடீர் முக்கியத்துவம் அளிப்பதன் மர்மம் என்ன?’ என்பதுதான் அரசியலில் தீப்பிழம்பாகியிருக்கும் கேள்வி.

ஆபரேஷன் அ.தி.மு.க... ஆளுக்கொரு செக்!

சுடச்சுட அறிக்கை... சுடச்சுட நடவடிக்கை!

பன்னீருக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான ‘புரிந்துணர்வு’ நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்வதை, சமீபத்திய பல சம்பவங்கள் உணர்த்துகின்றன. அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புக் களப்பணியாளர்களை நீக்கச் சொல்லி தி.மு.க-வினர் அழுத்தம் கொடுப்பதாக மே 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டார் பன்னீர். உடனடியாக, அன்றைய தினமே சென்னை மாநகராட்சி ஆணையரை பன்னீரிடம் பேசவைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஆணையர் வாயிலாக உறுதியளித்தார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தித் தருமாறு மே 28-ம் தேதி பன்னீரிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. அடுத்த நாளே ஆக்‌ஷனில் இறங்கினார் ஸ்டாலின். ‘கொரோனாவால் பெற்றோரை இழந்துவாடும் குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புநிதி வைக்கப்படும். 18 வயதானவுடன் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்’ என்று மே 29-ம் தேதி அறிவித்தது தி.மு.க அரசு. அதேபோல, தேர்தல் அறிவிப்பால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கிடக் கோரி, மே 31-ம் தேதி அறிக்கை விட்டார் பன்னீர். உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஓய்வுபெற்ற ஆறு தொழிலாளர்களுக்கு ஜூன் 2-ம் தேதி அடையாளமாகக் காசோலை வழங்கினார் ஸ்டாலின்.

மேம்போக்காகப் பார்த்தால், சுடச்சுட பன்னீர் அறிக்கை விடுவதும், அதற்குச் சுடச்சுட ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதும் ஆரோக்கியமான அரசியலாகத் தெரியும். ஆனால், இதற்குள்ளும் ஓர் ஆக்‌ஷன் ப்ளான் ஒளிந்திருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். “எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க அரசை நோக்கிப் பல்வேறு அறிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் கோரிக்கைகளையும் முன்வைக்கத்தான் செய்தார். ஆனால், அவற்றையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாத ஸ்டாலின், பன்னீரின் கோரிக்கைகளுக்கு மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியின் ஈகோவைக் கிளறிவிட்டு, அ.தி.மு.க தலைவர்களுக்குள் முட்டல் மோதலை ஏற்படுத்த நினைக்கிறார்” என்கிறது அ.தி.மு.க வட்டாரம். இந்த ஆக்‌ஷன் பிளான் ஓரளவு ஸ்டாலினுக்குக் கைகொடுக்கவும் செய்திருக்கிறது என்கிறார், மூத்த தி.மு.க அமைச்சர் ஒருவர்.

பன்னீருக்கு வீடு... ஈகோவைக் கிளறும் ஸ்டாலின்!

நம்மிடம் பேசிய அந்த அமைச்சர், “அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும், ஒற்றைத் தலைமை உருவாகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஸ்டாலின். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி என்ற ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது அ.தி.மு.க. அத்துடன் ஒப்பிடும்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் பெற்ற வெற்றி அபாரமானது. தி.மு.க வெற்றிபெற்ற தொகுதிகளோடு ஒப்பிடும்போது, அ.தி.மு.க வென்ற தொகுதிகள் சரிபாதிதான் என்றாலும், அக்கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதை ஸ்டாலின் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டு, தன்னை ஒரு தலைவராக ஸ்டாலின் தகவமைத்துக் கொண்டாலும், மாபெரும் மக்கள் தலைவராகத் தான் உருவாக வேண்டும் என்பதில் ஆசையும் முனைப்புமாக இருக்கிறார். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக தி.மு.க வெற்றிபெற்றால் மட்டுமே அவரது எண்ணம் பலிக்கும். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தடையாக இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

