Published:Updated:

`அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்!’ - வார்த்தைப் போருக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

பாஜக-வின் கே.டி.ராகவன், ``உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு...” என்று கருத்து தெரிவித்தது அதிமுக - பாஜக உறவில் விரிசல் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டியது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. எனினும், அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்தநிலையில், அதிமுக-வின் தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் சமீபகாலமாக அந்தக் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இந்தநிலையில், நேற்று கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ``அதிமுக ஆட்சி அமைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பாஜக-வுடன் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால்... அதாவது பாஜக-வுடன் கூட்டணி வைத்த காரணத்தால்தான் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக நாம் இழந்துவிட்டோம்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

`பா.ஜ.க உடனான கூட்டணியே, அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்!'  - சி.வி.சண்முகம் அதிரடி

இந்தநிலையில், `இது தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பாஜக-வின் கே.டி.ராகவன், ``உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு...” என்று கருத்து தெரிவித்தது அதிமுக - பாஜக உறவில் விரிசல் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டியது.

ட்விட்டர்
ட்விட்டர்

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் கருத்து குறித்துப் பேட்டியளித்தார் அப்போது அவர், சி.வி.சண்முகம் எந்தக் கருத்தையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும், ஒரு சாதாரண விவகாரத்தை பாஜக பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், கூட்டணியில் தொடர்வது குறித்துக் கட்சித் தலைமை முடிவு செய்யும் எனவும் கருத்து தெரிவித்தார்.

இந்தநிலையில், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க - அ.தி.மு.க உறவு தொடரும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

``பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க வார்த்தை போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு