Published:Updated:

போராட்டத்தைக் கைவிடச் சொன்ன ஓ.பி.எஸ்! - பதில் கொடுத்த தேனி இஸ்லாமிய அமைப்பினர் #CAA

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தேனி இஸ்லாமிய அமைப்பினர்களை, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்கள். தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம் உட்பட பல இடங்களில் தொடர் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுவருகின்றன.

`இடுக்கியில் கொரோனா கண்காணிப்பில் 54 பேர்..!' - அச்சத்தில் தேனி மக்கள் #corona
இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள்
இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள்

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இஸ்லாமிய அமைப்பினர்களை, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேச இருப்பதாக நேற்று (14.03.2020) மதியம் தகவல் வெளியானது.

அதன் அடிப்படையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகளை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, வருவாய்த் துறை அதிகாரிகள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் உட்பல பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களின் செல்போன்கள்
கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களின் செல்போன்கள்

சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையின் போது, பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. மேலும், கூட்டரங்கத்திற்குள் செல்போன் அனுமதிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்களின் செல்போன்களை வாங்கிக்கொண்டு போலீஸார், டோக்கன் கொடுத்தனர்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஓ.பி.எஸ்., பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார். இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகளிடம் பேசிய போது, ``துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பின் பேரில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி விளக்கிக் கூறினார்கள். `நாங்கள் என்.பி.ஆர் மட்டும் எடுப்போம். என்.ஆர்.சி’யை எடுக்க மாட்டோம். அது, சி.ஐ.ஏ உடன் இணையாது’ எனக் கூறினார்கள். `அப்படியென்றால், அது தொடர்பாக முதலில் நீங்கள் சட்டசபையில் தீர்மானம் போடுங்கள்…’ என நாங்கள் கூறினோம்.

`கைவிட்டுப்போன சின்னமனூர்; விரைவில் பெரியகுளம்?!'- உள்ளாட்சியால் அப்செட்டில் ஓ.பி.எஸ்

எங்களுடைய தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நிச்சயம் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கூறினோம். `இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். நிச்சயமாக முதலமைச்சருடன் கலந்துபேசி, அதற்காக ஆவன செய்வேன்’ என்றார் ஓ.பி.எஸ். அதனால், போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினார். `நீங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மக்களின் அச்ச உணர்வைப் போக்கும் வரை எங்கள் அறவழிப் போராட்டம் தொடரும்’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தோம்.” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு