Published:Updated:

`` 'தேனீ' இனி என்ன செய்யும் தெரியுமா?” - சட்டமன்றத்தில் மகனின் வெற்றியை மெச்சிய அப்பா!

அ.சையது அபுதாஹிர்

இனி, தேனீ என்ன செய்யும், தித்திப்பு குன்றாத தேனடையைக் கட்ட புறப்பட்டுவிடும். இனி, ஒன்றரை கோடி தொண்டர்கள் தேனீயாய் உழைத்து 2021-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை ஈட்டி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடர்கிற அதிசயத்தை, அரசியல் புரட்சியை அ.தி.மு.க நடத்திக் காட்டும்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க அணி தோல்வியைத் தழுவியது. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்தரநாத் வெற்றி பெற்றார். மக்களவையில் அ.தி.மு.க-வின் பிரதிநிதியாக அவர் மட்டுமே இப்போது இருக்கிறார்.

ஓ,பன்னீர்செல்வம்
ஓ,பன்னீர்செல்வம்

இந்நிலையில் சட்டமன்றத்தில் வீட்டுவசதி வாரிய மானியக் கோரிக்கை இன்று நடைபெற்றது. இதில் பேசிய துறையின் அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ``அ.தி.மு.க ஆட்சியின் திருஷ்டியைக் கழிக்கவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அ.தி.மு.க-வைத் தோற்கடித்துள்ளார்கள்” என்று விளக்கம் கொடுத்தார். மேலும், தன் மகனின் வெற்றியை வைத்து அ.தி.மு.க-வின் எதிர்காலத்தையும் ஒப்பிட்டு அவர் பேசியதைக் கண்டு அ.தி.மு.க-வினர் ஆச்சர்யமடைந்தனர்.

'தேனி' என்கிற தொகுதியையும், 'தேனீ'யையும் இணைத்து அவர் பேசியபோது, ``அளவுக்கதிகமாக அழகாகத் தெரியும் தன் குழந்தைக்கு, கண்பட்டுவிடக்கூடுமே என்று திருஷ்டிப் பொட்டு வைப்பது தமிழ் மண்ணில் தாய்மார்களின் வழக்கம். அதுபோலவே, 2011 சட்டமன்றத் தேர்தலிலே பிரம்மாண்ட வெற்றி, அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி எனத் தொடர்ந்து வெற்றிபெற்றதோடு, மூன்றாவது பெரிய கட்சியாக உயருமளவுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இருந்துகொண்டே ஆட்சியைத் தொடர்ந்த அரசியல் புரட்சியைப் படைத்த இயக்கம் அ.தி.மு.க. தொட்டதெல்லாம் வெற்றியாகக் கண்ட இயக்கத்துக்குத் தமிழக மக்கள் திருஷ்டி கழிப்பு நடத்தியிருப்பதுதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு” என்றார்.

`` 'தேனீ' இனி என்ன செய்யும் தெரியுமா?” - சட்டமன்றத்தில் மகனின் வெற்றியை மெச்சிய அப்பா!

மேலும், ``நாடாளுமன்றத்தில் 37 தொகுதிகளில் தோல்வியடைந்தாலும் தேனி மட்டும் வெற்றிபெற்றிருக்கிறது. தேனீ பல நாள் உழைத்து கட்டுகிற தேன்கூடு திருடப்படும்போது, தேனீ தேம்பி அழுவதில்லை; தேங்கியும் நிற்பதில்லை. காரணம், தேனீயின் கூட்டைத்தாம் திருடமுடியுமே தவிர, தேனீ கூடுகட்டும் திறமையை, உழைப்பை அதன் விஞ்ஞானத்தை யாராலும் அபகரிக்க முடியாது. அதனால்தான் அயராத உழைப்பால் கட்டிய கூடு பறிபோன உடனே, புதிய தேனடையைக் கட்டுவதற்குப் புறப்பட்டுவிடுகிறது தேனீ” என்று தேனீயின் உவமையைத் தேனி தொகுதிக்குச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

தொடர்ந்து, ``நாங்கள் போட்டியிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் எல்லாம் வெற்றிவாய்ப்பு இழந்திருந்தாலும் தேனி என்ற ஒற்றைத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறோம். இனி, தேனீ என்ன செய்யும், தித்திப்பு குன்றாத தேனடையைக் கட்டப் புறப்பட்டுவிடும். இனி, ஒன்றரைக் கோடி தொண்டர்கள் தேனீயாய் உழைத்து 2021-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை ஈட்டி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடர்கிற அதிசயத்தை, அரசியல் புரட்சியை அ.தி.மு.க நடத்திக் காட்டும்” என்றார்.

ரவீந்திரநாத், எடப்பாடி,  ஓ.பி.எஸ்.
ரவீந்திரநாத், எடப்பாடி, ஓ.பி.எஸ்.

சட்டமன்றத்தில் மகனின் வெற்றியை வைத்தே ஓ.பன்னீர்செல்வம் சாமர்த்தியமாகப் பேசிவிட்டார் என்று ஆச்சர்யப்படுகிறார்கள் அ.தி.மு.க உறுப்பினர்கள்.