சினிமா
Published:Updated:

காங்கிரஸ் தலைமையில் கைகோக்குமா எதிர்க்கட்சிகள்?

எதிர்க்கட்சிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்க்கட்சிகள்

மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி வராதபோது, அவைத் தலைவர் இருக்கையில் சுழற்சி முறையில் எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த மூத்த எம்.பி-க்கள் அமர்வார்கள்

நரேந்திர மோடி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் சந்திக்காத எதிர்ப்பை இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் சந்தித்தது. இப்போதுபோல எப்போதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தது கிடையாது. தினமும் காலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து, போராட்டத் திட்டங்களை வகுத்தார்கள். எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத் தொடரே ஸ்தம்பித்தது.

அரிதான இரண்டு விஷயங்களையும் அதில் பார்க்க முடிந்தது. மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி வராதபோது, அவைத் தலைவர் இருக்கையில் சுழற்சி முறையில் எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த மூத்த எம்.பி-க்கள் அமர்வார்கள். இம்முறை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அந்த இருக்கையில் அமரத் தயங்கினார்கள். ‘`எங்கள் சக எம்.பி-க்கள் போராடும்போது, நாங்கள் அந்த இருக்கையில் அமர்வது அறம் இல்லை’’ என்று மறுத்தார்கள் அவர்கள்.

இன்னொரு விஷயம், பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகளின் எதிர்ப்பு. எப்போதும் அரசு கொண்டுவரும் மசோதாக்களை ஆதரித்தே வாக்களிக்கும் இந்த இரண்டு கட்சிகளும், முதல்முறையாக இன்சூரன்ஸ் மசோதாவை எதிர்த்தன. பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் இந்த மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தன.

காங்கிரஸ் தலைமையில் கைகோக்குமா எதிர்க்கட்சிகள்?

இந்தச் சூழலில்தான் 19 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை இணையவழியில் சோனியா காந்தி தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். ஆகஸ்ட் 20-ம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், ‘`நம் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி தேசநலனுக்காக எல்லோரும் இணைய வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலே நம் இலக்கு. அதற்காக இப்போது முதலே ஒற்றை இலக்குடன் திட்டமிட வேண்டும். இணைந்து போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை’’ என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

சமீப காலத்தில் இவ்வளவு கட்சிகள் ஒன்றிணைவது இதுவே முதல் முறை. காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களில் முக்கியமானவர்களான சரத் பவாரும் மம்தா பானர்ஜியும் இதில் பங்கேற்றது சோனியாவுக்கு உற்சாகம் தந்திருக்கும். ‘`இன்று தேசம் இருக்கும் சூழலில் இது தேவையான கலந்துரையாடல். ஒரே கருத்துடைய தலைவர்கள் பலரையும் சோனியா இணைத்திருக்கிறார்’’ என்று சரத் பவார் சொன்னார். மம்தா இன்னும் ஒருபடி மேலே போய், ‘`எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்க வேண்டும். மூன்று, நான்கு நாள்களுக்கு ஒருமுறை அந்தக் குழு கூட வேண்டும். அந்தக் குழுவுக்கு சோனியா அல்லது ராகுல் காந்தி தலைமை வகிக்க வேண்டும்’’ என்று சொன்னார்.

காங்கிரஸ் தலைமையில் கைகோக்குமா எதிர்க்கட்சிகள்?

என்னதான் காங்கிரஸ் மிக மோசமான நிலையில் இருந்தாலும், பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் புள்ளியாக அதுவே இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்பதுதான் சிக்கல். 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ‘காங்கிரஸ் கட்சியின் நடைமுறையிலும் நிர்வாகத்திலும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். உள்கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும். செயல்படக்கூடிய ஒரு தலைவர் கட்சிக்கு வேண்டும்’ என்று கேட்டு மூத்த தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதினார்கள். தேர்தல் தோல்விக்குப் பிறகு ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இப்போது காங்கிரஸுக்குத் தலைவர் இல்லை. அந்த வெற்றிடத்தில் இருந்தபடி சோனியா கட்சியை நடத்திவருகிறார். ‘மீண்டும் ராகுல் தலைவர் பதவிக்கு வர வேண்டும்’ என்று சிலர் கோரி வருகிறார்கள். ‘`கட்சிக்கு யார் தலைமை ஏற்பது என்பதைத் தொண்டர்களே தீர்மானிக்க வேண்டும். கட்சி என்னை என்ன செய்யச் சொல்கிறதோ, அதை நான் செய்வேன்’’ என்று குழப்பமாகவே ராகுல் சொல்லிவருகிறார்.

கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவர் கபில்சிபல். சோனியா நடத்திய கூட்டத்துக்கு சில நாள்கள் முன்பாக அவர் ஒரு டின்னர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். சோனியா கூப்பிட்டு வராத தலைவர்கள்கூட அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். உடல்நலமில்லாத நிலையிலும் லாலு பிரசாத் யாதவ் வந்தார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வந்தார். காங்கிரஸைக் கடுமையாக எதிர்க்கும் சிரோமணி அகாலி தளத்திலிருந்து நரேஷ் குஜ்ரால் வந்திருந்தார். ‘`காங்கிரஸ் கட்சியை அந்த ஒற்றைக் குடும்பத்திடமிருந்து மீட்டெடுங்கள்’’ என்று அவர் நெருப்பு பற்ற வைத்துவிட்டுப் போனார். அந்த டின்னருக்கு சோனியாவும் ராகுலும் போகவில்லை.

