Published:Updated:

சாரல் விழாவில் குவிந்த கோரிக்கை மனுக்கள்! - சங்கடத்தில் ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர்செவத்திடமும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடமும் கோரிக்கை மனுக்கள் குவிந்தன.

சாரல் விழா
சாரல் விழா

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் நேற்று சாரல் விழா நடைபெற்றது. விழாவில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் வருவாய், வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சுருளி அருவி கட்டண உயர்வு தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தவர்கள்
சுருளி அருவி கட்டண உயர்வு தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தவர்கள்

நிகழ்ச்சியில் பேசிய ரவீந்திரநாத்குமார், ``சின்னமனூர் முதல் சிகாக்கோ வரை மோடியைப் பற்றி பேசினேன். ஆனால், அதை திரித்துக் கூறுகிறார்கள்” என்றார். மேலும், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``அமெரிக்காவுக்குச் சென்ற ஓ.பி.ஸ் தங்கத்தமிழ்ச்செல்வன் விருது வாங்கினார்” என்றார். இருவரது பேச்சும் விழாவில் முக்கியத்துவம் பெற்றது. இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஓ.பன்னீர்செவத்திடமும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடமும் கோரிக்கை மனுக்கள் கொடுக்க பலரும் காத்திருந்தனர்.

`சைலன்ட் எடப்பாடி; கொந்தளித்த ஓ.பி.எஸ் டீம்!' - பொதுக்குழுவில் அனல்பறந்த சசிகலா விவகாரம்

சமீபத்தில் சுருளி அருவியின் நுழைவுக் கண்டன உயர்வைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு அளிக்க அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் காத்திருந்தனர். அவர்களை போலீஸார் அனுமதிக்க மறுத்தனர். அவர்களிடம் பேசியபோது, ``5 ரூபாயாக இருந்த நுழைவுக் கட்டணம் இன்று, குழந்தைகளுக்கு 20 ரூபாயாகவும் பெரியவர்களுக்கு 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

58 கிராம பாசனக் கால்வாய் விவசாயிகள்
58 கிராம பாசனக் கால்வாய் விவசாயிகள்

வெளிநாட்டவர்களாக இருந்தால் குழந்தைகளுக்கு 200 ரூபாயும், பெரியவர்களுக்கு 300 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டண உயர்வைக் குறைக்க வலியுறுத்தி துணைமுதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தோம். ஆனால், போலீஸார் எங்களை அனுமதிக்க மறுக்கின்றனர்” என்று கொதித்தனர்.

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வந்திருந்தனர். ``அமெரிக்காவிலிருந்து வந்ததும் விஷயத்தைக் கூறினோம். `முதல்வரை 30-ம் தேதி சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்' என்றார். இன்றுதான் 30-ம் தேதி. எனவே, ஓ.பி.எஸ்ஸை நேரில் சந்தித்துப் பேசவந்தோம். `விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்றார். எங்களுக்குத் தண்ணீர் வந்தால் போதும்” என்றனர் விவசாயிகள்.

சாரல் விழா
சாரல் விழா

ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார்ச்சாலைப் பணியானது நடந்துவருகிறது. அப்பணிக்கு வனத்துறை முட்டுக்கட்டை போடுவதாக குற்றம்சாட்டி, வாலிப்பாறை பகுதி கிராம மக்கள் சுமார் 50 பேர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் முறையிட வந்திருந்தனர். அவர்களிடம் பேசியபோது,``சுமார் 7 கிலோமீட்டர் சாலை அது. அதைச் சரி செய்துகொண்டிருந்தபோது, வனத்துறை பணியைத் தடுத்துவிட்டது. அரைகுறையாக நிற்கும் சாலைப் பணியினால், விபத்துகள் அதிகரிக்கின்றன. இதுதொடர்பாக கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்?” என்று நம்பிக்கை இழந்த குரலில் கூறினர்.

`ஜெயலலிதாவால் 1912-13ல் தொடங்கப்பட்டது!' - ஓ.பி.எஸ் பேச்சால் அதிர்ந்த தேனி விழா

இதேபோல, 18-ம் கால்வாய் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்பட்டது. மேலும், தனிப்பட்ட நபர்களின் கோரிக்கைகள் அடங்கிய பல மனுக்களும் கொடுக்கப்பட்டது. சுருளி அருவிக் கட்டண உயர்வுப் பிரச்னை, 58 கிராம கால்வாய் கோரிக்கை என வரிசை கட்டிய கோரிக்கை மனுக்களால் சங்கடத்தில் ஆழ்ந்தார் ஓ.பி.எஸ்.