Published:Updated:

``அதிமுக சார்பாக 10.44 கிலோ எடைகொண்ட வெள்ளிக் கவசம் வழங்குகிறேன்!" - தேவர் குருபூஜையில் ஓபிஎஸ்

தேவர் குருபூஜையில் ஓபிஎஸ்

முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10.44 கிலோ எடைகொண்ட வெள்ளிக் கவசத்தை அ.தி.மு.க சார்பில் வழங்குவதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

``அதிமுக சார்பாக 10.44 கிலோ எடைகொண்ட வெள்ளிக் கவசம் வழங்குகிறேன்!" - தேவர் குருபூஜையில் ஓபிஎஸ்

முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10.44 கிலோ எடைகொண்ட வெள்ளிக் கவசத்தை அ.தி.மு.க சார்பில் வழங்குவதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

Published:Updated:
தேவர் குருபூஜையில் ஓபிஎஸ்

முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவர் ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். அப்போது வெள்ளி ருத்ராட்சமாலையை தேவர் சிலைக்கு அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தேவர் சிலைக்கு 10.44 கிலோ எடையில், ரூ.9,11,745 மதிப்புள்ள புதிய வெள்ளிக் கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் வசம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஓ.பி.எஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``தேவர் தான் வாழ்ந்த காலத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்.

தேவர் குருபூஜை
தேவர் குருபூஜை

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குருபூஜை நாள்களில் சாற்றுவதற்காக அ.தி.மு.க சார்பில் 13 கிலோ தங்கக் கவசம் வழங்கி, அது குருபூஜை நேரத்தில் நினைவிட சிலைக்கு சாற்றுமாறும், அதற்கு பொருப்பாளர்களாக அ.தி.மு.க பொருளாளரான என்னையும், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாளையும் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படிதான் தங்கக் கவசம் சாற்றப்படுகிறது.

இந்த ஆண்டு தங்கக் கவசத்தை பெற்று வழங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தற்போது நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், காந்திமீனாளிடமும் குருபூஜைக்கு தங்கக் கவசத்தை வழங்க வேண்டும் என 25 நாள்களுக்கு முன்பே வங்கியில் கடிதத்தை வழங்கினோம். ஆனால் திண்டுக்கல் சீனிவாசன் தான் தற்காலிக அ.தி.மு.க பொருளாளர் என்று கூறி தங்கக் கவசத்தை தன்னிடம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி மாவட்ட அலுவலரிடமும், அறக்கட்டளையிடமும் தங்கக் கவசம் வழங்கப்பட்டு தேவருக்கு சாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

தேவர் குருபூஜை
தேவர் குருபூஜை

இந்த நிலையில், அ.தி.மு.க சார்பில் ஒருங்கிணைப்பாளராக 10.44 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசம் வழங்கப்பட்டிருக்கிறது. அறக்கட்டளையினர் மற்ற விஷேச நாள்களில் இந்த வெள்ளிக் கவசத்தை அணிவிக்குமாறு கூறியுள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்" எனக் கூறினார்.

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அ.தி.மு.க சார்பில் வழங்கிய தங்கக் கவசத்தை வாங்குவதில் அ.தி.மு.க-வில் எடப்பாடி-ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டிபோட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சாற்றப்பட்டிருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில், தற்போது ஓ.பி.எஸ் அ.தி.மு.க சார்பில் வழங்கப்படுவதாக வெள்ளிக் கவசம் ஒப்படைத்திருப்பது அந்தக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.