Published:Updated:

ஆடுபுலி ஆட்டம்... பாய்வாரா, பதுங்குவாரா பன்னீர்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

பல நெருக்கடிகளை நம்ம கட்சி சந்திச்சாலும், 65 இடங்கள்ல இரட்டை இலை ஜெயிச்சிருக்குன்னா அதுக்குக் காரணம் என்னோட உழைப்புதான். ஒவ்வொரு தொகுதிக்கும் செலவு செஞ்சிருக்கேன்.

பிரீமியம் ஸ்டோரி

மற்றொரு முறை அரசியல் ஆடுபுலி ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கிறது அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேட்டுக் கொடிபிடித்த பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி பதவியைக் கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒற்றைத் தலைமையாகத் தன்னை முன்னிறுத்த ரூட் போடுவதால் கொதிப்பில் இருக்கிறார் பன்னீர். பதவி கிடைக்காமல் அடிபட்ட புலியாக கனலைக் கக்கிக்கொண்டிருக்கும் பன்னீர், பாய்வாரா... பதுங்குவாரா என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது!

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து, ஆட்சியை அ.தி.மு.க இழந்தபோதே, அடுத்த பஞ்சாயத்துக்கும் தயாராகிவிட்டது அந்தக் கட்சி. எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அடித்துக்கொண்டதால், கழகத்தில் ‘கலகம்’ வெடித்தது. கொங்கு மண்டலத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுத் தருவதற்கு எடப்பாடி தயாராக இல்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில், பன்னீரும் அந்தப் பதவியை எதிர்பார்த்தார்.

ஆடுபுலி ஆட்டம்... பாய்வாரா, பதுங்குவாரா பன்னீர்?

இருவருமே முரண்டு பிடித்துக்கொண்டிருந்த சூழலில்தான், மே 7-ம் தேதி மாலை 4:30 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது. உள்ளே பிரச்னை ஆரம்பமாகும் முன்பே அலுவலக வாயிலிலேயே சர்ச்சை தொடங்கிவிட்டது... எடப்பாடியின் காருக்குப் பின்னால், பன்னீரின் கார் நின்றதால், கொதிப்படைந்த பன்னீரின் ஆதரவாளர்கள், ‘அதான் அவரு இப்ப சி.எம் இல்லைல்ல. பன்னீர் அண்ணன் காரை எடுத்து முன்னால நிறுத்துங்க’ என்று சத்தமிட்டனர். பதிலுக்கு எடப்பாடியின் ஆதரவாளர்கள் குரலை உயர்த்த ஏரியாவே அமளிதுமளியானது. மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் ஓடிவந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தினார்.

“சொந்தக் காசையா கொடுத்தாரு?”

மே 7-ம் தேதி நடைபெற்ற கூட்டம் தொடர்பாக, அ.தி.மு.க-வின் தென்மாவட்ட சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “எம்.எல்.ஏ-க்களை முதல் தளத்திலேயே அமரவைத்துவிட்டு, கீழ்த்தளத்தில் பன்னீரும் எடப்பாடியும் ஆளுக்கோர் அறையில் அமர்ந்துகொள்ள பேச்சுவார்த்தை ஆரம்பமானது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கடம்பூர் ராஜூ, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்காற்றினர்.

முதலில் எடப்பாடிதான் பேசினார். “கட்சியோட தேர்தல் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் 20,000 கிலோமீட்டர் சுற்றுப்பயணம் செஞ்சிருக்கேன். என் பொறுப்புக்கு உட்பட்ட பகுதிகள்ல இருந்து அதிக அளவு இடங்களை ஜெயிச்சுக் கொடுத்திருக்கேன். பல நெருக்கடிகளை நம்ம கட்சி சந்திச்சாலும், 65 இடங்கள்ல இரட்டை இலை ஜெயிச்சிருக்குன்னா அதுக்குக் காரணம் என்னோட உழைப்புதான். ஒவ்வொரு தொகுதிக்கும் செலவு செஞ்சிருக்கேன். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு நான் வரணும்கறதுதான் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்களோட எதிர்பார்ப்பு. அவர் முடிவு என்னன்னு கேட்டுச் சொல்லுங்க’ என்று எடப்பாடி கூறவும், அதை அப்படியே பன்னீரிடம் வேலுமணியும், தங்கமணியும் கொண்டு சேர்த்தனர். இதைக் கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் பன்னீர்.

