Published:Updated:

`தொண்டர்களால் நாங்கள்... தொண்டர்களுக்காகவே நாங்கள்..!' - ஓ.பி.எஸ் புது கோஷம்

பி.ஆண்டனிராஜ்
எல்.ராஜேந்திரன்

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, 'மக்களால் நான்.. மக்களுக்கவே நான்!' என்ற கோஷத்தை முன்வைத்து தொண்டர்களிடம் நெருக்கம் காட்டினார். அதே வழியைப் பின்பற்றி, 'தொண்டர்களால் நாங்கள்..தொண்டர்களுக்காக நாங்கள்' என்ற புதிய கோஷத்தை முன்வைத்துப் பேசி தொண்டர்களின் ஆராவாரத்தைப் பெற்றார்.

தென்காசி விழாவில் பேசிய ஓ.பி.எஸ்
தென்காசி விழாவில் பேசிய ஓ.பி.எஸ்

அ.ம.மு.க-வில் அமைப்புச் செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

தென்காசி விழா
தென்காசி விழா

விழாவில் பேசிய துணை முதல்வரும் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ``அ.தி.மு.க ஒரு ஆலமரம். வலிமையான இந்த இயக்கத்தை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அ.தி.மு.க ஒரு வரலாற்றுக்குச் சொந்தமானது. இந்த இயக்கத்தில் மீண்டும் சேர்ந்ததன் மூலமாக நெல்லையைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்துக்கு மீண்டும் வரலாற்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் முதன்முதலாக இயக்கம் அமைக்கக் காரணமாக இருந்தது நெல்லை. இங்கு தான் முதன்முதலில் தாமரைக் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னரே அந்தக் கொடியானது அண்ணா உருவம் பொறித்ததாக மாறியது. அத்தகைய வரலாறுக்குச் சொந்தமான நெல்லையில் தொடங்கப்பட்ட இந்த தாய்க்கழகத்தில் இணையும் விழாவைப் போல தமிழகம் முழுவதுமே உள்ள மாவட்டங்களில் தொடங்கப்படும்.

விழாவில் பேசும் எடப்பாடி பழனிசாமி
விழாவில் பேசும் எடப்பாடி பழனிசாமி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொண்டர்களோடு நெருக்கமாக இருந்தவர். அதனால் சாதாரணமானவர்களையும் முதல்வராக்கி அழகுபார்த்தார். இப்போதும் இந்த இயக்கத்தில் அதே நிலைதான் உள்ளது. இங்கு யாரும் எந்தப் பொறுப்புக்கும் வர முடியும்.

அம்மாவின் வழியைப் பின்பற்றி நானும் முதல்வரும் செயல்பட்டு வருகிறோம். அதனால் தொண்டர்களால் நாங்கள், தொண்டர்களுக்காகவே நாங்கள் என்கிற கோஷத்துடன் செயல்படுவோம்" என்று பேசினார்.

தென்காசி விழா
தென்காசி விழா

விழாவின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.