Published:Updated:

''ஆபரேஷன் லோட்டஸ்!'' - பி.ஜே.பி-யின் சீக்ரெட் ப்ளான்

இ.லோகேஷ்வரி

'ஆபரேஷன் லோட்டஸ்' ஒவ்வொரு மாநிலமாக விரிவடைந்துகொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பி.ஜே.பி வந்துநிற்கும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் பி.ஜே.பி-யைப் பார்த்து அதிர்ந்துபோகும்.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

'ஆபரேஷன் லோட்டஸ்' - பி.ஜே.பி கையாண்டுவரும் ஒரே 'இந்தி'யாவுக்கான யுத்தி. நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பலத்தோடு மீண்டும் அரியணை ஏறியிருக்கிறது பி.ஜே.பி. மக்களவையில் மொத்தமுள்ள 542 இடங்களில் 303 இடங்கள் பி.ஜே.பி வசம். ராஜ்யசபாவில் 238-ல் 78 பி.ஜே.பி. இந்தியா முழுதும் 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது பி.ஜே.பி. 2014 தேர்தலில் 'ஊழல்' என்ற ஒரே வார்த்தையைக் கொண்டு காங்கிரஸை காலி செய்து, மோடியை முன்னிறுத்தி, அரியணை ஏறியது பி.ஜே.பி.

நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என்று மக்களைப் பாதித்தத் திட்டங்கள் வந்தபோதும், மீண்டும் அரியணையை ஏறியிருக்கிறது மோடி அரசு. ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ், கூட்டணிகள் அமைத்தும் சோபிக்கத் தவறியது. மக்களவையில் 52 இடங்கள், ராஜ்யசபாவில் 48 இடங்கள் என்று இரண்டு இலக்கங்களில் சுருங்கிவிட்டது. ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி ஆட்சியில் இருந்தார். அதற்கும் வேட்டு வைத்திருக்கிறது அமித்ஷாவின் படை.

மோடி
மோடி

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியிலிருந்த பி.ஜே.பி, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைக் காங்கிரஸிடம் இழந்தது. மத்தியில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சியமைத்ததும், மாநிலங்களில் தன் பலத்தை மீண்டும் கொண்டுவரத் தொடங்கப்பட்டதுதான் ''ஆபரேஷன் லோட்டஸ்.'' அமித்ஷா தலைமையில் இதற்காகவே ஒரு டீம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் நீட்சியைத்தான் நாம் கர்நாடகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும், மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்தனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் குமாரசாமி. கர்நாடக ஆளும் அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏ-க்களும், அவரின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து 105 எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை இல்லாததால், குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருகிறார் பி.ஜே.பி-யின் எடியூரப்பா.

கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் பா.ஜ.க, இருக்கிறது. 'ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில் இந்தச் சதி அரங்கேறுகிறது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியிருந்தார். அதுதான் நடந்திருக்கிறது. கர்நாடகக் காட்சிகள், கூவத்தூர் கூத்துகளை நினைவுபடுத்துகிறது. பிஜேபி நேரடியாகத் தமிழகத்தில் எதையும் செய்யவில்லை என்றாலும், மறைமுகமாகத் தமிழகத்தை ஆட்டிப் படைத்தது. தர்மயுத்தத்தைத் தோற்கடித்து, சசிகலாவை செல்லாக்காசாக்கியதும் ஆபரேஷன் லோட்டஸின் ஆரம்பம்தான். மீண்டும் தமிழகத்தில் நேரடியாகக் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது 'ஆபரேஷன் லோட்டஸ்.' அதற்கு துருப்புச்சீட்டு 'சசிகலா புஷ்பா' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதற்கு முன்னர் ஆந்திராவில் நடந்த 'ஆபரேஷன் லோட்டஸ்' குறித்து தெரிந்துகொள்வோம். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களில், நான்கு உறுப்பினர்கள் இப்போது பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி, இவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது தெலுங்கு தேசம் கட்சி. அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் தற்போது பி.ஜே.பி பக்கம் சாய்ந்துள்ளனர். அதேபோல், காபு சமுதாயத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர்கள், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரின் தலைமையில் பி.ஜே.பி-யில் சேரப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ராஜ்யசபா உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாகச் சந்தித்து அவர்களை பி.ஜே.பி-யின் பக்கம் திருப்ப அதே கட்சியைச் சேர்ந்தவர்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் அமித்ஷா. இதே முறையைத்தான், தமிழகத்திலும் கடைப்பிடிக்கவுள்ளது பி.ஜே.பி.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

தமிழகத்தைச் சேர்ந்த 12 ராஜ்யசபா எம்.பி-க்கள் தற்போது இருக்கிறார்கள். அதில் அ.தி.மு.க-வின் சசிகலா புஷ்பாவைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தவுள்ளது பி.ஜே.பி. இவரின் கணவர் டெல்லி பா.ஜ.க-வுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். இதைப் பயன்படுத்தி, தமிழகத்தின் ராஜ்யசபா உறுப்பினர்களைப் பி.ஜே.பி பக்கம் கொண்டுவர சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இதனடிப்படையில் சசிகலா, அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழக ராஜ்யசபா எம்.பி-க்களில் இரண்டுபங்கு உறுப்பினர்களை பா.ஜ.க-வில் இணைக்க வேண்டும் என்று அவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நான்கு ராஜ்யசபா உறுப்பினர்களிடம் பேசியிருக்கிறார் சசிகலா புஷ்பா.

