Published:Updated:

பீகார்: `பிணங்கள் மீது தேர்தலா?’ - விமர்சனங்களை விலக்கும் நிதிஷ்குமார்!

நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்

எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு நிதிஷ்குமார் தயாராகிவருவது கடும் விமர்சனங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலை நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளார் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார். `பிணங்கள் மீது தேர்தல் நடத்தப்போகிறீர்களா?’ என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் மீறி, ஆகஸ்ட் 7-ம் தேதி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு ஆயத்தமாகிவிட்டார் அவர்.

1990 முதல் 2005 வரையில் 15 ஆண்டுகள் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆட்சி பீகாரில் நடைபெற்றது. பின்னர், 2005 முதல் இப்போதுவரை 15 ஆண்டுகளாக நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிக்கொடியை நாட்ட வேண்டும் என்ற பேராவலுடன் நிதிஷ்குமார் செயல்பட்டு வருகிறார். தற்போதைய சட்டசபையின் காலம் நவம்பர் மாதம் முடிவடைவதால், அதற்கு முன்பாக அங்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இப்போது தேர்தலை நடத்தக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பிவருகின்றன.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

ஆனாலும், தேர்தலை நடத்தியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கும் நிதிஷ்குமார், வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கிறார். இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் மாநில பொதுச் செயலாளர் நவீன் குமார் ஆர்யா கூறுகையில், "சுமார் 10 லட்சம் பேர் சமூகவலைதளங்கள் மூலம் முதல்வரின் பிரசாரத்தில் இணைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. அதிகபட்ச எண்ணிக்கையில் மக்கள் இதில் இணைவார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டவர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், தொகுதி வாரியாக இந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் 24 தொகுதிகளில் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

நிதிஷ்குமாருக்கு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடிக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை இப்போதே நடத்தி முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகப் பேசிய மோடியின் 15 நிமிட உரையில், `நவம்பர் மாதம் வரையில் ரேஷன் பொருள்கள் கூடுதலாக வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டார். மேலும், பீகாரில் கொண்டாடப்படும் பிரபலமான சாத் பூஜா உள்ளிட்ட வரவிருக்கும் இந்துப் பண்டிகைகள் குறித்தும் மோடி குறிப்பிட்டார். பீகார் தேர்தலை மனதில் கொண்டே இவற்றையெல்லாம் பிரதமர் குறிப்பிட்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்தனர். இந்துக்களின் வாக்குகளைக் குறி வைத்துத்தான் அவர் இதையெல்லாம் பேசினார் என்றும் விமர்சிக்கப்பட்டது. காரணம், அதே காலகட்டத்தில் வரக்கூடிய பக்ரித் பண்டிகை பற்றியோ, டிசம்பரில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பற்றியே மோடி தன் உரையில் குறிப்பிடவில்லை.

நிதிஷ்குமார், மோடி
நிதிஷ்குமார், மோடி

எனவே, பா.ஜ.க-வும் ஐக்கிய ஜனதா தளமும் பீகார் தேர்தலை நடத்தி முடிப்பது என்பதில் உறுதியாக இருப்பது தெரிகிறது. நான்காவது முறையாகவும் வெற்றிவாகை சூடிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் நிதிஷ்குமார் இருக்கிறார். ஆனால், தேர்தலை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், "கொரோனாவால் பீகார் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மக்களைக் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்துவதற்குப் பதிலாகத் தேர்தலில் முழு கவனத்தையும் நிதிஷ்குமார் செலுத்தி வருகிறார்” என்று நிதிஷ்குமாரை வறுத்தெடுக்கின்றன.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ்தான் முதன்முதலில் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். "கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்தோ, கொரோனாவால் மரணங்கள் ஏற்பட்டுவருவது குறித்தோ மாநில அரசு கவலைப்படாமல் இருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் மாநில அரசு பிஸியாக இருந்து வருகிறது. இது, தேர்தல் நடத்துவதற்கான நேரம் அல்ல” என்று கூறிய தேஜஸ்வி யாதவ், "பிணங்கள் மீது தேர்தல் நடத்த நிதிஷ்குமார் விரும்புகிறாரா, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும் என்று அவர் பயப்படுகிறாரா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், `மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால், கொரோனா பாதிப்புகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தேஸ்வி யாதவ்
தேஸ்வி யாதவ்

