அரசு அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதன் காரணமாக, சம்பளம் கிடைக்காத ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ, மாணவியருக்குக் கல்விச் செல்வத்தை போதிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை, ஒவ்வொரு மாதமும் கடைசிப் பணி நாள் என்று அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்திருக்கிறது.

நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நீதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிவந்த லட்சக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை, கடந்த அக்டோபர் மாதம் நிலவியது. இருப்பினும், இந்தச் சிக்கல் சில நாள்களில் முழுமையாகச் சரிசெய்யப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களாகியும் இந்தப் பிரச்னை முழுமையான முடிவுக்கு வரவில்லை.
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று மாதங்களாகச் சம்பளம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தற்போது தெரியவந்திருக்கிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளைத்தான் நிறைவேற்ற முடியவில்லை என்றால், சம்பளத்தைக்கூட உரிய நேரத்தில் தர முடியாத, கையாலாகாத அரசாக தி.மு.க அரசு இருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்.
அரசு அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதன் காரணமாக சம்பளம் கிடைக்காத ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஊதியத்துக்காக இன்னும் எத்தனை நாள்கள் காத்திருக்க வேண்டுமோ... வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரித்துக்கொண்டே போகிறது என்ற அச்சம் பாதிக்கப்பட்டவர்களிடம் நிலவுகிறது.
மேற்படி நிலைமைக்குக் காரணம் பள்ளிக்கல்வித்துறைக்கும், நிதித்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான் என்று கூறப்படுகிறது. தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதற்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்த்துவைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மூன்று மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் வழங்கவும், இனி வரும் காலங்களில் இது போன்று நிலைமை ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.