Published:Updated:

``மக்கள் வடிக்கும் கண்ணீர், திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்!'' - ஓ.பி.எஸ் காட்டம்

ஓ.பி.எஸ்

``திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு மக்களை வாட்டி வதைக்கின்ற ஆட்சியை தமிழ்நாட்டில் திமுக நடத்திக் கொண்டிருக்கிறது” என ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

``மக்கள் வடிக்கும் கண்ணீர், திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்!'' - ஓ.பி.எஸ் காட்டம்

``திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு மக்களை வாட்டி வதைக்கின்ற ஆட்சியை தமிழ்நாட்டில் திமுக நடத்திக் கொண்டிருக்கிறது” என ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஓ.பி.எஸ்

ஆவினில் இனிப்பு விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இது குறித்து, ``ஆட்சியைப் பிடிப்பதற்காக நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி `சொன்னதை செய்வோம்', `செய்வதையே சொல்வோம்' என வீர வசனத்தை திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது. அதன் மூலம் ஆட்சியைப் பிடித்த திமுக `சொன்னதை செய்ய மாட்டோம்', `சொன்னதற்கு முரணாக நடப்போம்' என்ற வழியில் மக்கள் விரோத மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது நடைமுறைப்படுத்தாததோடு கூடுதல் மின் கட்டணத்தை மக்கள் மீது சுமத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரை சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும் பொருளாதாரம் மேம்படாத நிலையில், சொத்துவரி 100 விழுக்காடு, 150 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஏழை மக்கள் பசி தீர முதல் கட்டமாக 500 இடங்களில் உணவகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று இருக்கின்ற அம்மா உணவகங்களை நீர்த்துப் போக செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. திமுகவால் அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியும் முன்னுக்குப் பின் முரணாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு மக்களை வாட்டி வதைக்கின்ற ஆட்சியை தமிழ்நாட்டில் திமுக நடத்திக் கொண்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் | திமுக
முதல்வர் ஸ்டாலின் | திமுக

அந்த வகையில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டாலும், ஆவின் பொருள்களான தயிர், நெய், வெண்ணெய் ஐஸ்கிரீம் வகைகள் பன்மடங்கு உயர்த்தப்பட்டன. தீபாவளி பண்டிகை வர இருக்கின்ற இந்த தருணத்தில் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்றுதில் இருந்து இனிப்பான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கசப்பான மருந்துகளையே தொடர்ந்து மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற மக்கள் விரோத அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இனிப்பு
இனிப்பு

திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு மக்களை வஞ்சிக்கின்றது திமுக. ஆவின் பொருள்களின் விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஓராண்டு கால திமுக ஆட்சியினால் ஏழை எளிய மக்கள் விரத்தியின் விளிம்பிற்கு சென்று கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்கள். எனவே மக்களை வாட்டி வதைக்கும் செயலை கைவிட்டு விட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்'' என பதிவிட்டு இருக்கிறார்.