2021 தேர்தலில் அ.தி.மு.க மட்டுமே 65 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி தன் பிரசாரத்தின் மூலமாக மட்டுமே கிடைத்ததாகக் கூறிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதைச் சொல்லியே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வசப்படுத்திய எடப்பாடி, இதன்மூலம் அ.தி.மு.க-வுக்குள் ஒற்றை ஆளுமையாகத் தன்னை நிறுவிட முயல்கிறார். இதை உடைப்பதுதான் ஸ்டாலினின் முதல் ஆக்‌ஷன் பிளான். பன்னீருக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலமாக, எடப்பாடி கட்டியெழுப்ப முயலும் பிம்பத்தை உடைப்பது; மேலும், பன்னீருக்குக் கொம்பு சீவிவிடுவதன் மூலம் எடப்பாடி ஈகோவைக் கிளறி, எப்போதும் அ.தி.மு.க கூடாரம் புகையும்படி பார்த்துக்கொள்வது எனத் தெளிவாக இருக்கிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில், எடப்பாடி பழனிசாமிக்கு அவர் குடியிருக்கும் செவ்வந்தி இல்லம் மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் அந்தஸ்து இல்லாததால், தனது பொதிகை இல்லத்தை பன்னீர் காலிசெய்தாக வேண்டும். ஆனால், முன்னாள் முதலமைச்சர் என்கிற வகையில், பன்னீருக்கு அவர் குடியிருக்கும் இல்லத்தைத் தொடர்ந்து வழங்கிட முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின். இது எடப்பாடியின் ஈகோவை வெகுவாகக் கிளறிவிடும். அ.தி.மு.க-வுக்குள் ஒற்றைத் தலைமை உருவாவதற்கு சாத்தியமற்ற நிலையைக் கொண்டுவர, இதுபோல அடுத்தடுத்து பிளான் வைத்திருக்கிறார் ஸ்டாலின்” என்றார்.

ஆபரேஷன் அ.தி.மு.க... ஆளுக்கொரு செக்!

‘ஆபரேஷன் அ.தி.மு.க’ - ஆளுக்கொரு செக்!

அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தும் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைகளை ‘ஆபரேஷன் அ.தி.மு.க’ என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். எடப்பாடிக்கு மட்டுமல்ல, பல அமைச்சர்களுக்கும், அவரவருக்குத் தகுந்ததுபோல செக் வைத்திருக்கிறாராம் ஸ்டாலின். நம்மிடம் பேசிய உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர், “முன்னாள் அமைச்சர் வேலுமணியை முடக்கினால்தான், கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வை வலுப்படுத்த முடியும் என்று கருதுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்காகத்தான், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக சுதாகரை நியமித்திருக்கிறார்கள். 2017 பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரியபோது, சட்டமன்றத்தில் பெரும் களேபரம் நிகழ்ந்தது. அப்போது சபாநாயகரின் உத்தரவுப்படி சட்டமன்றத்துக்குள் நுழைந்து, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினைக் குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச்சென்றது சுதாகர் டீம். அப்படியிருந்தும், தங்கள் ஆட்சியமைந்தவுடன் சுதாகர்மீது எந்தக் காழ்ப்புணர்ச்சியும் காட்டாமல், மேற்கு மண்டல ஐ.ஜியாகப் பதவி உயர்வில் அமர்த்தியிருப்பது வேலுமணியைக் கண்காணிக்கும் பொருட்டுதான். லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலுமணிக்கு ஆதரவாகப் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவரையும் தூக்கிக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

