அதிமுக கட்சிக்குள் கொங்கு மண்டலத்தில் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இருக்கிறது எனச் சொல்லப்பட்டுவந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு முழுவதும் கட்சியினரிடையே பெரும் செல்வாக்கு இருப்பதை பட்டவர்த்தனமாகக் காட்டியது. குறிப்பாக, தமிழக அரசியலின் திருப்புமுனைக் களமான திருச்சி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கே முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலரும் ஆதரவாக இருக்கின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான பரஞ்சோதி திருச்சி தில்லைநகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தன்னுடைய நிலைப்பாடு குறித்து விளக்கமாகப் பேசினார்.

அவர் பேசுகையில், ``அதிமுக என்னும் இந்த இயக்கம் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நடைபெறுகின்ற இந்த திமுக ஆட்சியை அகற்ற முடியும் என்பதோடு, மீண்டும் புரட்சித்தலைவி அம்மாவினுடைய ஆட்சியைக் கொண்டுவர முடியும் என அ.தி.மு.க-வின் ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் நினைக்கின்றனர். இந்த எண்ணமும் உணர்வும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே கட்சித் தொண்டர்களிடம் உண்டாகிவிட்டது. அதனுடைய வெளிப்பாடாகத்தான் கடந்த 14-ம் தேதி தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், மொத்தமுள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் இரண்டு மாவட்டச் செயலாளர்களைத் தவிர்த்து அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என தொண்டர்களின் உணர்வுகளை அந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழ்நாடு முழுவதும் கட்சியினரிடையே ஒற்றைத் தலைமையாக எடப்பாடிதான் இருக்க வேண்டுமென ஆதரவு அலை வீசுகிறது. இதற்கிடையே தனக்குச் சுத்தமாக கட்சியினரிடையே ஆதரவு இல்லை எனத் தெரிந்துகொண்ட ஓ.பி.எஸ் நீதிமன்றத்தை நாடினார். பொதுக்குழுவை நிறுத்த வேண்டுமென காவல்துறை டி.ஜி.பி-க்கும், பொதுக்குழு நடைபெறவிருந்த மண்டபத்தின் மேலாளருக்கும் கடிதம் எழுதினார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நம்பியே ஓ.பி.எஸ் அரசியல் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், எடப்பாடியோ ஒன்றரைக் கோடி தொண்டர்களின் ஆதரவில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்” என்றார்.
தொடர்ந்தவர், “சசிகலாவை அ.தி.மு.க-விலிருந்து நீக்கிவிட்டோம். அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் தொடர்பே இல்லை. சசிகலாவோ, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க-வில் நுழைய முடியாது. இது சம்பந்தமாக பல்வேறு கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்றைக்கு தொண்டர்களுடைய நிலைப்பாடும் அதுதான். நேற்றுகூட சசிகலா ‘ஒரு திருமண மண்டபத்தில் கூடியவர்கள் எடுக்கின்ற முடிவு பெரிதில்லை’ எனச் சொல்லியிருக்கிறார். பொதுக்குழுவில் கூடிய 2,665 தலைமைக் கழக நிர்வாகிகளும் தங்களுடைய சொந்தக் கருத்தாக ஒற்றைத் தலைமையைப் பற்றிப் பேசவில்லை. ஒன்றரைக் கோடி தொண்டர்களின் உணர்வுகளுடைய வெளிப்பாடுதான் அது. தொண்டர்களின் எண்ணங்களைத்தான் பொதுக்குழுவில் பிரதிபலித்துள்ளனர். ஜூலை 11-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த எழுச்சி அலையைப் பயன்படுத்தி, இந்த அரசை வீழ்த்தி மீண்டும் புரட்சித்தலைவி அம்மாவினுடைய அரசு அமையும்” என்றார்.