“அவர் சொந்தக் காசையா எடுத்துக் கொடுத்தாரு? கட்சிப் பணத்தைத்தானே தந்தாரு... வன்னியர் உள் இட ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் விவகாரம் உள்ளிட்டவற்றால்தான் தென்மாவட்டங்கள்ல நம்ம கட்சி பெரிய சரிவைச் சந்திச்சுது. தேர்தல் நேரத்துல இந்த இட ஒதுக்கீடு எல்லாம் தேவையான்னு அப்பவே கேட்டேன். ‘அதெல்லாம் எந்தப் பிரச்னையுமில்லை’னு சொன்னாரு. ஆனா, தென் மாவட்டங்கள்ல பல ஊர்கள்ல நம்ம வேட்பாளர்களால நுழையவே முடியலை. அவரோட சுயலாபத்துக்காக கட்சியை பலி கொடுத்துட்டார். அ.தி.மு.க ஆட்சியை இழந்ததற்கு எடப்பாடிதான் காரணம். மறுபடியும் அவர்கிட்ட அதிகாரத்தைக் கொடுக்கச் சொல்றீங்களா? தேர்தலுக்கு முன்னாடி எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்குங்கிறதைப் பத்தியெல்லாம் நாம எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கலை. இப்ப கட்சிக்காரங்க நான்தான் அந்தப் பொறுப்பை ஏத்துக்கணும்னு விரும்புறாங்க. முடிவா அவர் என்ன சொல்றாருன்னு கேட்டுச் சொல்லுங்க’ என்று ஆத்திரப்பட்டிருக்கிறார் பன்னீர்.

ஆடுபுலி ஆட்டம்... பாய்வாரா, பதுங்குவாரா பன்னீர்?
ஆடுபுலி ஆட்டம்... பாய்வாரா, பதுங்குவாரா பன்னீர்?

“கட்சித் தலைவர் பதவியைக் கொடுங்க!”

பன்னீரின் கோபம் பகிரப்பட்டவுடன், பதிலுக்குக் கண்கள் சிவந்துவிட்டார் எடப்பாடி. ‘கட்சியோட ஒருங்கிணைப்பாளரா அவர் இருக்கலாம். ஆனா, இந்த வெற்றியில் அவர் உரிமை கொண்டாட முடியாது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு கொடுத்ததாலதான், நாம மரியாதைக்குரிய எண்ணிக்கையிலயாவது தொகுதிகளை ஜெயிக்க முடிஞ்சுது. அவருக்குத் தெம்பிருந்தா தென்மாவட்டத்துல கட்சியை ஜெயிக்கவெச்சிருக்க வேண்டியதுதானே’ என்று சீறிவிட்டார். இந்தச் சீற்றத்துக்கு எதிர் உறுமலை உறுமிய பன்னீர், ‘தோற்றுப்போன நம்ம கட்சி வேட்பாளர்களை அழைச்சுப் பேசுங்க. எதனால அவங்க தோத்தாங்கன்னு கேளுங்க. ‘எடப்பாடியோட இட ஒதுக்கீடு முடிவால நாங்க தோற்கலை’னு அவங்க சொன்னா, நான் இப்பவே அவரை எதிர்க்கட்சித் தலைவரா ஏத்துக்குறேன்.

மக்கள்கிட்ட நம்ம ஆட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நாம நிச்சயமா ஆட்சிக்கு வந்திருப்போம். கடைசி மூணு மாசம் அவர் பண்ணின குழப்பத்தாலதான் நாம எதிர்க்கட்சியா இருக்க வேண்டிய சூழல் ஆயிடுச்சு. தே.மு.தி.க., புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையெல்லாம் ஏன் கூட்டணியைவிட்டு கழற்றி விட்டாங்கன்னு தெரியலை. யார்கிட்ட பேசுறாங்க, என்ன பண்றாங்கன்னு எதுவுமே என்கிட்ட சொல்றதும் இல்லை. தேர்தலுக்கு முன்னாடியே இதெல்லாம் நான் பேசியிருந்தேன்னா, தொண்டர்கள் யாரும் தேர்தல் வேலை செஞ்சிருக்க மாட்டாங்க. மக்கள் மத்தியில அதிருப்தி வந்து ஓட்டும் போட்டிருக்க மாட்டாங்க. அதனாலதான் அமைதியா இருந்தேன். ஒருவேளை எதிர்க்கட்சித் தலைவரா அவர் வரணும்னு ஆசைப்பட்டா, கட்சிக்கு நான் மட்டும்தான் ஒருங்கிணைப்பாளரா இருக்கணும். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிடுவோம். அவருக்கு ஓகேவானு கேளுங்க’ என்று செக் வைத்துள்ளார்.

“நீங்க விட்டுக் கொடுத்தா என்னண்ணே!”