அதேபோல, மத்திய மண்டல ஐ.ஜி-யாகப் பதவி உயர்வு தந்து பாலகிருஷ்ணனை நியமித்திருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி ராதிகாவை, திருச்சி மண்டல டி.ஐ.ஜி-யாக நியமித்திருக்கிறது அரசு. இது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வைக்கப்பட்ட செக். ஒருபக்கம் மருத்துவ ஆலோசனைக் குழுவில் விஜயபாஸ்கருக்கு இடமளித்துவிட்டு, மறுபக்கம் அவரது ஊழல் பக்கங்களைத் தோண்ட ஆட்களை அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைக் குறிவைத்து பாரத் நெட் டெண்டர் விவகாரத்தைத் தோண்ட உத்தரவிட்டிருக்கிறது மேலிடம். அதுபோல, பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் குறிவைத்தும் களமிறங்கி யிருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில், உடல்ரீதியாக ஸ்டாலினைக் குறிவைத்து ராஜேந்திர பாலாஜி அடித்த கமென்ட்டுகளை தி.மு.க தலைவர்கள் யாரும் மறக்கவில்லை. தற்போது, மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்திவரும் பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்றிருக்கும் முறைகேடுகள் குறித்து விசாரித்துவருகிறார்.

ஏற்கெனவே, லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து 30 டீம்களைக் களமிறக்கி, மாவட்ட வாரியாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் சொத்துகள், பினாமிகளிடம் பதுங்கியிருக்கும் பணக்கட்டுகள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. உளவுத்துறை யிலிருந்தும், ‘ஆபரேஷன் ஸ்பைடர்’ என்கிற பெயரில் இந்தச் சொத்துப் பட்டியலைத் தனியாகத் திரட்டிவருகிறோம். இந்தப் பட்டியல் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் சேர்த்து கிராமப்புறங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலைப் புதிதாக நடத்த முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதற்குள்ளாக அ.தி.மு.க-வைக் கலகலக்க வைத்துவிட்டால், கிராமங்களில் ஆரம்பித்து, மாநகராட்சிகள் வரை தி.மு.க பெருவெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். அ.தி.மு.க-வின் முதன்மையான இரண்டு தலைவர்கள், அதன்கீழ் வரும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள், அதற்கும் கீழுள்ள முக்கியப் புள்ளிகள் என ஆளுக்கொரு வகையில் செக் வைத்து அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தும் ஸ்டாலினின் இந்த அதிரடி ஆபரேஷனில் அ.தி.மு.க நிச்சயம் தள்ளாடும்” என்றார்.

எதிரியின் ஆயுதத்தை வைத்தே எதிரியை வீழ்த்தும் போர்க்கலையை ‘ஆர்ட் ஆஃப் வார்’ என்கிற சீனப் போர்க்கலைப் புத்தகம் சொல்கிறது. அந்தக் கலையை அரசியலிலும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். வெல்லப்போவது எந்தத் தரப்போ?

என்ன ஆனது ஐந்து லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்?

2019 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி உட்பட பல அமைச்சர்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். துறைரீதியாகப் பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவருவதற்கு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்பச் சுற்றுலா செல்லவே இந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை அமைச்சர்கள் பயன்படுத்திக்கொண்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. செப்டம்பர் 2019-ல், அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபனின் மகன் திருமணவிழாவில் பேசிய ஸ்டாலின், “இதென்ன தமிழக அமைச்சரவையா, இல்லை, சுற்றுலா அமைச்சரவையா? அ.தி.மு.க ஆட்சியில் இரண்டு தொழில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினர். அதன் பயனாக ஐந்து லட்சம் கோடி ரூபாய் பெருமானமுள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகச் சொல்கிறார்கள். அவை எங்கே? அரசால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இன்று, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஸ்டாலின், அந்த வெளிநாட்டுப் பயண விவரங்களைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளாராம்.

ஆபரேஷன் அ.தி.மு.க... ஆளுக்கொரு செக்!

வெளிநாட்டுப் பயணத்துக்கு அரசு கஜானாவிலிருந்து செலவழித்த தொகை எவ்வளவு, பயணத்தால் அரசுக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்பன குறித்துத் தனியாக அறிக்கை கேட்டிருக்கிறாராம் ஸ்டாலின். தவிர, அ.தி.மு.க ஆட்சியில் நடத்தப்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டு மூலமாகக் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும் அறிக்கை கேட்டிருக்கிறார் என்கிறார்கள். இதில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தால், அதைவைத்தே அ.தி.மு.க ஒரு ஊழல் கட்சி என்று ‘பிராண்ட்’ செய்யத் தீவிரமாகியிருக்கிறாராம்!