சோனியா நடத்திய கூட்டத்துக்கு சிரோமணி அகாலி தளத்தை அழைக்கவில்லை. விரைவில் பஞ்சாப்பில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு காங்கிரஸின் முக்கிய எதிரியான அந்தக் கட்சியை அழைக்காமல் தவிர்த்தார்கள். காங்கிரஸ் வலுவாக உள்ள பல மாநிலங்களில் காலூன்ற நினைக்கும் ஆம் ஆத்மி கட்சியையும் தவிர்த்துவிட்டார்கள். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டது. ஆரம்பத்திலேயே இத்தனை குழப்பங்கள் உள்ள நிலையில், இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி எவ்வளவு காலம் நீடிக்கும்? அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள மூன்று மாநிலத் தேர்தல்களே இதற்கு பதில் சொல்லும்.

காங்கிரஸ் தலைமையில் கைகோக்குமா எதிர்க்கட்சிகள்?

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. உ.பி-யைப் பொறுத்தவரை காங்கிரஸ் முழுக்க முழுக்க பிரியங்கா காந்தியை நம்பியிருக்கிறது. மாநிலத்தில் கணிசமாக இருக்கும் பிராமணர் வாக்குகளை நம்பி, காங்கிரஸ் சீனியர் தலைவர் ஜிதின் பிரசாதா ஓர் அமைப்பை ஆரம்பித்திருந்தார். சமீபத்தில் அவரை பா.ஜ.க இழுத்துவிட, உள்ளூர்த் தலைவர்கள் இல்லாமல் தடுமாறுகிறது காங்கிரஸ். சமாஜ்வாடி கட்சியும், ‘`நாங்கள் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டது. மாயாவதியும் தனித்தே நிற்கப்போகிறார். இப்படி எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்கும் சூழல், ஆட்சிமீதான அதிருப்தி இருந்தபோதும் பா.ஜ.க-வுக்கு சாதகமாகிவிடும்.

உத்தரகாண்டில் ஆளும் பா.ஜ.க-வில் ஏகப்பட்ட அதிருப்திகள். மூன்று முறை முதல்வரை மாற்றியும், கட்சிக்கு நல்ல இமேஜை உருவாக்க முடியவில்லை. பஞ்சாப்பில் பா.ஜ.க-அகாலி தளம் கூட்டணி முறிந்திருப்பது காங்கிரஸுக்கு சாதகம்தான். ஆனால், மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் அடித்துக்கொள்ளும் வேகத்தைப் பார்த்து டெல்லி தலைவர்களுக்கு நம்பிக்கை குறைகிறது. இந்த மூன்று மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸுக்குக் கிடைக்கும் வாக்குகளே, எதிர்க்கட்சிக் கூட்டணியைத் தலைமை தாங்கும் தகுதி அந்தக் கட்சிக்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும்.

சோனியா நடத்திய இதே கூட்டத்தை ராகுல் காந்தி தலைமை தாங்கி நடத்தியிருந்தால், எதிர்க்கட்சித் தலைவர்களில் எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்பது கேள்விக்குறியே! இந்தக் கூட்டத்துக்கே மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை முறையாகக் கூப்பிடவில்லை என முறைத்துக்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்கவே மறுத்தார். கடைசியில் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி அவரை சமாதானப்படுத்திப் பங்கேற்க வைத்தார்.

இன்னொரு பக்கம், ‘எதிர்க்கட்சி ஒற்றுமை’ என்று பேசிக்கொண்டே பிரதமர் நாற்காலிமீது கண் வைத்திருக்கும் இரண்டு தலைவர்கள் சரத் பவாரும் மம்தா பானர்ஜியும். இவர்களில் சரத் பவார் மகாராஷ்டிரா தாண்டித் தன் செல்வாக்கை வளர்த்துக்கொள்வது பற்றி யோசிக்கவில்லை. ஆனால், மம்தா இப்போதே அதற்குத் தயாராகி வருகிறார். மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கும் அவர், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலும் தன் திரிணாமுல் காங்கிரஸை வளர்க்க ஆசைப்படுகிறார். இதற்காக பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை செய்துவருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவர், சுஷ்மிதா தேவ். முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவின் மகள். அசாம் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சுஷ்மிதா தேவ், அங்கு காங்கிரஸ் தோற்றதால் விரக்தியில் இருந்தார். அவரை வளைத்துப் பிடித்து திரிணாமுல் காங்கிரஸில் சேர்த்துக்கொண்டார் மம்தா. இதேபோல அசாமில் அகில் கோகோய் என்ற இளம் தலைவரை வைத்துத் தன் கட்சியை வளர்க்க நினைக்கிறார் மம்தா.

டெல்லியில் இணக்கம் காட்டிவிட்டு, மாநிலங்களில் சேதம் விளைவிக்கும் இந்த அரசியலை சோனியா எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை. பா.ஜ.க அரசை எதிர்த்து செப்டம்பர் மாதத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து போராடத் திட்டமிட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியோ பா.ஜ.க-வுடன் மட்டுமல்ல, நட்புக் கட்சிகளுடனும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது.