Published:Updated:

`ரெய்டு நடவடிக்கைகள் டெஸ்ட் மேட்சைப்போல!' - எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டும் திமுக-வின் விளக்கமும்

ரெய்டு
News
ரெய்டு

தி.மு.க தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்ததைப்போல, அடுத்தடுத்து ரெய்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டாலும், நடவடிக்கைகளை விரைவுபடுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன

தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த ஏழு மாதங்களில் இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடந்திருக்கிறது. தவிர, அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவருமான சேலம் இளங்கோவன் தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடந்தது. இந்த நிலையில், 'வரிசையாக ரெய்டு நடக்கிறதே தவிர, விரைவாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆளும் தரப்பு எடுக்கவில்லை' என்கிற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்திருக்கின்றன. தவிர 'இது வெறும் கண்துடைப்புக்காகவா?' என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றன.

முன்னாள் அமைச்சர்கள், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இதுவரை ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜூலை 27-ம் தேதி, முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில்தான் முதல் ரெய்டு படலம் தொடங்கியது. மொத்தமாக, 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 25 லட்ச ரூபாய் பணம், காப்பீட்டு நிறுவனப் பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

பேட்டியளிக்கும் தங்கமணி
பேட்டியளிக்கும் தங்கமணி
நா.ராஜமுருகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து, ஆகஸ்ட் 10-ம் தேதி, முன்னாள் உள்ளாட்சித்த்துறை அமைச்சர், எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய 60 இடங்களில் சோதனை செய்யப்பட்டு, 13 லட்சம் பணம், 2 கோடி வைப்புத்தொகைக்கான ஆவணம், மாநகராட்சி டெண்டர் தொடர்பான பத்திரப்பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த வரிசையில் கடைசியாக, கடந்த 15-ம் தேதி, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்குத் தொடர்புடைய 69 இடங்களில் நடந்த ரெய்டில், ரூ. 2.16 கோடி பணம், 1.13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, வழக்கு தொடர்புடைய ஆவணங்கள், கிரிப்டோகரன்சியில் மூதலீடு செய்திருப்பது ஆகியவை கண்டறியப்பட்டிருக்கின்றன. தி.மு.க தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்ததைப்போல, அடுத்தடுத்து ரெய்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டாலும், நடவடிக்கைகளை விரைவுபடுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

மக்கள் நீதி மய்யம் கட்சி இது தொடர்பாக, ''முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடிக்கடி ரெய்டு நடக்கிறது. ரெய்டு, நீதியை நிலைநாட்டவா அல்லது அவர்களைப் பீதியில் வைத்திருக்கவா என்பதைத் தொடர் நடவடிக்கை மூலம்தான் அறிய முடியும். ஊழலால் சொத்து குவித்தோர்மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்த அரசு தன்னை நிரூபிக்க வேண்டுமென ம.நீ.ம வலியுறுத்துகிறது'' எனக் கருத்து தெரிவித்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``ரேஷன் பொருள்கள் கொள்முதலில், அதிகமான விலையில் விநியோகித்து 1,480 கோடி ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தின்மீதும், முன்னாள் அமைச்சர் காமராஜ்மீதும் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்... தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதன் காரணம் என்ன?'' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அறப்போர் இயக்கம்
அறப்போர் இயக்கம்

``ஒரு பக்கம் முன்னாள் அமைச்சர்கள்மீது ஊழல் வழக்குகள், ரெய்டுகள் என்று பரபரப்பாக இருக்கும் நிலையில், கடந்த ஆட்சியில் அதிக அளவில் ஊழல் நடைபெற்று சிக்கியிருக்கும் ரேஷன் துறையில் மட்டும் பெரும் அமைதி நிலவுகிறது. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முன்னாள் துறைச் செயலாளர் சுதா தேவி ஐ.ஏ.எஸ் இருவர் மீதும் சிறிய விசாரணைகூட நடத்தாமல் சந்தோஷமாக வைத்திருக்கின்றனர். இந்த ஊழலைச் செய்த கிறிஸ்டி நிறுவனம் தொடர்ந்து ரேஷன் டெண்டர்களில் பங்கேற்க மகிழ்ச்சியாக அனுமதி கொடுத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 'ஊழலா... ரேஷன் துறையிலா... அப்படியா?' என்ற தோரணையில் சுற்றிக்கொண்டிருக்கிறார். ரூ.2,028 கோடி ஊழல் நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களுடனும் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருக்கிறதது. ஆனால், ஊழல் செய்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஊழலை விசாரிக்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இவர்களுக்குள் என்ன டீல்?'' என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார். ``ஊழல்களைக் களைவோம், ஊழல் செய்தவர்களைக் கைது செய்வோம் என தி.மு.க தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. அதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் மிக உறுதியாகச் சொல்லியிருந்தார். அந்த வகையில், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வேக வேகமாக ரெய்டுகள் அரங்கேறின. ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இந்த அரசாங்கம் தீவிரம் காட்டுவதாகத் தெரியவில்லை. அதனால், இவர்களின் நடவடிக்கைகள் மீதான நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. நோயின் வீரியம் அதிகரிக்காமல் இருக்க, அவ்வப்போது மருந்து கொடுப்பதைப்போல, எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்கு ஆளும் கட்சியின் மீதான பயம் குறைந்துவிடாமல் இருப்பதற்கு அவ்வப்போது ரெய்டு நடத்துகிறார்களோ என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. அ.தி.மு.க வீரியமாகச் செயல்பட்டுவிடக் கூடாது என்பதற்காக வேகத்தடையாக ரெய்டைப் பயன்படுத்துகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

