Published:Updated:

அரசுக்குக் கோரிக்கை: 'ஓ.பி.எஸ் பாணி அறிக்கை அரசியல்' - சசிகலாவின் புதிய திட்டம் என்ன?

சசிகலா

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் விதத்தில் தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதேபாணியில், தற்போது சசிகலாவும் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறார். இதற்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

அரசுக்குக் கோரிக்கை: 'ஓ.பி.எஸ் பாணி அறிக்கை அரசியல்' - சசிகலாவின் புதிய திட்டம் என்ன?

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் விதத்தில் தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதேபாணியில், தற்போது சசிகலாவும் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறார். இதற்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

Published:Updated:
சசிகலா
அ.தி.மு.க தொண்டர்களுக்கு வாழ்த்துகளையும், வேண்டுகோளையும் கடிதம் வாயிலாகத் தெரிவித்துவந்த சசிகலா, தற்போது ஆளும் தி.மு.க அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுச் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார் சசிகலா. தொடர்ந்து பதினைந்து நாள்கள் வரை வெளியில் வராமல் இருந்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி வெளியில் வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றுவார் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் பாடுபட வேண்டும்" எனப் பேசினார். தொடர்ந்து, தேர்தலுக்கு முன்பாக, அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை உண்டாக்கினார்.

சசிகலா - தினகரன்
சசிகலா - தினகரன்

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அவரின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்தன. அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அவர் அலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகின. அதில், ``நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துடுவேன். கட்சியை மீட்பேன். கொரோனா காலம் முடியட்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வருவேன்" எனக் கட்சி நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து, சிலகாலம் அமைதியாக இருந்த சசிகலா, அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டு தொடக்கத்தையொட்டி, நான்காண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 16-ம் தேதியன்று சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் .

அதையடுத்து, அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆர் வாழ்ந்த சென்னை வீட்டில், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அ.தி.மு.க கொடியையும் ஏற்றினார். பொன்விழா ஆண்டு தொடக்கத்தையொட்டி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது. அதில், `கொடியேற்றியவர்: திருமதி வி.கே.சசிகலா, அ.தி.மு.க கழகப் பொதுச்செயலாளர்' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னையிலிருந்து அ.தி.மு.க கொடி கட்டிய காரில் தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர், 27-ம் தேதி நடைபெற்ற தினகரன் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். அதையடுத்து, 29-ம் தேதி கமுதி பசும்பொன் சென்று தேவர் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு பின்பு தஞ்சாவூர் வந்தார். தொடர்ந்து, தன் இல்லத்திலிருந்தபடி ஆதரவாளர்களைச் சந்தித்தார். இன்று தஞ்சையில் இருந்து சென்னை திரும்புகிறார். இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, என்கிற லெட்டர் பேடில் தொண்டர்களுக்கு, ``தீபாவளி வாழ்த்தையும், பொன்னாடை, பூங்கொத்துக்களைத் தவிருங்கள்'' என்கிற வேண்டுகோளையும் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று முதல்முறையாக, ஆளும்கட்சிக்குக் கோரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சசிகலா.

அறிக்கை
அறிக்கை

அதில், ''தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தேங்கி இருக்கும் நெல் மூட்டைகளைத் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயமாகும். கொரோனா காரணமாக எண்ணற்ற தொழில்கள் பாதிப்படைந்திருக்கின்றன. நாட்டின் பொருளாதாரமே, விவசாயம் அதனைச் சார்ந்த தொழில்களால்தான் இன்றைக்கு நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. நம் விவசாயிகள் எண்ணற்ற இன்னல்களைத் தாண்டி இந்த உழவுத் தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள். ஆட்சியாளர்கள் இவற்றைக் கவனத்தில்கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நெல் கொள்முதலைத் துரிதமாகச் செய்து அதற்குரிய தொகையை உடனடியாக வழங்கவேண்டும்" எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் விதத்தில் தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது சசிகலாவும் அதேபாணியில் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறார்.

இதற்குப் பின் உள்ள அரசியல் என்ன என்பது குறித்து அவரின் ஆதரவாளர்களிடம் பேசினோம், ``சின்னம்மா நிர்வாகிகள், தொண்டர்களுடன் பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியான போது, முதல் இரண்டு வாரங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், போகப்போக இந்தம்மாவுக்கு வேற வேலையில்லை என்கிற ரீதியிலேயே அது பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதைய காலகட்டம் என்பது வேறு. தற்போது காற்று சின்னம்மாவுக்கு ஆதரவாக வீசத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் சின்னம்மாவைத் தொடர்ச்சியாகப் பலர் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதிமுக-வுக்குள்ளேயே சின்னம்மாவுக்கு ஆதரவாகக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. ஏன், கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களே சின்னம்மாவுக்கு ஆதரவாக வரத் தயாராக இருக்கின்றனர். எல்லோருமே ஒரு தருணத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது கைகூடும் நாள் தூரத்தில் இல்லை. இவையெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி எந்தவொரு நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபடாமல் ஒதுங்கியே இருக்கிறார். ஒருவேளை, ஆளும் கட்சிக்கு எதிராகத் தீவிரமான அரசியலை முன்னெடுத்தால், வழக்குகளில் சிக்க வைத்துவிடுவார்களோ என அச்சப்படுகிறார். இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனச் சின்னம்மா நினைக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா.
எடப்பாடி பழனிசாமி - சசிகலா.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக ஆளும் கட்சியின் தவறுகளைச் சுட்டிக் காட்டத் தொடங்கியிருக்கிறார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்னைகள், உரிமைப் பிரச்னைகள் தொடர்பாக இனி இதுபோன்ற அறிக்கைகளை நீங்கள் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். அதிமுகவில் ஏற்கெனவே, ஓ.பி.எஸ் தனியாக அறிக்கைகள் வெளியிட்டு வருவதால், தொண்டர்கள் யாரும் இதைத் தவறாக நினைக்கப் போவதில்லை. சின்னம்மாவின் ஆதரவாளர்களுக்கு இது கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கும். அவரை விரும்பாதவர்களைக் கூட யோசிக்கவைக்கும். காரணம், சின்னம்மா இனி ஆளும் கட்சியை எதிர்த்து தீவிர அரசியல் செய்யப்போகிறார் . தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்வதை எந்தவொரு அ.தி.மு.க தொண்டனும் வரவேற்கத்தான் செய்வான். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க கண்டிப்பாகத் தோல்வியைத்தான் தழுவும். ரெய்டுக்குப் பயந்து முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் யாரும் பணத்தை வெளியில் எடுக்க மாட்டார்கள். அதைத் தி.மு.க பயன்படுத்திக்கொண்டு மாபெரும் வெற்றியைப் பெறும். அப்போது, கட்சித் தலைமைமீது தொண்டர்களுக்கு இன்னும் அதிருப்தி உண்டாகும். அ.தி.மு.க-வை மீட்கச் சின்னம்மாவால்தான் முடியும் என்கிற ஒருமித்த கருத்து உண்டாகும். அந்தத் தருணத்துக்காகத்தான் சின்னம்மா காத்துக்கொண்டிருக்கிறார்" என்கிறார்கள் நம்பிக்கையோடு.