Published:Updated:

தேனி ரூட்டை மாற்றிய ஓ.பி.எஸ்..!- அதிர்ச்சி கொடுத்ததா உசிலம்பட்டி போராட்டம்?

ஓ.பி.எஸ்., உசிலம்பட்டி வழியாக வராமல் தேனி – திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்டுரோடு வழியாக வர திட்டமிடப்படுள்ளது. இதற்கு என்ன காரணம் என விசாரித்தோம்.

Protest
Protest

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுவிட்டு இன்று அவரது சொந்த ஊரான தேனிக்கு வர இருக்கிறார். இன்று மாலை தேனியில் கூட்டுறவுத்துறையின் விழா ஒன்றில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Protest in Usilampatty
Protest in Usilampatty

இதற்காக சென்னையிலிருந்து மதுரை வந்த ஓ.பி.எஸ்., உசிலம்பட்டி வழியாக வராமல் தேனி – திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்டுரோடு வழியாக வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என விசாரித்தோம்.

ஐந்து மாவட்ட மக்களின், விவசாய நிலங்களின் ஒரே ஆதாரமாக விளங்குவது வைகை அணை. உசிலம்பட்டி பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டம் கடந்த 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம், உசிலம்பட்டி வட்டார 58 கிராமங்கள் பயன்பெறும். பல்வேறு அரசியல் காரணங்களுக்காக திட்டப்பணிகள் மிகவும் மந்தமான நிலையில் சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு விரைவுபடுத்தப்பட்ட இத்திட்டத்தால் 110 கிராமங்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு, திட்டப்பணிகளும் முடிவடைந்தது.

Protest
Protest

கூடவே, வைகை அணையிலிருந்து 58 கிராம பாசனக் கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு, வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டு, சில இடங்கள் சரி செய்யப்பட்டன. மொத்தத்தில் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது வைகை அணையில் தண்ணீர் அதிகம் இருப்பதால், 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி, உசிலம்பட்டி வட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, இன்று, உசிலம்பட்டியில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மருந்து வியாபாரிகள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர்.

 `42 ஆண்டுக்காலத் திட்டம்; ரூ.2,176 கோடி செலவு!' - 24 மணி நேரத்தில் உடைந்த கோனார் கால்வாய்

போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக இருக்கும். உசிலம்பட்டி வழியாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகிறார் என்றால், அவரிடம் முறையிட விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். விவசாயிகளைச் சந்திக்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், காட்டுரோடு வழியாக தேனிக்கு வர திட்டமிட்டுள்ளார்.

Protest
Protest

இது தொடர்பாக நம்மிடம் பேசிய 58-ம் கால்வாய் பாசன விவசாயி ஒருவர், ``ஓ.பி.எஸ் இந்த வழியாக வருகிறார் என்று காலையில் சொன்னார்கள். அவரைச் சந்தித்துப் பேச நினைத்திருந்தோம். ஆனால், எங்களை ஒரு பொருட்டாக நினைக்காமல், காட்டுரோடு வழியாக செல்ல திட்டமிட்டிருக்கிறார். உசிலம்பட்டி தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் வருகிறது. அவரின் மகன், வாக்கு கேட்கும்போது 58-ம் கால்வாய் தொடர்பாக வாக்குறுதிகள் கொடுத்தார். அதை இப்போது நினைவுபடுத்த விரும்புகிறோம். தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்துகொண்டு, விவசாயிகளின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கூட கேட்கவில்லை என்றால், என்ன அர்த்தம்? கால்வாயில் தண்ணீர் வரவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும்” என்றார் கொதிப்போடு.