Published:Updated:

ஓரணியில் திரளும் எதிர்கட்சிகள்.. பா.ஜ.க-வின் பலம் பெருகுவதைக் காட்டுகிறதா? - ஒரு பார்வை

மம்தா மோடி சந்திப்பு

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து அனைவரும் ஓரணியில் நின்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

ஓரணியில் திரளும் எதிர்கட்சிகள்.. பா.ஜ.க-வின் பலம் பெருகுவதைக் காட்டுகிறதா? - ஒரு பார்வை

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து அனைவரும் ஓரணியில் நின்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

Published:Updated:
மம்தா மோடி சந்திப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில நாள்களாக டெல்லியில் தங்கி மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து வருகிறார். அதன் உச்சமாகக் காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்த மம்தா பானர்ஜி அவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி “சோனியா, ராகுலைச் சந்தித்ததன் விளைவு எதிர்காலத்தில் தெரியும். பா.ஜ.க-வைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றவர் ‘கூட்டணிக்கு தலைமை ஏற்பீர்களா?’ என்ற கேள்வி. “நான் தலைவர் இல்லை. பாஜகவை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் ஒரு சாதாரணத் தொண்டர், தெருவில் இருக்கும் ஒரு சாமான்யன்” எனப் பதிலளித்திருக்கிறார். மேலும், “பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் மத்திய அரசு ஏன் மவுனமாக இருக்கிறது எனத் தெரியவில்லை. மக்கள் பிரச்னையைப் பேச வேண்டிய நேரத்தில் ஏதேதோ காரணங்களைச் சொல்லி தினமும் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். டீக்கடைகளில் மக்கள் பிரச்னைகளைப் பேச முடியாது. அதை நாடாளுமன்றத்தில் தான் விவாதிக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

மம்தா - சோனியா சந்திப்பு
மம்தா - சோனியா சந்திப்பு

மிகப்பெரிய வளர்ச்சிக்குப்பின் பெரிய வீழ்ச்சியையே அனைத்துக் கட்சிகளும் சந்தித்திருக்கின்றன. அரசியல் வரலாற்றில் அதற்கு கடந்த கால சாட்சிகள் நிறைய இருக்கின்றன. எனவே பா.ஜ.க-வும் விரைவில் தனது வீழ்ச்சியைச் சந்திக்கும் என எதிர்க்கட்சிகள் பேசி வருகிறார்கள். எதிரணிகள் ஓரணியில் திரளுவது பா.ஜ.க-வின் பலம் அதிகரித்திருக்கிறது என்பதைக் காட்டுகிறதா? அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா

“ஏழாண்டு கால பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக மக்களை அணி திரட்டும் பொறுப்பு ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு மாநிலங்களவையில்தான் பெரும்பான்மை இல்லையே தவிர மக்களவையில் மிருக பலத்தை அடைந்துவிட்டார்கள். மதத்தின் அடிப்படையில், சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ.க விதைத்த வெறுப்பு அரசியல் மூலம் கிடைத்த வாக்குகளால் பெற்ற தற்காலிக வெற்றி. அரசியலமைப்பின் அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்து ஒற்றை ஆட்சி என்று பா.ஜ.க பேசி வரும் கருத்து மீது பலருக்கும் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. 2019 மக்களவை தேர்தலில் வாக்களித்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 91 கோடி. இதில் 61 கோடி பேர் வாக்களித்தவர்கள். இதில், பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 22 கோடி (37.36%) காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 12 கோடி (19.49%). வாக்களித்த 61 கோடி வாக்காளர்களில், 39 கோடி பேர் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கவில்லை. எனவே, எதிராக இருப்பவர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தைப் போல அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும். அதற்காகவே எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் எனத் தலைவர்கள் முயன்று வருகிறார்கள். இன்றைய தேதியில் பா.ஜ.க-வின் பலம் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதிகார பலத்தை வைத்துக்கொண்டுதான் பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

கோபண்ணா
கோபண்ணா

பலம் அதிகரித்திருக்கிறது என்றால் பெகாசஸ் வைத்து உளவு பார்க்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? பா.ஜ.க பலகீனமாக இருக்கிறார்கள். மக்களிடம் அவர்களது சித்தாந்தம் எடுபடாது என்பதை பா.ஜ.க-வே புரிந்து கொண்டிருக்கிறது. 1984-ல் 414 இடங்களில் வெற்றி பெற்றோம், ஆனால் 1989-ல் தோல்வியைச் சந்தித்தோம். எனவே தற்போது இருக்கும் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு பா.ஜ.க பலமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. தேர்தல் சுழற்சியில் வீழ்ச்சி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.”