இன்னும் ஒருவரைக்கூட நீதிமன்றத்தில் நிறுத்தாமல் இருப்பதே இவர்களின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. உடனே, 'அதற்கான ஃபார்மாலிட்டீஸ் இருக்கிறது. உடனடியாக எதுவும் செய்ய முடியாது' என்பார்கள். ஆனால், கடைசியாக நடந்த ரெய்டில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணியை ஏன் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை என்று கேட்கவில்லை, முதலில் செய்டு செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரையே இன்னும் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லையே என்பதுதான் எங்களின் கேள்வியாக இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த உறுதியும் வேகமும் இப்போது இவர்களிடம் இல்லை. ஊடகங்கள் ஒரு முன்னாள் அமைச்சரின் ரெய்டைப் பற்றி முழுமையாகப் பேசி ஓய்ந்தவுடனேயே அடுத்த ரெய்டு நடக்கிறது. அதனால்தான் இந்த ரெய்டு நடவடிக்கைகள் நீதியை நிலைநாட்டுவதற்காக இல்லை, அவர்களைப் பீதியில் வைத்திருக்கவா என்கிற கேள்வியை எழுப்புகிறோம். அந்த எண்ணம் வராமல் இருக்க உடனடி நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறோம். அதேபோல, கடந்தகாலத்தில் முதல்வராலேயே ஊழல்வாதிகள் எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்ட செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள், இந்த அரசில் அமைச்சராக இருப்பதும் எங்களுக்குச் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது'' என்றார்.

``இவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. ஆறு மாதங்களிலேயே தி.மு.க ஆட்சி முடிந்துவிடப் போவதுமில்லை. வேண்டுமென்றே அரசைக் குறை சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் சிலர் விமர்சிக்கிறார்கள். அதேபோல, இடைவெளிவிட்டு தனித்தனியாக ரெய்டு செல்வதை விமர்சிப்பவர்கள், ஒரே நாளில் அனைவரின் வீடுகளுக்குச் சென்றாலும் விமர்சிக்கத்தான் செய்வார்கள்.''
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மேற்கண்ட விமர்சனங்கள் குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

``ஒரு ஆட்சியில் எல்லா விஷயங்களையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. சில விஷயங்களை டி-20 போல உடனடியாக அணுக வேண்டும். உதாரணமாக, கொரோனாகால நடவடிக்கைகள், நிவாரணங்கள், மழைக்கால நடவடிக்கைகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை. முடிந்தவரை எவ்வளவு சீக்கிரமாகச் செய்ய முடியுமோ, மக்களுக்கு அவற்றைச் செய்துவிட வேண்டும். அதை இந்த அரசு செய்திருக்கிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் ஏற்றுக்கொள்ளும். அதேவேளையில், தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகளை 50 ஓவர் ஆட்டம்போல அணுக வேண்டும். ரெய்டு போன்ற விஷயங்களை டெஸ்ட் மேட்சைப்போல நிதானமாகவும், அதேவேளையில், நிலைத்தன்மையுடன் வெற்றியை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதைத்தான் தற்போது அரசு செய்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா அம்மையார்மீது சுப்பிரமணியசாமி வழக்கு தொடுத்தது ஜூன் 1996. ஆனால், அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, 27 ஜூன் 1997. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கே ஒருவருடம் ஆகிவிட்டது. இத்தனைக்கும் அந்த வழக்கை விசாரணை செய்த நல்லமநாயுடு மிகவும் நேர்மையான அதிகாரியும்கூட. ஆனாலும், அவ்வளவு காலம் எடுத்தது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஆனால், அதற்கு முன்பாகவே ஜெயலலிதா அம்மையாரைக் கைதுசெய்தோம். காரணம், அவர்களின் வீட்டுக்கு ரெய்டுக்குச் செல்லும்போதே, அவர்கள் அடிப்பது, அதிகாரிகளை மிரட்டியது என அவர் சரியாக ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்பதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த மாதிரியான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அதனால், கைது நடவடிக்கைகளுக்கான தேவை எழவில்லை.
தற்போது, அரசை விமர்சிப்பவர்கள், எங்களின் நடவடிக்கைகளில் எங்கே தொய்வைக் கண்டார்கள் எனத் தெரியவில்லை. பேங்க் அக்கவுன்ட்டை எடுத்துக்கொண்டு ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பு எழுதிவிட முடியாது. வருமானத்துக்கு அதிகமாக தங்கமணி சொத்து சேர்த்திருப்பது அவர் தாக்கல் செய்த மனுவிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கான விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. சரியான வழியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அ.தி.மு.க-வில் இருக்கும்போது தலைமையின் நெருக்கடியால் தவறு செய்தவர்கள், தி.மு.க-வுக்கு வந்து நேர்மையான தலைமையின்கீழ் மக்கள் பணி செய்கிறார்கள். இங்கு தலைமை சரியாக இருப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதனால் அதுகுறித்து பயம் யாருக்கும் தேவையில்லை'' என்கிறார் அவர்.