Published:Updated:

கொடநாடு விவகாரம்: `பர்ஃபார்ம் பண்ண விட மாட்டேங்கிறாரே பழனிசாமி!' - ஆதரவாளர்களிடம் நொந்த பன்னீர்

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடியான செயல்பாடுகளில் பன்னீர்செல்வத்துக்கு துளியளவும் விருப்பமில்லை என்கிறார்கள், அவருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள்.

''கொடநாடு விவகாரத்துல, எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு பதற்றப்படுறாருன்னு தெரியலை. விசாரணையில இவரோட பேரைச் சொல்லியிருக்கறதா இன்னும் அதிகாரபூர்வமா தகவல் எதுவும் வரலை. பத்திரிகையில வந்த செய்தியைவெச்சு, ரெண்டு நாள் சபையைப் புறக்கணிக்கவெச்சுட்டாங்க. பட்ஜெட்டுக்கு பதில் சொல்றதுக்காக மூணு நாள் உட்கார்ந்து ரெடி பண்ணினேன். ஆனா, பேச முடியாமப் போயிடுச்சு. அவர் பேர் கெட்டுடக் கூடாதுங்கிறதைவிட நான் மக்கள் மத்தியில் பேர் வாங்கிடக் கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருக்காரு பழனிசாமி'' எனத் தன் ஆதரவாளர்களிடம் பொருமித் தள்ளியிருக்கிறார், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம்.

ஆளுநரிடம் மனு அளித்த அ.தி.மு.க நிர்வாகிகள்
ஆளுநரிடம் மனு அளித்த அ.தி.மு.க நிர்வாகிகள்

கொடநாடு விவகாரத்தை முன்னிறுத்தி கடந்த புதன்கிழமை சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் சபையைவிட்டு வெளியேறினர். தொடர்ந்து, சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பாக அமர்ந்து பதாகைகளை ஏந்தி, தி.மு.க-வுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று காலை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகிய அதிமுக முன்னணி நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றையும் அளித்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடியான செயல்பாடுகளில் பன்னீர்செல்வத்துக்குத் துளியளவும் விருப்பமில்லை என்கிறார்கள், அவருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர்,

'' புதன்கிழமை காலையில சபைக்குப் போகும்போதே `அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் சட்டையில கறுப்பு பேட்ஜ் குத்திட்டுத்தான் போகணும்’னு, செவ்வாய்க்கிழமை ராத்திரியே எடப்பாடி உத்தரவு போட்டுட்டாரு. ஆனா, பன்னீர்செல்வத்துக்கு அதுல கொஞ்சம்கூட உடன்பாடே இல்லை. நீங்க நல்லா பார்த்தீங்கன்னா தெரியும்... பன்னீர்செல்வம் சட்டையில மட்டும், கறுப்பு பேட்ஜ் இருக்காது. அவர், அதெல்லாம் குத்த முடியாதுன்னு கறாரா சொல்லிட்டாரு. அதுமட்டுமில்லை, சபையைவிட்டு வெளியில வந்து பத்திரிகையாளர்கள்கிட்ட அவர் பேசும்போதுகூட, 'பொய் வழக்கு போடுறாங்க. வாக்குறுதிய நிறைவேற்றலை. கட்சியை முடக்கப் பார்க்குறாங்க'ன்னு பொதுவாகத்தான் பேசியிருப்பாரு. அவர் வாயிலயிருந்து கொடநாடுன்னு ஒரு வார்த்தைகூட வந்திருக்காது. பின்னாடி தனக்கு எதுவும் பிரச்னை வந்துடக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்காரு. பத்திரிகையாளர்கள், கொடநாடு பத்திக் கேட்டதும் எடப்பாடிதான் பதில் சொல்லியிருப்பாரு. எடப்பாடி கொடுத்த நீண்ட விளக்கம்கூட தேவையில்லை, அப்படிங்கறதுதான் பன்னீரோட எண்ணம்.

கறுப்பு பேட்ஜ் அணியாத பன்னீர்செல்வம்
கறுப்பு பேட்ஜ் அணியாத பன்னீர்செல்வம்

ஆளுநரைப் பார்க்கக்கூட, நாம ரெண்டு பேரும் போயிட்டு வந்திடலாம்னுதான் எடப்பாடி, ஓ.பி.எஸ்-கிட்ட சொல்லியிருக்காரு. ஊடகங்கள்லகூட அப்படித்தான் நியூஸ் வந்துச்சு. ஆனா, வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வைத்திலிங்கம்னு பெரிய பட்டாளத்தோட எடப்பாடி வந்து இறங்கியிருக்காரு. அங்கே எல்லாரையும் பார்த்ததுமே ஓ.பி.எஸ் டென்ஷனாகி, `நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க’ன்னு சொல்ல, பேசி சமாதானம் பண்ணித்தான் உள்ளே கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க. அவரோட, இந்த டென்ஷனுக்கு இன்னொரு காரணமும் இருக்கு,

ஸ்ட்ராங் ஸ்டாலின்.. பதறும் எடப்பாடி & கோ! - கொடநாடு கொலை வழக்கும் சில சம்பவங்களும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில நிதியமைச்சரா இருந்தவரு பன்னீர்தான். தி.மு.க அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, பொருளாதாரரீதியா முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், தன்னோட பெயரை டேமேஜ் செஞ்சுட்டதா அவர் நினைச்சாரு. சட்டமன்றத்துல அதற்கான உரிய விளக்கத்தைக் கொடுப்பேன்னும் பத்திரிகையாளர் சந்திப்புல சொல்லியிருந்தாரு. அதுக்காக மூணு நாள் பல டேட்டாவை ரெடி பண்ணிவெச்சிருந்தாரு. ஆனா, அதுக்குள்ள கொடநாடு விவகாரத்தைக் கிளப்பி சபையைப் புறக்கணிக்கவெச்சுட்டாங்க. வேற வழியில்லாம 39 பக்க அறிக்கையா அதை வெளியிட்டுட்டாரு.

ஓ.பி.எஸ் அறிக்கை
ஓ.பி.எஸ் அறிக்கை
Senthilkumar R

`எனக்கு மக்கள் மத்தியில நல்ல பேர் கிடைச்சுடக் கூடாதுங்குறதுல பழனிசாமி ரொம்பத் தெளிவா இருக்காரு. இந்தப் பிரச்னையை இப்போ கிளப்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எனக்குப் பேர் கிடைச்சுடக் கூடாதுன்னுதான் இப்படிப் பண்ணிட்டாரு' எனப் புலம்பித் தீர்த்துட்டாரு’’ என்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வில் வேறு சிலரோ ``வேலுமணிக்குச் சொந்தமான இடங்கள்ல ரெய்டு, இப்போ கொடநாடு விவகாரத்துல பழனிசாமிக்கு நெருக்கடின்னு எல்லாத்தையும் பன்னீர் ரகசியமா ரசிச்சுக்கிட்டு இருக்கார். கட்சியைத் தங்களோட கட்டுப்பாட்டுலவெச்சிருந்த இரண்டு பேருக்கும் இனி அவங்களோட பிரச்னைகளைச் சமாளிக்கவே நேரம் சரியா இருக்கும். கட்சி ஆட்டோமேட்டிக்காக தன் கைக்கு வந்துடும்னு கணக்கு போடுறாரு பன்னீர்'' என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு