Published:Updated:

`200 கோடி ரூபாய் வேண்டாம்; 50 கோடி கொடுங்கள்!' - ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைக்கும் ஓ.பி.எஸ் மகன்

ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப்
ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப்

முரசொலி நாளிதழில் வெளியான செய்திக்குப் பதிலளிக்கும் விதமாக, வீடியோ வெளியிட்டுள்ளார் ஓ.பி.எஸ் மகன்.

தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது துறை சார்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன் மகன்களின் நிறுவனத்துக்கு அனுமதியளித்திருக்கிறார் என்றும், தனது அரசு இல்ல முகவரியை மகன்கள் தொழிலுக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட, அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஓ.பி.எஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் நான்கு பக்க விளக்கம் கொடுத்திருந்தார்.

`புதிய கம்பெனிகள்; வாரிசுகளுக்காக மீறப்பட்ட விதிகள்!'- வீட்டுவசதி வில்லங்கத்தில் சிக்கிய ஓ.பி.எஸ்?

தொடர்ந்து, 5.5.2010 அன்று வெளியான தி.மு.க-வின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில், திருப்பூரில் ஜெயபிரதீப்புக்குச் சொந்தமான இடம் 200 கோடி ரூபாய் மதிப்பிலானது என்றும், அங்கே வீடுகள் கட்டி, அதில், பணியாளர்களாக ரோபோக்கள் இருப்பதாகவும் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப்.

`அரசுடன் தொடர்புடைய தொழிலைச் செய்ததில்லை!’-ஓ.பி.எஸ் மீதான குற்றச்சாட்டுக்கு மகன் சொல்வதென்ன?

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

``தி.மு.க-வின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில், ஒரு செய்தி வெளியானது. நான் திருப்பூரில் தொழில் செய்யும் இடம், 200 கோடி ரூபாய் மதிப்பு என்றும், அதில் நான் வீடு கட்டி வேலைக்கு ரோபோக்களை வைத்துள்ளேன் என்றும் பொய்களைக் கூறியுள்ளார்கள். இதற்கு விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன். இதுநாள் வரை, நான் வீடு கட்டும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டதில்லை. எந்த வீடுகளையும் விற்பனை செய்ததில்லை.

அப்படி இருக்கையில், நான் வீடு கட்டி, அதில் ரோபோக்களை வேலைக்கு வைத்திருப்பதற்கு ஒரேநாளில் வீட்டுவசதித் துறையிடம் அனுமதி வாங்கியுள்ளேன் என்று மிகப்பெரிய பொய்யைக் கூறியுள்ளீர்கள். நான் வீட்டுமனைகளைப் பிரித்து இடங்களாக மட்டுமே விற்பனை செய்துவருகிறேன். நான், திருப்பூரில் உள்ள எனது இடத்தில் மூலப்பத்திரம் மற்றும் அரசிடம் வாங்கிய சான்றிதழைக் கொண்டு வருகிறேன். முரசொலி பத்திரிகையான நீங்களும், அந்தக் கட்டடத்துக்கு எப்படி ஒப்புதல் வாங்கப்பட்டது என்ற விவரத்தையும் எடுத்துக்கொண்டு வாருங்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தொழில் செய்யவும், பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் வங்கித்தவணை கட்டவும் பாரமாக உள்ளது. நீங்கள் எனது இடத்தை 200 கோடி என்று நல்ல விலைக்கு நிர்ணயம் செய்ததால், அந்த இடத்தை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். கிரையம் செய்து கொடுக்கிறேன். எனக்கு, நீங்கள் நிர்ணயித்த 200 கோடி ரூபாய் வேண்டாம். 50 கோடி கொடுங்கள். அந்த திருப்பூர் இடத்தை மட்டுமல்ல, என் சொத்து முழுவதையும் கொடுத்துவிடுகிறேன்.

அதில், என் தொழில் முன்னேற்றத்துக்காக நான் வாங்கிய கடன் போக, மீதித் தொகையை, கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். தமிழக மக்களாகப் பார்த்து, எனது வாழ்வாதாரத்துக்கு உதவிகள் செய்தால் போதும். அரசியலுக்காக இதைக் கூறவில்லை. நாளைய தினமே கிரையம் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என வீடியோவில் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு