அரவிந்தரின் 150-வது பிறந்தநாள்விழா மற்றும் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒரு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்தார். அதையொட்டி கட்டாய இந்தித் திணிப்பு முயற்சி, புதுச்சேரி நிதி நிலையைச் சரி செய்யாதது, கல்லூரிகளில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் தினத்தன்று ஒரு நாள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தன கம்யூனிஸ்ட் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். அதன்படி அமித் ஷா நேற்று புதுச்சேரிக்கு வந்திருந்த நிலையில், சாரம் அவ்வை திடலில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சலீம் தலைமையேற்று நடத்திய அந்தப் போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், பிரதேச செயலாளர் பெருமாள் மற்றும் வி.சிக., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது கறுப்புக்கொடிகளை ஏந்திப் பிடித்து போராட்டத்துக்கு வந்திருந்த அவர்கள் “திரும்பிப் போ திரும்பிப் போ… அமித் ஷாவே திரும்பிப் போ...” என்றும் “திணிக்காதே திணிக்காதே இந்தியைத் திணிக்காதே...” என்றும் கோஷம் எழுப்பினர். போலீஸார் அவர்கள் வைத்திருந்த கறுப்புக்கொடிகளை பறித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதேபோல கறுப்புச் சட்டை அணிந்து வந்தவர்களையும் தடுத்து நிறுத்திய போலீஸார், கறுப்புக்கொடிகளுக்கும், கறுப்ச்பு சட்டைகளுக்கும் அனுமதியில்லை என்று கூறியதால் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. அதையடுத்து கறுப்புக்கொடிகளை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்ட போலீஸார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மாநில அரசின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவித்துவருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. புதுச்சேரியில் அவர் புதிதாக எந்தத் திட்டத்தையும் தொடங்கிவைக்கவில்லை. தற்போது அவர் அடிக்கல் நாட்டியிருக்கும் புதிய பேருந்து நிலையம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு போன்றவை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்.
அவற்றுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு மட்டுமே அவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். அமித் ஷாவின் வருகையால் புதுச்சேரிக்கு எந்தவிதஒ பயனும் இல்லை. அதனால்தான் அவரை `திரும்பிப் போ...’ என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் இறங்கினோம்” என்றார். ”போராட்டத்துக்கு திமுக-வுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்கள் கட்சித் தலைமையிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறியிருக்கிறார்கள்” என்று கூறியிருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் கழன்று கொண்டிருப்பது பல்வேறு விமர்சனங்களையும், அந்தக் கட்சிக்குள்ளேயே சலசப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.