இப்படியே அன்றைய தினம் மாலை 4:50 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், இரவு 8 மணியாகியும் முடிவுறாமல் நீளவே எம்.எல்.ஏ-க்கள் பலரும் நெளிய ஆரம்பித்துவிட்டனர். பொறுமையிழந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘ஏங்க, எவ்வளவு முறைதான் பன்னீரே விட்டுக் கொடுப்பாரு... கட்சிக்காக இந்தமுறை நீங்க விட்டுக் கொடுத்தாத்தான் என்னங்க?’ என்று எடப்பாடியிடம் கேட்கவும், எடப்பாடியால் எதுவும் பேச முடியவில்லை. தனக்கெதிராக, தென்மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் சிலரை பன்னீர் மாற்றிப் பேசவைத்திருப்பது அப்போதுதான் எடப்பாடிக்குப் புரிந்தது. அதற்குமேல் கூட்டத்தைத் தொடர விரும்பாத எடப்பாடி, மே 10-ம் தேதி மீண்டும் கூடி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்” என்றார் அந்த சீனியர் நிர்வாகி.

சிறுவாய்ப்பு கிடைத்தாலும் பிசகாமல் அதைப் பயன்படுத்திக்கொள்வது எடப்பாடியின் ஸ்டைல். முடிவு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்ததையே தனக்கான வாய்ப்பாக மாற்றிக்கொண்டு, மே 8, 9 தேதிகளில் தனது காய்நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டார் எடப்பாடி. ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் போன் போட்டவர், “பன்னீர், சசிகலா தரப்போட தொடர்புல இருக்காரு. அவங்களுக்காகத்தான் இந்தக் குழப்பத்தை ஏற்படுத்துறாரு. அவரோட சுயநலத்துக்கு நம்ம கட்சி பலியாகிடக் கூடாது. நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணனும்” என்று மிகவும் நெகிழ்வாகவே வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதுபோக, அந்த எம்.எல்.ஏ-க்களுக்கு தேவைப்பட்ட சில உதவிகளும் எடப்பாடி தரப்பிலிருந்து செய்யப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி வளைத்த இந்த வேகம் பன்னீரிடம் இல்லை.

மே 9-ம் தேதி பன்னீரை கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது கே.பி.முனுசாமியிடம், “என் கூடவே இருந்துக்கிட்டு, எனக்கெதிராக நீங்க என்னல்லாம் பண்றீங்கன்னு பார்த்துகிட்டுத்தான் இருக்கேன். எனக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சுடாதீங்க. மாவட்டங்களை அமைப்புரீதியாகப் பிரிச்சு, பொதுக்குழுவுல தன்னுடைய ஆதரவாளர்கள் அதிகமாக வர்ற மாதிரி எடப்பாடி செஞ்சுவெச்சிருக்காரு. கட்சியோட ஒற்றைத் தலைமையாக, தான் வருவதற்கு அது உதவும்னு நினைக்குறாரு. அவர் எண்ணம் உங்களுக்கும் தெரியும். அவர் உங்களை எம்.பி ஆக்கிட்டாருனு அவருக்கே சப்போர்ட் பண்ணாதீங்க” என்று கடுகடுத்துவிட்டாராம் பன்னீர். இதற்கிடையே மே 10-ம் தேதி முதல் கொரோனா முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவிக்கவும், போலீஸ் அனுமதியுடன் அன்று காலை கூட்டம் நடந்தது.

ஆடுபுலி ஆட்டம்... பாய்வாரா, பதுங்குவாரா பன்னீர்?

“நான் எப்பப்பா சொன்னேன்?” - மூவரால் தடுமாறிய பன்னீர்

கூட்டத்துக்குப் பன்னீர் வருவதற்கு முன்னதாகவே, எடப்பாடி பழனிசாமியை ஏக மனதாக எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்ததாக அறிக்கை ஒன்று தயாராக இருந்ததாம். அதில் பன்னீர் கையெழுத்திட வேண்டியது மட்டும்தான் அப்போது பாக்கி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நம்மிடம் பேசிய வடமாவட்ட கழக எம்.எல்.ஏ ஒருவர், “கட்சி அலுவலகத்துக்குள் பன்னீர் நுழைந்ததும் அவரிடம், ‘கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஏக மனதாக எடப்பாடியை ஏற்றுக்கொண்டனர். 61 எம்.எல்.ஏ-க்களோட ஆதரவு அவருக்கு இருக்கு. அறிக்கையில நீங்கள் கையெழுத்திடுங்கள்’ என்றது எடப்பாடி தரப்பு. உஷ்ணமான பன்னீர், ‘நீங்கவெச்ச பொம்மையா நான்?’ என்று கொதித்திருக்கிறார். கடுப்பான எடப்பாடி தரப்பு, ‘நீங்க ஒத்துக்கிட்டீங்கன்னு முனுசாமி, நத்தம் விசுவநாதன், மனோஜ் பாண்டியன் சொன்னாங்களே...’ என்று சொல்லவே... பன்னீருக்கு முகம் வெளிறிப்போய்விட்டது.

