Published:Updated:

அதிமுக தலைமை அலுவலக மாடலில் மேடை; திருச்சி மாநாட்டுக்குத் தயாராகும் ஓபிஎஸ் அணி!

ஓ.பி.எஸ் மாநாடு மேடை

ஓ.பி.எஸ் மாநாட்டின் மேடையானது அச்சு அசலாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் போன்ற தோற்றத்தோடு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை என்ற பெயர் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

அதிமுக தலைமை அலுவலக மாடலில் மேடை; திருச்சி மாநாட்டுக்குத் தயாராகும் ஓபிஎஸ் அணி!

ஓ.பி.எஸ் மாநாட்டின் மேடையானது அச்சு அசலாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் போன்ற தோற்றத்தோடு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை என்ற பெயர் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஓ.பி.எஸ் மாநாடு மேடை

திருச்சி, பொன்மலை ஜி கார்னரில் மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் அ.தி.மு.க 51-ம் ஆண்டு தொடக்க விழா என முப்பெரும் விழா மாநாடு ஓ.பி.எஸ் தலைமையில் நாளை மாலை (24-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இதற்காக மேடை அமைக்கும் பணி, நாற்காலிகள் போடும் பணி, மின் விளக்குகள் அமைக்கும் பணி, ஃபிளக்ஸ் பேனர் கட்டும் பணிகள் மிகவும் தீவிரமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன. 'அ.தி.மு.க-வின் கொடி மற்றும் சின்னங்களை ஓ.பி.எஸ் தரப்பு பயன்படுத்தக் கூடாது' என ஏற்கெனவே எடப்பாடி அணியினர், திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இப்படியான நிலையில், ஓ.பி.எஸ் மாநாட்டின் மேடை டிசைன் அடுத்த சர்ச்சைக்கான திரியைக் கிள்ளிப் போட்டிருக்கிறது.

ஓ.பி.எஸ் மாநாடு மேடை
ஓ.பி.எஸ் மாநாடு மேடை

நாளை நடைபெறவிருக்கும் ஓ.பி.எஸ் மாநாட்டின் மேடையானது அச்சு அசலாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் போன்ற தோற்றத்தோடு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை என்ற பெயர் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான நிலையில் மாநாடு ஏற்பாடுகளைச் செய்துவந்த ஓ.பி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது 'அ.தி.மு.க தலைமை அலுவலகத்தைப்போல் மாநாடு மேடை அமைக்கப்பட்டிருக்கிறதே!' எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப, அதற்குப் பதிலளித்த வைத்திலிங்கம், "கட்சி தலைமை அலுவலகத்தை 1987 ஜூலை 29-ம் தேதி ஜானகி அம்மாள் புரட்சித்தலைவருக்குக் கொடுத்தார்கள். அது ஜானகி அம்மாளுடைய சொத்து" என்றார். கு.ப.கிருஷ்ணனோ, "எடப்பாடி பெயரில் தலைமை அலுவலகக் கட்டடம் பதிவுசெய்யப்பட்டிருந்தால் நாங்கள் அதை மாநாட்டில் போட்டிருக்க மாட்டோம். எங்கள் தலைவரும், எங்களுடைய அண்ணியாரும் எங்களுக்குக் கொடுத்த சீதனம் இது. அ.தி.மு.க-வினுடய ஒவ்வொரு தொண்டனுக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகக் கட்டடத்திலுள்ள ஒவ்வொரு செங்கலும் சொந்தம்" என்றார்.

ஓ.பி.எஸ் மாநாடு மேடை
ஓ.பி.எஸ் மாநாடு மேடை

பொதுவாக மாநாடு நடத்தும் அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென சட்டசபை வடிவில் மாநாடு மேடையை அமைப்பார்கள். ஆனால், ஓ.பி.எஸ் தரப்போ அ.தி.மு.க என்னும் கட்சியைக் கைப்பற்றுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால், அ.தி.மு.க-வினுடைய தலைமை அலுவலகம் வடிவில் மாநாடு மேடையை அமைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.