'ஆபரேஷன் லோட்டஸ்' இப்படி ஒவ்வொரு மாநிலமாக விரிவடைந்துகொண்டிருக்கிறது. அதன் வீரியம் இப்போது யாருக்கும் புரியாது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பி.ஜே.பி வந்து நிற்கும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் பி.ஜே.பி-யைப் பார்த்து அதிர்ந்துபோகும்.

ஆபரேஷன் லோட்டஸின் அடுத்த டார்கெட் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்.

அமித்ஷா
அமித்ஷா

ஒடிசாவில் நவீன் நிலையாக இருக்கிறார். இத்தனை ஆண்டுகள் ஒடிசாவில் முதல்வராக இருந்திருக்கிறார், ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நவீனுக்கு ஒரு அக்னிப்பரீட்சையாக இருந்திருக்கிறது. அந்தளவு பிஜேபி வலுவாக வேரூன்றி வருகிறது. மேற்கு வங்கத்தில், மம்தா சிறப்பாகச் செயல்பட்டாலும், அங்கும் பல அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை உருவாக்கியிருக்கிறது 'ஆபரேஷன் லோட்டஸ்'. திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 107 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் இணைய இருக்கிறார்கள் என்று சொல்கிறார் பி.ஜே.பி மூத்த தலைவர் முகுல்ராய். பி.ஜே.பி ஆளாத மாநிலங்களில் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது ஆபரேஷன் லோட்டஸ்.

மத்தியப் பிரதேசம்

2018 தேர்தலுக்குப் பின், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 தொகுதிகளில் வென்றுள்ளது. பா.ஜ.க 109 இடங்களை வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு இடங்களையும் சமாஜ்வாதி ஒரு இடத்திலும் வென்றுள்ளன. சுயேச்சைகள் நான்கு இடங்களை வென்றுள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸிடம் 114 இடங்கள் இருந்தநிலையில், சுயேச்சையாக வென்றுள்ள நால்வரும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததால், மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. 2003, 2008, 2013 எனத் தொடர்ச்சியாக மூன்று முறை பா.ஜ.க ஆட்சியமைத்த நிலையில் இம்முறை ஆட்சியை இழந்துள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பா.ஜ.க செல்வாக்கு மிகுந்த மாநிலத்தில், காங்கிரஸ் நூலிழையில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மீண்டும் மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க சந்தர்ப்பம் பார்த்து வருகிறது. இந்த நிலையில்தான் 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டத்தைக் கையிலெடுக்க ஆரம்பித்துள்ளது பா.ஜ.க. தொடர்ச்சியாக ஆட்சியில் இடம்பிடித்துள்ள எம்.எல்.ஏ-க்களை சந்தித்துப் பேசி வருகிறார்கள் ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தின் முக்கிய புள்ளிகள்.

ராஜஸ்தான்:

கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத் தேர்தலிலும் இப்படித்தான் நூலிழையில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ராஜஸ்தானில் உள்ள 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளை வென்றுள்ளது. கடந்த முறை ஆட்சியிலிருந்த பா.ஜ.க தற்போது 73 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன், ஆட்சியமைத்தது காங்கிரஸ்.

மாயாவதி
மாயாவதி

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. இந்நிலையில், ராஜஸ்தானில் இருக்கிற இவர்களின் கூட்டணியை உடைக்க பலமான திட்டத்தை உருவாக்கி வருகின்றது ஆபரேஷன் லோட்டஸ்.

காங்கிரஸ் இப்போதுதான் விழித்திருக்கிறது. குதிரை பேரங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இந்தச் சமயத்தில், பிரியங்கா காந்தியை உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராக அறிவித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா செய்திருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்கக் கூடாது, மத்தியிலும் மாநிலங்களிலும் பா.ஜ.க. கட்சி மட்டுமே ஆட்சி செய்ய வேண்டுமென்கிற சர்வாதிகார, பாசிச போக்கில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது
கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

ராகுல் ராஜினாமாவை இன்னும் காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்றுக்கொள்ளாத நிலையில், விரைவில் கமிட்டி கூடுகிறது. அப்போது, ராகுலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ். அநேகமாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்படலாம். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரியங்காவின் முதல் வேலையே 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டத்தை எதிர்கொள்வதாகத்தான் இருக்கும்.