அவர்கள் மூவரையும் அழைத்து, ‘நீங்க நேத்து என்கிட்ட பேசும்போது எந்த முடிவையும் நான் சொல்லலையே... பிறகு எதுக்காக இப்படி மாத்திச் சொன்னீங்க?’ என்று ஆத்திரப்பட்டார். ‘இல்லைண்ணே, கட்சிக்காக நீங்க விட்டுக் கொடுப்பீங்கன்னு மட்டும்தான் சொன்னோம்’ என்று அவர்கள் மழுப்பவும், பன்னீருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதிகப்படியான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எடப்பாடிக்கு இருந்ததால், அதற்குமேல் முரண்டு பிடிக்க முடியாத பன்னீர், கடைசி முயற்சியாக முன்னாள் சபாநாயகர் தனபாலைவைத்து ஆட்டத்தை ஆரம்பித்தார்.

ஆடுபுலி ஆட்டம்... பாய்வாரா, பதுங்குவாரா பன்னீர்?

ஆபரேஷன் தனபால்... எடுபடாத வியூகம்

‘நமக்குப் பட்டியலின வாக்குகள் கிடைக்காமல் போனதுதான் பெரிய இழப்பு. அதை ஈடுசெய்ய தனபாலை எதிர்க்கட்சித் தலைவராக்கலாம். அம்மா காலத்திலிருந்து இரண்டு முறை சபாநாயகராக இருந்தவர். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி’ என்றெல்லாம் கூறிப் பார்த்தார் பன்னீர். ஆனால், எடப்பாடி தரப்பிடம் எதுவும் எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்த அறிக்கையில் கையெழுத்திட்டுவிட்டு கோபத்துடன் கிளம்பிவிட்டார் பன்னீர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா பொறுப்பு பன்னீருக்குத் தருவதாக எடப்பாடி தரப்பு டீல் பேசியது. ஆனால், பன்னீர் அதையும் ஏற்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி அல்லது கட்சியின் ஒற்றைத் தலைமை... இதில் ஏதாவது ஒன்றைப் பெற்றே தீருவது என்பதில் தீர்மானமாக இருந்திருக்கிறார் பன்னீர். இதற்காக அவர் சசிகலாவின் உதவியை நாடியதாகவும் சொல்கிறது அ.தி.மு.க வட்டாரம். அப்போது, “ஒரு சமூகத்துக்கான கட்சியாக அ.தி.மு.க-வைப் பார்க்க முடியவில்லை. உங்களுக்குத் தேவையான உதவிகள் வந்துசேரும்” என்று சசி தரப்பிடமிருந்து பாசிட்டிவ் சிக்னல் பன்னீருக்குக் கிடைத்திருக்கிறது. அதன் பிறகே சில தென்மாவட்ட முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் பன்னீருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்கள். ஆனால், இரண்டு நாள் இடைவெளியில் எடப்பாடி செய்த காய்நகர்த்தல்களால் பன்னீருக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களெல்லாம் கையை இறுக்கமாக மடக்கிக்கொண்டனர். மே 7-ம் தேதி பன்னீருக்கு ஆதரவாகப் பேசிய கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி என்கிற குட்டியப்பா, மே 10-ம் தேதி ‘கப்சிப்’ ஆகிவிட்டார். இவரைப்போலவே பன்னீரிடம் ‘கமிட்’ ஆகியிருந்த எம்.எல்.ஏ-க்கள் பலரும் வாய் திறக்காதது பன்னீரைச் சறுக்கி விழ வைத்துவிட்டது. இதற்கிடையே சசிகலாவைக் கட்சியின் பொதுச்செயலாளராகவும், பன்னீரை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆக்க நடந்த முயற்சியையும் முறியடித்திருக்கிறது எடப்பாடி அணி.

கட்சிக்குள் தனக்கென ஒரு பெரிய ஆதரவு வட்டம் இல்லையென்றாலும், ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் சலசலப்பை ஏற்படுத்தி, அந்தச் சலசலப்பிலும் மீன் பிடிப்பதில் கைதேர்ந்தவர் பன்னீர். இப்படித்தான் கட்சி அதிகாரத்தை இரட்டை தலைமையின் கீழ் கொண்டுவந்தார்; வழிகாட்டுதல்குழுவையும் அமைத்தார். தனக்கென ஒரு மீன் துண்டுகூட இல்லாமல், எந்தப் பஞ்சாயத்தையும் அவர் முடித்ததில்லை. இந்தமுறை நடந்த பஞ்சாயத்தில், அவருக்கு மீன் துண்டல்ல... முள்கூட சிக்கவில்லை. என்றாலும், பன்னீர் பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு