Published:Updated:

துடிப்பாக அரசியல் செய்யும் பன்னீர், தினகரன்... எடப்பாடி முகாமின் பிளான் என்ன?!

எடப்பாடி பழனிசாமி

வெயில், மழை, பனி என நாளுக்கு நாள் மாறும் வானிலையைவிட தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வின் நிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கிறது...

துடிப்பாக அரசியல் செய்யும் பன்னீர், தினகரன்... எடப்பாடி முகாமின் பிளான் என்ன?!

வெயில், மழை, பனி என நாளுக்கு நாள் மாறும் வானிலையைவிட தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வின் நிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கிறது...

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

ஒற்றைத் தலைமை விவாகரத்துக்குப் பின்னர், முன்னாள் முதல்வர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க-வினர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம் என எடப்பாடி தரப்பு தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று வருகின்றனர். அதேபோல, நிர்வாகிகள் நியமனங்களை விறுவிறுப்பாக மேற்கொள்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. இதற்கிடையே, அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட டி.டி.வி தினகரன், தனது பங்குக்கு தீவிரமாக செயல்பட தொடங்கி இருக்கிறார்.

பன்னீர், தினகரன், எடப்பாடி
பன்னீர், தினகரன், எடப்பாடி

இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், "நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அ.தி.மு.க தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும்" என்று எடப்பாடி பேசிருந்தார். இதைத்தொடர்ந்து, ``தி.மு.க-வை வீழ்த்த எந்தவொரு மெகா கூட்டணியும் அமைக்கத் தயார்" என்று தினகரன் நேசக்கரம் நீட்டி இருந்தார். ஆனால், தினகரனுடன் கூட்டணி சேர ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை" என்று நேசக்கரத்தை ஆரம்பத்திலேயே தட்டிவிட்டு விட்டார் எடப்பாடி.

இதற்கிடையே, தனது தரப்பை வலுப்படுத்த ஓ.பி.எஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தற்போது பலன் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது என்கிறார்கள். அதாவது, தனது அணிக்கு திருப்பூர் மாவட்ட செயலாளராக நியமித்த வி.எம்.சண்முகம் 300க்கும் மேற்பட்டோரை ஓ.பி.எஸ் பக்கத்தில் சேர்த்திருக்கிறார். அதேபோல, தாராபுரம் அ.தி.மு.க நகரச் செயலாளர் டி.டி.கே.காமராஜ் உள்ளிட்டோர் ஓ.பி.எஸ் பக்கம் தாவிருக்கிறார்கள். இதையடுத்து, 'நம் தரப்பு ஆள் பிடித்து வரும் நிர்வாகிகளுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும்' என்று ஆசைகாட்டி இருக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு.

எடப்பாடி -பன்னீர்- மோடி
எடப்பாடி -பன்னீர்- மோடி

இது எடப்பாடி தரப்புக்கு தலைவலியாகி இருக்கிறது. இதனை முறியடிக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை இழுக்க எடப்பாடி தரப்பு முயல்கிறது. அதேபோல, தினகரன் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், " ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைக்கும் தவறான முடிவை டெல்லி எடுத்துவிட்டது" என்று பகீரை கிளப்பி இருக்கிறார்.

அதன்படி, ஓ.பி.எஸ்-ம், தினகரனும் தற்போது எடப்பாடிக்கு எதிராக மிக துடிப்பான அரசியலை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பொதுக்குழு தொடர்பான வழக்கில் எப்படியும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று அதீத நம்பிக்கையில் இருந்த எடப்பாடி தரப்புக்கு, விசாரணையை தள்ளி வைத்து அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து எடப்பாடி முகாமில் உள்ள சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ``சமீபகாலமாக ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடு எடப்பாடி முகாமுக்குள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். ஆனால், அது பூதாகாரமாக மாற வாய்ப்பு இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழப்பதற்கு, தென்மாவட்டங்களில் தினகரன் பிரித்த வாக்குகளே முக்கிய காரணம். அதேபோல, அந்த குடும்பத்தால் எடப்பாடி உள்பட சீனியர்களே நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால்தான் தினகரன், சசிகலாவை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் இந்த காட்சிகள் மாற வாய்ப்பு இருக்கிறது.

ஓ.பி.எஸ் நிமிடத்துக்கு நிமிடம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார். சசிகலா, தினகரனுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் இன்று அவர்களோடு கைகோர்க்கிறார். ஓ.பி.எஸ்-ஸின் இந்த நடவடிக்கை பிடிக்காமல்தான், அவரின் ஆதரவாளர்கள் சிலர் எங்கள் பக்கம் வந்துள்ளனர். கூடுதலாக சிலர் பேசியும் வருகிறார்கள். இணைப்புக்கு ஓ.பி.எஸ் பலமுறை தூதுவிட்டாலும் எடப்பாடி சேர்ப்பதாக இல்லை.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து ஆள் பிடிப்பதை தடுத்து நிறுத்த, அதிருப்தி நிர்வாகிகளுடன் பேசி வருகிறோம். அதேநேரத்தில், பா.ஜ.க-வோடு நெருக்கமாக இருப்பதை நிர்வாகிகள் விரும்பவில்லை. பா.ஜ.க-வின் கூட்டணியால்தான் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கான சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியான ராயபுரத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் இருக்கிறது. அந்த வாக்கு முறையாக கிடைக்காததால்தான் அவர் தோல்வியை சந்தித்தார். ஆனால், இதை அவர் வெளிப்படையாக எங்குமே பேசவில்லை என்றாலும், எடப்பாடியிடம் நேரடியாகவே கூறியிருக்கிறார். விழுப்புரத்தில் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காததால்தான் எனது தோல்விக்கு காரணமென்று சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

சி.வி.சண்முகம் - விழுப்புரம்
சி.வி.சண்முகம் - விழுப்புரம்
தே.சிலம்பரசன்

இந்த கருத்தைத்தான் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினும் முன்வைக்கிறார். ஆனால், வேலுமணி, தங்கமணி போன்ற இதர சீனியர்கள், தேசிய கட்சியின் ஆதரவு நமக்கு தேவை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இப்படி, ஓ.பி.எஸ், தினகரன், பா.ஜ.க-வை வைத்து மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். தற்போதைய அ.தி.மு.க-வுக்கு தேசிய அரசியலில் பெரிய விருப்பமில்லை. சட்டமன்றத் தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும்தான் இலக்கு. அதற்காக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட திட்டமிட்டு இருக்கிறார். பொதுக்குழு தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவதில்தான் எடப்பாடியின் மொத்த கவனமும் இருக்கிறது. வழக்கில் வெற்றிபெற்றலே இரட்டை இலை தானாகவே கிடைத்துவிடும். ஒருவேளை பா.ஜ.க-வுடன் மோதல் ஏற்பட்டு இரட்டை இலை முடக்கப்பட்டால், அடுத்து மூன்று ஆண்டுகளுக்கான திட்டம் எங்களிடம் தயாராக இருக்கிறது." என்றனர்.