"தேர்தலுக்கான வேலைகளில் அரசு எந்திரத்தை ஈடுபடுத்தி அதன் ஆற்றலை வீணடிக்கக் கூடாது. கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பத்தில்தான் அரசு தன் கவனத்தைச் செலுத்த வேண்டும். தேர்தல்கள் காத்திருக்கும். ஆனால், மக்களின் உயிர்கள் காத்திருக்காது. மக்கள் மீது அரசு முதலில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்புகளைக் கவனிக்காமல் தேர்தல் நடத்துவதில் அரசு அக்கறை செலுத்துகிறது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சியிலிருந்து விலகிய பிரஷாந்த் கிஷோரும் எதிர்க்கட்சியினரின் கருத்துகளையே பிரதிபலிக்கிறார். அவர், "மற்ற மாநிலங்களைப் போலவே பீகாரிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், மாநில அரசு எந்திரத்தின் பெரும் பகுதி தேர்தல் தயாரிப்பு வேலைகளில் கவனம் செலுத்துவருகிறது. இது, தேர்தல் நடத்துவதற்கான நேரம் அல்ல. கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட வேண்டிய நேரம் இது. தேர்தலை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று அவசரப்பட்டு, மக்களின் உயிரை ஆபத்தான சூழலுக்குத் தள்ளிவிட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

நிதிஷ்குமாருடன் பிரஷாந்த் கிஷோர்
நிதிஷ்குமாருடன் பிரஷாந்த் கிஷோர்

அதே நேரத்தில், இப்போது தேர்தல் நடத்த வேண்டாம் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையே பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் முன்வைக்கிறது. லோக் ஜனசக்தி தலைவரும் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்பான், "இப்போது தேர்தல் நடத்துவது பெருவாரியான மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இப்போது தேர்தல் நடத்துவதை நான் ஆதரிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால், எந்த விமர்சனங்களைப் பற்றியும் யாருடைய எதிர்ப்பைப் பற்றியும் ஆட்சியாளர்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. "மக்கள் மத்தியில் நிதிஷ்குமாருக்கு அமோக ஆதரவு இருக்கிறது” என்று உற்சாகமாகக் கூறுகிறார்கள் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்கள். "தேசிய ஜனநாயக் கூட்டணியின் முகமாக இருக்கும் எங்கள் தலைவர் நிதிஷ்குமாருக்கு மாநிலத்தில் பெருவாரியான மக்களின் ஆதரவு இருக்கிறது. பிரபலமான அந்தத் தலைவருக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. தேர்தல் நடத்துவது குறித்த முடிவை உரிய நேரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும்” என்று அவர்கள் கூறிவருகிறார்கள்.

நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அது சட்டப்படி தன் கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறது. பீகாரில் நவம்பர் 29-ம் தேதிக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலை ஆணையம் நடத்த வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. மக்களவைக்கோ, சட்டமன்றத்துக்கோ அதன் ஆயுள்காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக புதிய அவை அமைவதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு முன்பாக சபை கலைக்கப்பட்ட பிறகு, எதிர்பாராதவிதமாக ஏதேவொரு காரணத்தால் அசாதாரண நிலை ஏற்படுமானால், தேர்தலை ஒத்திவைக்கவோ, ரத்து செய்யவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.

ராஜஸ்தான்: சச்சின் பைலட் பதவிப் பறிப்பு; ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமா? - என்ன நடந்தது?

ஆனால், அப்படியான ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் மிகவும் அரிதாகவே ஏற்படும். உரிய நேரத்தில் தேர்தல் நடத்த முடியாவிட்டால் அது குறித்து மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கப்பட்டால், அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசால் முடிவுசெய்யப்படும்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

ஆனால், தற்போதைய முதல்வர் மட்டுமல்லாமல் பிரதமரும் பீகாரில் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டுவதால், தேர்தல் ஆணையம் எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்பதை யூகிப்பது கஷ்டம் கிடையாது. எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் நிதிஷ்குமார் தேர்தலை நடத்திவிடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களோ, பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து, அடுத்ததாக வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் அறுவடை செய்வது பற்றிய கனவில் இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு