Published:Updated:

அப்செட்டில் ஓ.பி.எஸ்; பதறும் தலைமைச்செயலகம்; அ.ம.மு.க-வின் `ஆபரேஷன் சவுத்'... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

முதல்வர், நான்கு நாள் பயணமாக இந்த வாரம் சேலம் செல்கிறார். அவர் திரும்புவதற்குள் கோட்டையின் மூலை முடுக்கெல்லாம் மருந்து தெளித்து சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவாரணத்தில் மல்லுக்கட்டு! அப்செட்டில் ஓ.பி.எஸ்!

கடந்த ஜூன் 1-ம் தேதி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது சொந்தத் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இதனடிப்படையில், ஐந்து கிலோ அரிசி, பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் உட்பட ரூ. 500 மதிப்பிலான பொருள்கள் அடங்கிய பை ஒன்றை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அ.தி.மு.க சார்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக, நகரப் பகுதியில் 90 சதவிகித நிவாரணப் பணிகள் முடிந்துள்ளது. ஆனால், ஊரகப் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள், தங்கள் பகுதி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த நிவாரண உதவியை வழங்கவில்லை. தி.மு.க மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகளின் வீடுகள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் அ.தி.மு.க - தி.மு.க-வினரிடையே வாக்குவாதங்கள் நடந்தன. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த சர்ச்சையால் ஓ.பி.எஸ் டோட்டல் அப்செட். பிரச்னைக்குரிய இடங்களுக்கு தனக்கு நெருக்கமான நிர்வாகிகளை அனுப்பி, அனைத்தையும் சரிசெய்ய உள்ளார். இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஒரு நிவாரணப் பையின் மதிப்பு 500 ரூபாய் என கணக்கு வைத்தாலும், 1,17,000 பைகளுக்கு கோடிகளில் கொடுக்கும் நிவாரணத்துக்கு அ.தி.மு.க கணக்கு காட்டுமா எனத் தெரியவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காமெடி இணைப்பு விழாக்கள்!

கடந்த வருடம் நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார். அ.ம.மு.க சார்பில் பள்ளபட்டியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பவர் போட்டியிட்டார். இவர், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர். சில மாதங்களுக்கு முன்பு ஷாகுல் ஹமீதை தி.மு.க-வுக்கு இழுத்துவந்தார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், ஷாகுல் ஹமீது அ.தி.மு.க-வில் இணைந்து செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இது ஒருபுறமிருக்க, கடந்த 5-ம் தேதி தி.மு.க-வைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்கள். அவர்களில் ஒருவரான வழக்கறிஞர் கந்தசாமி, அ.தி.மு.க-வில் இணைந்த மறுநாளே மறுபடியும் செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். இப்படி மாறி மாறி நடைபெறும் கட்சி இணைப்பு விழாக்களால், “இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதோ?” என்று கரூர் மக்கள் கமென்ட் அடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க-வுக்கு தாவும் மக்கள் நீதி மய்யம் பிரமுகர்!

நாடாளுமன்றத் தேர்தலில், வேலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுரேஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் முன்னிலையில் விரைவில் அ.தி.மு.க-வில் இணையவிருக்கிறார்களாம். ஊரடங்கால் இணைப்பு விழா தள்ளிப்போகிறது. மக்கள் நீதி மய்யத்தில் முக்கியப் பொறுப்பாளராக உள்ள அந்த வேட்பாளரின் தந்தை அ.தி.மு.க-வின் மாவட்ட பிரதியாக காட்பாடியில் வலம்வருகிறார். ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற தாரக மந்திரத்தை ஏற்று, அவர் அ.தி.மு.க-வுக்கு தாவுகிறார். அவருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அமைச்சர் வீரமணி மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவரது ஏற்பாட்டில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து வருபவர்களுக்கு அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது.

மப்பில் மிதக்கும் வேலூர் காக்கிகள்!

மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிட்டால் போதும், வேலூர் மாவட்ட சத்துவாச்சாரி போலீஸார் கையில் மது கோப்பையுடன்தான் வலம் வருகிறார்களாம். காவல் நிலையத்துக்கு எதிரிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால், ஓசி சரக்கை அடித்துவிட்டு, ‘தண்ணி தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’ என்று டான்ஸ் ஆடுகிறார்களாம்.

வேலூர்
வேலூர்

சில நாள்களில் சாதாரண உடையில் தடுமாறிக்கொண்டே ரோந்து வருகிறார்கள். குடியிருப்புப் பகுதியில் அமர்ந்திருக்கும் இளைஞர்களை அடித்து விரட்டுகிறார்கள். ‘சார், நீங்களே போதையில் இருக்கீங்க...’ என்று யாராவது கேட்டுவிட்டால் போதும், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார்களாம். தட்டிக்கேட்கும் மாணவர்கள், இளைஞர்கள் மீதும் பொய் வழக்குகள் பாய்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

`ஆபரேஷன் சவுத்...' களமிறங்கிய அ.ம.மு.க!

