Published:Updated:

``ஆங்காங்கே தலைகாட்டும் தீண்டாமை; காரணம் திமுக அரசின் அலட்சியம்'' - ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

ஓ.பன்னீர்செல்வம்

``ஒன்றுமறியா பிஞ்சு உள்ளத்தில் சாதியை விதைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இதை எண்ணும்போது மனித இனம் தலைகுனிய வேண்டும்.'' - ஓ.பன்னீர்செல்வம்

``ஆங்காங்கே தலைகாட்டும் தீண்டாமை; காரணம் திமுக அரசின் அலட்சியம்'' - ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

``ஒன்றுமறியா பிஞ்சு உள்ளத்தில் சாதியை விதைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இதை எண்ணும்போது மனித இனம் தலைகுனிய வேண்டும்.'' - ஓ.பன்னீர்செல்வம்

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்

தென்காசியில் ஊர்க்கட்டுப்பாடு விதித்து தீண்டாமை பின்பற்றுப்படுவதாக வீடியோ வெளியானது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாகக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், `` தீண்டாமை என்னும் கொடிய நோயை ஒழித்துக்கட்ட திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொரோனா காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் சாதி அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாடம் எடுக்கப்பட்டது. ஒருசில பள்ளிகளில் வருகைப் பதிவேடு, சாதி அடிப்படையில் பராமரிக்கப்பட்டது. சில பள்ளிகளில் கை, மணிக்கட்டில் கயிறு கட்டப்பட்டது. இதன் காரணமாக ஒரு மாணவன் உயிரிழந்தது எனப் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளத்தில் ஒரு சிறுவனுக்கு மிட்டாய் தர மறுத்த சம்பவம் தந்தை பெரியார் அவர்கள் பிறந்தநாள் தினத்திலிருந்து கைப்பேசிகளில் வைரலாக பரவிக்கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஒன்றுமறியா பிஞ்சு உள்ளத்தில் சாதியை விதைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இதை எண்ணும்போது மனித இனம் தலைகுனிய வேண்டும். இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்குக் கல்வி போதிப்பது மட்டுமின்றி அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும், மாணவர்களுக்கு தங்களுள் ஒற்றுமையாக செயல்படுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் பள்ளிக்கல்வித்துறையின் தலையாக கடமை. ஆனால் இது மாதிரியான நடவடிக்கைகளின் மூலம் இதைச் செய்ய திமுக அரசு தவறிவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும், தமிழ்நாட்டில் ஆங்காங்கே தலைகாட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம் திமுக அரசின் அலட்சியப் போக்கே என்று சொன்னால் அது மிகையாகாது.

பள்ளிகள்
பள்ளிகள்

`ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை அனைவரும் பின்பற்றும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால்தான் தீண்டாமை ஒழிப்பு என்பது முற்றிலும் அகற்றப்படும். இல்லையெனில் சாதி மோதல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற நிகழ்வு நாட்டுக்கு நல்லதல்ல.

தமிழக முதலமைச்சர் இதில் தனிகவனம் செலுத்தி தவறிழைத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மோதல்களைத் தவிர்க்க அறிவுரைகள் வழங்கவும், இனி வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக்கொள்ளவும் தேவையான ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.