Published:Updated:

`ஆபரேஷன் கொங்கு’ - மகேந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டும் கள நிலவரமும்..!

ஸ்டாலினுடன் மகேந்திரன்
ஸ்டாலினுடன் மகேந்திரன்

“மகேந்திரனெல்லாம் முன்னாடியே வந்திருந்தால், அந்த வருத்தம் இருந்திருக்காது. கொங்கு மண்டலத்திலும் வெற்றி பெற்றிருக்க முடியும்” என இணைப்பு விழாவிலேயே மகேந்திரனின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுவிட்டார் ஸ்டாலின்.

சட்டசபைத் தேர்தலில் அதிகம் பேசுபொருளானது கொங்கு மண்டலம். அதிலும் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளையும் அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. சில தொகுதிகளில் தி.மு.க குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. அதேபோல, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் நூலிழையில் தோல்வியடைந்தார்.

கோவை
கோவை
`25 ஆண்டுகளாகத் தொடரும் சோகம்!' - கோவை மாவட்டத்தில் தி.மு.க படுதோல்விக்குக் காரணம் என்ன?

கோவை தி.மு.க-வில் சரியான ஆளுமைகள் இல்லாததே அவர்களின் தோல்விக்கு முக்கியக் காரணம். மறுபக்கம், ம.நீ.ம-வில் மாற்றுக் கருத்து ஏற்பட்டு, டாக்டர் மகேந்திரன் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ம.நீ.ம-வில் அதிக வாக்குகளை பெற்றவர், நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கமலுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்றவர் என ம.நீ.ம-வின் முக்கியத் தூணாக இருந்த மகேந்திரன் வெளியேறியது விவாதத்துக்குள்ளானது. இந்தநிலையில், சில மாதங்கள் அமைதியாக இருந்த மகேந்திரன்,

தி.மு.க.வில் மகேந்திரன்
தி.மு.க.வில் மகேந்திரன்

நேற்று முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் ஐக்கியமாகியுள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்ன என்பதுதான் கோவை உடன்பிறப்புகளின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

அதற்கு ஸ்டாலினின் நேற்றைய பேச்சிலேயே பதிலும் உள்ளது. ``மகேந்திரனெல்லாம் முன்னாடியே வந்திருந்தால், அந்த வருத்தம் இருந்திருக்காது. கொங்கு மண்டலத்திலும் வெற்றி பெற்றிருக்க முடியும்” என இணைப்பு விழாவிலேயே மகேந்திரனின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுவிட்டார். கோவை தி.மு.க-வைப் பொறுத்தவரை ஆளுமையான நிர்வாகிகள் யாரும் இல்லை.

கோவை
கோவை

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஸ்லீப்பர் செல்களாகவும், உட்கட்சி விவகாரத்தில் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பர்களும்தான் அதிகம். இதனால், பொருளாதாரத்தில் தொடங்கி மக்கள் பணி வரை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

மகேந்திரன் பொருளாதாரரீதியாக மிக வலுவாக இருப்பதாலும், ஏற்கெனவே கோவை மக்களிடம் நன்கு பரிச்சயமாக இருப்பதாலும் அவர் கோவை தி.மு.க-வுக்கு புது ரத்தம் பாய்ச்சுவார் என்று தி.மு.க தலைமை எதிர்பார்க்கிறது. மகேந்திரனின் சொந்த ஊர் பொள்ளாச்சியாக இருந்தாலும், அவர் இரண்டு முறை போட்டியிட்டதும் கோவை சிட்டியில்தான் (2019 கோவை மக்களவைத் தொகுதி, 2021 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி).

மகேந்திரன்
மகேந்திரன்

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும், மகேந்திரனும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தவிர பொள்ளாச்சி தி.மு.க-வில் ஏற்கெனவே ஒரு டஜன் உட்கட்சிப் பூசல்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன.

எனவே, ஆரம்பத்தில் மகேந்திரனின் கவனம் கோவை மாநகரப் பகுதிகளில்தான் இருக்கும். மாநகரைப் பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக், பையா கிருஷ்ணன் ஆகியோர் மாவட்டப் பொறுப்பாளர்களாக உள்ளனர். இருவரின் கன்ட்ரோலில் தலா இரண்டு தொகுதிகளின் உள்ளன.

நா.கார்த்திக்
நா.கார்த்திக்

இவற்றில், இவர்கள் இருவரும் போட்டியிட்ட தொகுதிகளில்கூட வெற்றிபெற முடியவில்லை. இரண்டு பேரும் தங்களது பொறுப்பு தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதனால், அவர்களை மாற்ற வேண்டும் என்கிற குரல் பரவலாக எழுந்துவருகிறது.

செந்தில் பாலாஜியைப்போல, மகேந்திரனுக்கு உடனடியாக மாவட்டப் பொறுப்பாளர் பதவி கிடைக்குமா எனத் தெரியவில்லை. அவருக்கு மாவட்டம் அல்லது மாநில அளவில் எந்தப் பதவி கிடைத்தாலும், அவரது அரசியல் கோவை மாநகரை மையப்படுத்திதான் இருக்கும். பொள்ளாச்சி சொந்த ஊர் என்பதால் அங்கேயும் அவருக்கு செல்வாக்கு இருக்கும்.

உதயநிதியுடன் மகேந்திரன்
உதயநிதியுடன் மகேந்திரன்

அதேநேரத்தில் மக்கள் நீதி மய்யத்தைவிட தி.மு.க-வில் மகேந்திரன் பல சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலையும் வரும். மகேந்திரன் வருகையை தி.மு.க மேலிடம் கொண்டாடினாலும், கோவை உடன்பிறப்புகள் புகைந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

சட்டசபைத் தேர்தலில் தி.மு.க நா.கார்த்திக் போட்டியிட்ட, அதே சிங்காநல்லூர் தொகுதியில் ம.நீ.ம சார்பில் போட்டியிட்டார் மகேந்திரன். மகேந்திரன், வேலுமணியுடன் டீலிங்வைத்து, சதிசெய்து தன்னைத் தோற்கடித்துவிட்டதாக நா.கார்த்திக் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இப்போது, துரோகம் செய்த அவரையே கட்சியில் இணைப்பதா என கார்த்திக் குமுறிக்கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் மகேந்திரன்
ஸ்டாலின் மகேந்திரன்

ஆனால், ஸ்டாலின், மகேந்திரனைப் பாராட்டியதைவைத்துப் பார்க்கும்போதே கார்த்திக் கூறியதை தி.மு.க தலைமை நம்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நேற்று மகேந்திரன் இணைப்பு விழா பிரமாண்டமாக நடந்தவிதம், ஸ்டாலினுக்கு அருகே அவருக்கு இணையாக மகேந்திரன் அமர்ந்தது உள்ளிட்ட பல விஷயங்களால் கோவை உடன்பிறப்புகள் சிலர் நொந்துபோயுள்ளனர். ‘இவர் வந்துதான் கொங்கு மண்டலத்தைக் கோட்டையாக்கப் போறாரா..? இவ்வளவு நாள் உழைச்ச நாங்க எங்க போறது?

மகேந்திரன்
மகேந்திரன்

மகேந்திரனுக்கு பெரிய பொறுப்பு கொடுக்கக் கூடாது’ என விமர்சித்துகொண்டிருக்கின்றனர். இந்தச் சவால்களையெல்லாம் எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பதைப் பொறுத்துதான் மகேந்திரனின் அடுத்தகட்ட வளர்ச்சிகள் அமையும்.

அடுத்த கட்டுரைக்கு