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர், செய்தித் தொடர்பாளர் பரந்தாமன்

“பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் பலமாக இருக்கும் அரசு. அவர்கள் நினைப்பதைச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக இருப்பதைக் கூட அமல்படுத்தும் அளவுக்கு உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஜனநாயகத்திற்கு எதிராக, மரபை மீறி, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலைத் தொடர்ந்து பா.ஜ.க அரசு செய்து வருவதால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ஒன்றிய அரசோடு பல முரண்கள் இருக்கின்றன. இவர்கள் எல்லாம் தனித்தனியாக நின்று குரல் கொடுப்பதைவிட ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுத்தால் அதற்கு வலிமை அதிகரிக்கும். தமிழ்நாடு முதல் மு.க.ஸ்டாலின்தான் முதன்முதலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியின் நின்று பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் எனக் குரல் கொடுத்தார். எதிரணியில் இருக்கும் 13 மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதினார். எதிர்ப்பது ஒரே நபர் எனும்போது ஒற்றைக் கருத்துடையவர்கள் எல்லாம் ஒன்றாக இருந்து எதிர்த்தால் நோக்கம் எளிதில் நிறைவேறும் அவ்வளவுதான்.

பரந்தாமன்
பரந்தாமன்

எக்காரணம் கொண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறக் கூடாது என்பதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கும் ஒவ்வொருவரும் விருப்பமாக இருக்கிறது. அதற்கு அனைவரும் ஒன்றாகக் கூட வேண்டிய கட்டாயம் தற்போது இருக்கிறது. அதற்காக பா.ஜ.க பலமாக இருக்கிறது என்றோ எதிர்க்கட்சிகள் பலமடைந்திருக்கிறார்கள் என்றோ அர்த்தம் ஆகிவிடாது.”

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

மம்தா பானர்ஜி நடத்திக்கொண்டிருப்பது பா.ஜ.க-வுக்கு எதிராக இருப்பவர்களில் யார் முதலிடத்தில் இருக்கப் போகிறோம் என்பதற்கான போட்டிதான். அவரது பேச்சுகள் அப்படித்தான் இருக்கின்றன. அசாமில் ஆட்சியைப் பிடித்திருக்கிறோம். மேற்குவங்கத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி, தமிழ்நாட்டில் நான்கு உறுப்பினர்கள், பாண்டிச்சேரியில் கூட்டணி ஆட்சி எனத் தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு பல மாநிலங்களில் கிடைத்திருக்கும் வெற்றி வெறும் அதிகார பலத்தில் கிடைத்தது இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பு. 1984-இல் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றார்கள் என்றால் அது இந்திரா காந்தி கொலையுண்டதால் கிடைத்த அனுதாப வாக்குகள். ஆனால், பா.ஜ.க கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றி என்பது நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களுக்குக் கிடைத்த பரிசு. எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது. பா.ஜ.க வளர்ந்திருக்கிறது. பலமாக இருக்கிறது என்பதைக் குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும் எனும்போது எதிர்க்கட்சிகளுக்கு ஏன் புரியவில்லை எனத் தெரியவில்லை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

2024 தேர்தலில் 300 இடங்கள் என்பது 300 அல்லது 500 என நிச்சயம் மாறும். எனவே அடுத்த 15 ஆண்டுகளுக்காவது இந்தியாவில் எதிர்க்கட்சிக்கு எந்த வேலையும் இருக்காது. எங்களுக்கான எதிரி இனி ஒருவராக மட்டுமே இருக்கப் போகிறார் என்பதால் எல்லோரும் ஓரணியில் இருப்பது பா.ஜ.க-வுக்கு மிகவும் நல்லது. மற்றபடி அவர்கள் ஓரணியில் சேருவதால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படப் போவதில்லை. மகிழ்ச்சிதான்.”