நெல்லை மாவட்டத்தில் பலமான சக்தியாக இருந்த அ.ம.மு.க -வில் இருந்து முக்கியத் தலைவர்கள் பலரும் அ.தி.மு.க-வுக்கு தாவிவிட்டதால் பலம் குறைந்துவிட்டது. இந்த நிலையில், தென்மாவட்டங்களில் மீண்டும் கட்சியைப் பலப்படுத்தும் அசைன்மென்ட்டை கட்சியின் அமைப்புச் செயலாளரான கடம்பூர் மாணிக்கராஜாவுக்கு கொடுத்திருந்தது அ.ம.மு.க தலைமை.

மாணிக்கராஜா
மாணிக்கராஜா

கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க -வில் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் அவர்களை மீண்டும் அ.ம.மு.க-வில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளார் மாணிக்கராஜா. ஆகையால், அ.தி.மு.க-வில் பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள பல பெரும் தலைகள், அ.ம.மு.க-வுக்கு தாவுவார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

``எங்க கட்சிக்காரங்களே பழிவாங்குறாங்க!'' - புலம்பும் தி.மு.க சேர்மன் குடும்பம்

கும்பகோணத்தில் தி.மு.க-வின் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் அசோக்குமார். இவரது மனைவி காயத்திரி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக இருக்கிறார். கும்பகோணம் ஊராட்சியில் கொரோனா தடுப்புப் பணிக்காக கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சமீபத்தில் சர்ச்சை வெடித்தது.

இதுகுறித்து அசோக்குமார் தனக்கு நெருக்கமானவர்களிடம், “நான் அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்தவன். ஒன்றியச் செயலாளர் என்கிற முறையில் என்னிடமும், சேர்மன் என்கிற முறையில் என் மனைவி காயத்திரியிடமும், மாவட்ட துணை அமைப்பாளரான என் மகனிடமும் தலைவர் ஸ்டாலின் சில முறை போனில் பேசியிருக்கிறார். அதை பொறுத்துக்கொள்ள முடியாத சில தி.மு.க நிர்வாகிகள், அ.தி.மு.க-வினரை தூண்டிவிட்டு ஊழல் நடைபெற்றதாக பிரச்சனை செய்கின்றனர். எனக்கு சிக்கல் ஏற்படுத்துகிறேன் என்கிற பெயரில் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்குகின்றனர். ஸ்டாலின் இதனை கவனத்தில் கொண்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று புலம்புகிறாராம்.

வேலுமணிக்கு நன்றி தெரிவித்த லாரன்ஸ்!

 ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

சென்னை அசோக் நகரில் நடிகர் லாரன்ஸ் நடத்திவரும் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு, 21 பேர் பாதிக்கப்பட்டனர். இதனைக் கேள்விப்பட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உடனடியாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் உரிய உதவிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த 18 குழந்தைகள் உட்பட 21 பேருக்கும் உடனடியாக மருத்துவ உதவிகள், சத்தான உணவுகள் அளிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் குணமடைந்து காப்பகம் திரும்பியுள்ளனர். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லாரன்ஸ் வெளியிட்டு, அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கவும், பின்னூட்டத்தில் பலரும் அரசின் துரித செயல்பாட்டை பாராட்டிவருகின்றனர்.

பதறும் தலைமைச்செயலகம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல்வரின் அலுவலகத்திலேயே ஐந்து பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், உயரதிகாரிகள் பலரும் ஆடிப்போயுள்ளனர். 50 வயதைக் கடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் தங்களது பைகள், கோப்புகளை மற்றவர்கள் சுமக்க அனுமதிப்பதில்லை. அவர்களே எடுத்துக்கொண்டு நடக்கின்றனர். தலைமைச் செயலகப் பணியாளர்கள் பலரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதை நிறுத்திவிட்டனர். மாலை 5 மணியானவுடன், விட்டால் போதுமென பணியாளர்கள் ஓட்டமும் நடையுமாக மெயின் கேட்டை நோக்கி ஓடுவது வாடிக்கையாகிவிட்டது. எல்லோரிடமும் மரண பயம் தொற்றிக்கொண்டுள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

முதல்வர், நான்கு நாள் பயணமாக இந்த வாரம் சேலம் செல்கிறார். அவர் திரும்புவதற்குள் கோட்டையின் மூலை முடுக்கெல்லாம் மருந்து தெளித்து சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 30 சதவிகித பணியாளர்களைக் கொண்டு தலைமைச் செயலகத்தை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது. ஜார்ஜ் கோட்டை கொரோனா கோட்டை ஆகாமல் இருந்தால் சரி.