அலசல்
அரசியல்
Published:Updated:

ஓரணியில் திரண்ட 19 எதிர்க்கட்சிகள்! - பா.ஜ.க வியூகங்களை தாக்குப்பிடிக்குமா?

சோனியாகாந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
சோனியாகாந்தி

வருகிற மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே வியூகங்களை வகுத்து தயாராக வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சிந்தனையோடு செயல்பட வேண்டும்.

2024, மே மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் இப்போதே ஒன்று திரள ஆரம்பித்துள்ளன. கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைவதற்குத் தயக்கம் காட்டிய காங்கிரஸும் இப்போது ஓரணியில் கை கோத்திருப்பதால், தி.மு.க உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க-வுக்கு எதிராக பிரமாண்டமான கூட்டணியை அமைத்திருப்பதாகக் கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதேநேரம், இந்தக் கூட்டணி எத்தனை காலம் தாங்கும், பா.ஜ.க-வின் வியூகங்களைத் தாண்டித் தாக்குப்பிடிக்குமா... என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.

ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை இணையவழியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இணைய வழியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம்
இணைய வழியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம்

“வருகிற மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே வியூகங்களை வகுத்து தயாராக வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சிந்தனையோடு செயல்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வரும் ஐந்து மாநிலங்களின் பேரவைத் தேர்தல்களிலும் இதே ஒற்றுமை நீடிக்க வேண்டும்” என்று சோனியா காந்தி கேட்டுக்கொள்ள... தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். மேலும், இந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக செப்டம்பர் 20 முதல் 30 வரை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டணியில் இணைந்தது பற்றிப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், “மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிற குரல்கள் தேசத்தின் பல திசைகளிலிருந்தும் எழ ஆரம்பித்திருக்கின்றன. இதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கும் பிரசாந்த் கிஷோர், இரண்டு மாதங்களுக்கு முன்பே மம்தா, சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து ஜூன் மாதம் சரத் பவார் வீட்டில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் காங்கிரஸ் கட்சி அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும், விடாமுயற்சியாக ராகுல் காந்தியைச் சந்தித்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார் பிரசாந்த் கிஷோர். மம்தாவும் இதே கோரிக்கையை அப்போது வலியுறுத்தினார்.

ஆனாலும் காங்கிரஸ் கட்சியிடம், ‘யார் தலைமையில் கூட்டணி, இறங்கிப்போய் பேசுவதா, பிரதமர் வேட்பாளர் தொடர்பாக சர்ச்சைகள் எழுமா...’ என்றெல்லாம் தயக்கங்கள் இருந்தன. ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பா.ஜ.க-வின் யதேச்சதிகாரப் போக்கு, தானாகவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளச் செய்தது. இதையடுத்துத்தான், காங்கிரஸின் தயக்கங்கள் உடைபட்டு, மெகா கூட்டணி ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இப்போது நடந்து முடிந்த கூட்டம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல... பிரசாந்த் கிஷோருக்கும் முக்கிய ரோல் இருக்கும்’’ என்றார்கள்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம், “அடுத்த தேர்தல் வரை இந்தக் கூட்டணி நீடிக்குமா?” என்று கேட்டோம். “நிச்சயமாக நீடிக்கும். கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. பா.ஜ.க ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். எந்த சித்தாந்தம் இந்த நாட்டில் வெற்றிபெறக் கூடாது என காந்தியும் நேருவும் நினைத்தார்களோ, அந்த சித்தாந்தம் வெற்றியைப் பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அவர்களை அகற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதனாலேயே, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கிறோம். இந்த ஒற்றுமை இனிவரும் காலங்களில் மேலும் வலிமைபெறும்’’ என்றார்.

ஓரணியில் திரண்ட 19 எதிர்க்கட்சிகள்! - பா.ஜ.க வியூகங்களை தாக்குப்பிடிக்குமா?

மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனோ, “2019 நாடாளுமன்றத் தேர்தலில் சரத் பவார், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கும் பிரதமர் கனவு இருந்தது. மக்கள், பா.ஜ.க-வைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதனால், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்காக யாரும் இறங்கவில்லை. இறுதியில் பா.ஜ.க பெரும் வெற்றியைப் பெற்றது. அதேசமயம், இப்போது கைகோத்திருக்கும் இந்தக் கூட்டணியைக் கொள்கைக்கான கூட்டணியாக நான் பார்க்கவில்லை. இனிமேல் தங்களால் அரசியல் நடத்த முடியாதோ என்கிற அச்சம்தான் இவர்களை ஓரணியில் திரளவைத்திருக்கிறது’’ என்றார்.

“எதிர்க்கட்சியினரின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று சொல்லும் பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “சவாலான ஒரு காலகட்டத்தில் பிரதமர் மோடி நாட்டை வழிநடத்திவருகிறார். தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராகச் செயல்பட்டுவருகின்றன. அதில் ஓர் அங்கம்தான் இந்தக் கூட்டணியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும், அதற்கு முன்பும்கூட எதிர்க்கட்சிகள் இணைந்து, கடுமையான விமர்சனங்களை வைத்தன. அப்படியிருந்தும், 2014 நாடாளுமன்றத் தேர்தலைவிட 2019-ல் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றோம். அதனால், மோடிக்கு எதிரான இவர்களின் திட்டம் ஒருபோதும் பலிக்காது” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 32 மாதங்கள் இருக்கின்றன. அரசியலில் எதுவும் நடக்கலாம்!